Last Updated : 17 Aug, 2018 11:07 AM

 

Published : 17 Aug 2018 11:07 AM
Last Updated : 17 Aug 2018 11:07 AM

இளமை .நெட்: கொஞ்சம் விளையாட்டு கொஞ்சம் கண்டுபிடிப்பு!

மொபைல் விளையாட்டு என்றாலே நேரத்தை வீணடிக்கும் வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.  வழக்கமான விளையாட்டுகளாக அல்லாமல் ஆக்கப்பூர்வமான விளையாட்டுகளும் இருக்கின்றன. அந்த வகையில் ஆய்வு நோக்கில் உருவாக்கப்பட்டது ‘கடல் நாயகன் வேட்கை’ என்ற ‘ஸீ ஹீரோ குவெஸ்ட்’ (Sea Hero Quest) விளையாட்டு.

இதுவரை 40 லட்சம் முறைக்கு மேல் விளையாடப்பட்டுள்ள இந்த விளையாட்டை நீங்களும் விளையாடலாம். இதற்காக செலவிட வேண்டியது இரண்டே நிமிடங்கள்தான். அந்த இரண்டு நிமிடங்களும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும் என்பதோடு, விளையாட்டு ஆய்வாளர்களுக்கான தரவுகளாகவும் அது அமையும் என்பதுதான் இந்த விளையாட்டின் சிறப்பு.

ஆம், இந்த விளையாட்டு ‘டிமென்ஷியா’ எனப்படும் ஞாபக மறதி கோளாறு தொடர்பான புரிதலை அதிகமாக்கிக் கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஹார்ன்பர்கர், டாக்டர் ஹியூகோ ஸ்பயர்ஸ் ஆகியோர் அடங்கிய குழுவால் 3டி வடிவில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடி விளையாட்டு

நடுக்கடலில் மாலுமி ஒருவரின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு மறதிக் கோளாறால் அவதிப்படும் அவரது தந்தையின் நினைவுத்திறனை மீட்க உதவ வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கம். இதற்கு உதவக்கூடிய பழைய இதழ் ஒன்றை தேடிச் செல்ல வேண்டும். இந்தப் பயணத்தில் வழிகாட்டுவதற்காக முக்கிய இடங்கள் அடங்கிய வரைப்படம் ஒன்று தொடக்கத்தில் காட்டப்படும். அதில் உள்ள இடங்களை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, கப்பலில் ஏறி பயணத்தைத் தொடங்க வேண்டும்.

‘நேவிகேஷன்’ எனச் சொல்லப்படும் வழிகண்டறிதல்தான் இந்த விளையாட்டின் மையம். ஒவ்வோர் இடமாகக் கண்டறிந்து செல்லும்போது பயனாளிகள் என்ன செய்கின்றனர், இடையே வழி மறந்துவிட்டால் எப்படி சமாளிக்கின்றனர் என்பது போன்ற தகவல்களைச் சேகரிப்பதே முக்கிய நோக்கம்.

மறதிக்கான ஆய்வு

மறதி கோளாறை கண்டறிவதற்கான பரிசோதனையை உருவாக்க இந்தத் தகவல்கள் உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வயதானவர்களைத் தாக்கும் அல்சைமர்ஸ் உள்ளிட்ட நோய்கள் மறதி கோளாறின் கீழ் வகைப்படுத்தப் படுகின்றன. இந்த நோய்களுக்கான சிகிச்சை சவாலானது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்களும் புரியாத புதிர்தான்.

இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளை கண்டறிய வேண்டும் என்றால், மறதிக் கோளாறு எப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான தரவுகளைதான் இந்த விளையாட்டு மூலம் திரட்டுகிறார்கள். உடனே இந்த விளையாட்டை மறதிக் கோளாறுக்கான சோதனை என நினைக்க வேண்டாம். ஆரோக்கியமான மனது, வழி கண்டறியும் சூழலை எப்படி எதிர்கொள்கிறது என்பதை தெரிந்துகொள்வதே இதன் நோக்கம்.

சேகரிக்கப்படும் தகவல்கள்

நிஜ வாழ்க்கையில் பார்த்தால், வழி கண்டறிதல் என்பது முக்கிய வாழ்வியல் திறனாக இருக்கிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல மனிதர்கள் இடம் சார்ந்த நினைவுக் குறிப்புகளை மனத்தில் சேமித்து வைத்திருக்கின்றனர். வழி தவறும்போது அல்லது புதிய இடத்தை எதிர்கொள்ளும்போது, வழி கண்டறிதல் இயல்பாகக் கைகொடுக்கிறது. ஆனால், இந்தத் திறன் பாதிக்கப்படுவது எப்போது தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்வது ஆய்வாளர்களுக்கு அவசியம்.

கடலில் உலவும் மொபைல் விளையாட்டில் ஒவ்வொருவரும் செயல்படும் விதத்தை வைத்து, நினைவுத்திறன், மறதியை எதிர்கொள்ளும் திறன் குறித்த முக்கிய அம்சங்களை ஆய்வாளர்கள் திரட்டிவருகின்றனர். உதாரணமாக 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குறிப்பிட்ட சூழலை எப்படி எதிர்கொள்கிறார், இளம் வயதுக்காரர் எப்படி இடத்தைக் கண்டறிகிறார் என்பது போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. தவிர புவியியல் பரப்பைச் சார்ந்த தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

ஆய்வு முடிவுகள்

இதுவரை திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு பொதுவாகப் பெண்களைவிட ஆண்கள் வழிகண்டறிதல் திறன் பெற்றவர்களாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால், இதற்கும் பாலினம் சார்ந்த திறனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிஜத்தில் நிலவும் சூழலும் வாய்ப்புகளுமே இதைத் தீர்மானிப்பதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. மேலும் நார்டிக் நாடுகளின் கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடல் வழி கண்டறிதலில் சிறந்து விளங்குவதும் தெரியவந்துள்ளது. கடல் பயணத்தில் சிறந்து விளங்கிய வைக்கிங் வம்சத்திலிருந்து அவர்கள் வந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்த விளையாட்டு இப்போது, ‘வெர்சுவல்’ தன்மையோடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு தொடர்பான தகவல்களை அளிக்கும் இணையதளமே (http://www.seaheroquest.com/site/en) ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பனிப்பாறைகள் மிதக்கும் ஆழ்கடல் பரப்பு கொண்ட முகப்பு பக்கத்துடன் இந்தத் தளம் வரவேற்கிறது. மொபைல், வெர்சுவல் சாதனங்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x