Published : 29 Jul 2018 09:38 AM
Last Updated : 29 Jul 2018 09:38 AM

முகம் நூறு: பழமையும் நல்லதே

சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தினால் துணியில் கறைபடாது, நீண்ட நேரம் பயன்படுத்த முடியும், மாதவிடாயின்போதும் நிம்மதியாக இருக்கலாம் என்பது போன்ற கருத்துகள் திரும்பத் திரும்ப விளம்பரங்களில் சொல்லப்படுகின்றன. பிளாஸ்டிக்கையும் ரசாயனங்களையும் கொண்டு தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி, கருப்பை சம்பந்தமான பிரச்சினைகளையும் சுற்றுச் சூழல் கேட்டையும் அந்த விளம்பரங்கள் ஒருபோதும் சொல்ல முன்வருவதில்லை.

வெள்ளை நிறத்தைச் சுத்தத்தின் அடையாளம் என நாம் கருதுவதால், வெள்ளை நிறத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களும் உடல்நலனுக்கு உகந்தது என நம்புகிறோம். ஆனால், நிஜத்தில் சானிட்டரி நாப்கின்கள் வெண்மையாக இருப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் அவற்றில் 90 சதவீதம் பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது.

அதிகப்படியான உதிரப்போக்கை உறிஞ்சுவதற்கு ஜெல் பயன்படுத்தப்படுகிறது. பல ரசாயனங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களால் பிறப்புறுப்புப் பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் கருப்பைவாய் புற்றுநோய் வருவதற்கும் சாத்தியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்

சானிட்டரி நாப்கின்கள் மக்குவதற்கு ஐநூறு ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் மட்டும் மாதத்துக்கு நாற்பது கோடிக்கும் மேலான சானிட்டரி நாப்கின்கள் பயன் படுத்தப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் போல சானிட்டரி நாப்கின்களும் அதன் கழிவுகளும் மிகுந்த அச்சுறுத்தலாக மாறிவருகின்றன. இந்நிலையில், சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாகப் பருத்தி துணிகளைக் கொண்டு துணி நாப்கின்களை புதுச்சேரி ஆரோவில் கிராமத்தில் உள்ள எக்கோஃபெம் (Ecofemm) அமைப்பினர் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேத்தி வால்கிலிங், ஜெஸமாஜின் ஆகியோர் இந்த அமைப்பைத் தொடங்கினர். தற்போது அந்த அமைப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயல்படுகிறார்கள்.

பயணம் கொடுத்த தீர்வு

“ஆஸ்திரேலியாவிலிருந்து ஆரோவில் கிராமத்தில் நான் குடியேறியபோது சானிட்டரி நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வழியில்லை. இதற்காக நான் தங்கியிருந்த இடத்தின் அருகில் ஒரு பள்ளத்தைத் தோண்டி அதில் நாப்கின்களைப் போட்டு எரிப்போம். இது எனக்கும் மிகுந்த அலுப்பையும் சோர்வையும் ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் பொதுக்கழிப்பிடங்களில் கூட சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்தத் தனி குப்பைத் தொட்டி வைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்தியாவில் அப்படி இல்லாதது எனக்கு வருத்தமளித்தது. இதை எப்படி மாற்றலாம் என யோசித்தேன்.

நியூசிலாந்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே துணி நாப்கின்கள் இருப்பதைப் பார்த்தேன். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் துணி நாப்கின்களால் உடலுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. மேலும், அதை நாம் துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் விஷயமாக உள்ளது. என்னுள் எழுந்த கேள்விக்கு நியூசிலாந்து பயணம் எனக்கு விடையை அளித்தது. ஆரோவில்லுக்குத் திரும்பி வந்து உடனேயே துணி நாப்கின்களைத் தயாரிக்கத் தொடங்கினேன்” என்கிறார் கேத்தி.

முதலில் தனக்காக மட்டுமே துணி நாப்கின்களை கேத்தி தயாரித்தார். அதன் பிறகு, ஆரோவில் கிராம செயற்குழுவுடன் இணைந்து துணி நாப்கின்களைக் கிராமப்புறப் பெண்களிடம் கொண்டு சென்றார். அதற்காக ஜெஸமாஜின்னுடன் கைகோத்துச் செயல்படத் தொடங்கியுள்ளார். அதற்குக் கிடைத்த வரவேற்பால் 2010-ல் மேலும் பல பெண்கள் இணைந்து எக்கோ பெம் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.

துணி நாப்கின்களைத் தயாரிப்பதோடு அருகில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவி களுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வையும் துணி நாப்கின்களையும் Pad for Pad என்ற திட்டத்தின் மூலமாக இலவசமாக வழங்குகின்றனர். 200-க்கும் மேலான மாணவிகள் இந்தத் திட்டத்தின் மூலம் இன்று பயனடைகின்றனர்.

துணி நாப்கின்களின் பலவகை

துணியை நாப்கின்களாகப் பயன்படுத்துவது பழைய முறைதான். துணி விலகிவிடுமோ என்ற அச்சமும் ஈரத்தால் ஏற்படும் அசௌகரியமும் பெண்களுக்கு ஏற்படுவதையும் அப்போது தவிர்க்க இயலாமல் இருந்தது.

மாதவிடாய் நாட்கள், பெண்களை வீட்டுக்குள் அன்று முடக்கின. ஆனால், எக்கோஃபெம் தயாரிக்கும் துணி நாப்கின்கள் (cloth pad) விலகாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பருத்தித் துணிகள் பல அடுக்குகளாக அதனுள் வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்பகுதியில் மெல்லிய பிளாஸ்டிக் இழை பொருத்தப்பட்டுள்ளது. இதனால் உதிரப்போக்கு அதிகமான நாட்களிலும் ஈரத்தால் ஏற்படும் அசௌகரிய உணர்வின்றிப் பயன்படுத்த முடியும்.

சானிட்டரி நாப்கின்களுக்கு மாதந்தோறும் செலவு செய்யும் தொகையைக் கணக்கிட்டால் துணி நாப்கின்களின் விலை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது. இவர்கள் தயாரிக்கும் துணி நாப்கின்களில் இரண்டு வகைகள் உள்ளன. உதிரப்போக்கு அதிகமாக உள்ள நாட்களுக்காக அடர்த்தி மிகுந்த துணி நாப்கின்களும் உதிரப்போக்கு குறைவாக உள்ள நாட்களுக்காக அடர்த்தி குறைவான துணி நாப்கின்களும் தயாரிக்கப்படுகின்றன.

சாதனைப் பெண்கள்

“ஒரு துணி நாப்கினை ஐந்து ஆண்டுகள் பயன்படுத்த முடியும். இயற்கையான முறையிலேயே துணி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. துணிகளுக்கு இயற்கைச் சாயத்தாலேயே வண்ணம் கொடுக்கப்படுகிறது. இந்த நாப்கின்களைத் தைப்பதற்கு பிரத்தியேக முறையைக் கையாள்கிறோம். இதில் ஆரோவில் கிராமத்தில் உள்ள இரண்டு மகளிர் சுயவுதவிக் குழுவினரும் பெங்களூருவில் உள்ள மகளிர் சுயவுதவிக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். துணி நாப்கினைத் தயாரிப்பது முதல் அதை ஆன்லைன் வழியாகச் சந்தைப்படுத்துவது வரை அனைத்து வேலைகளையும் எக்கோஃபெம் அமைப்பில் உள்ள பெண்களே செய்கின்றனர்” என்று அந்த அமைப்பின் விற்பனை அதிகாரியான ‘கல்வி’ சொல்கிறார்.

இந்தத் துணி நாப்கின் தற்போது 24 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆன்லைன் மூலமாகவும் பசுமை அங்காடிகள் மூலமாகவும் இந்தத் துணி நாப்கின் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லட்சத்து அறுபதாயிரம் துணி நாப்கின்களைக் கடந்த ஆண்டு மட்டும் இந்த அமைப்பினர் விற்பனை செய்துள்ளனர். “துணி நாப்கின்களுக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் தற்போது பல பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தைத் தொடங்கியபோது, பாட்டி காலத்தில் பயன்படுத்தப்பட்ட துணி நாப்கின் நமக்கேன் என்று பெண்கள் கேட்டனர். இன்றோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

துணி நாப்கின்களால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் துணி நாப்கின் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. நாங்கள் அதில் சில மாற்றங்களை மட்டும் சேர்த்து, அதன் பயனை அதிகரித்துள்ளோம். இன்றைய தலைமுறைப் பெண்களுக்குத் துணி நாப்கின்களுக்கு மாறுவதில் சிரமம் இல்லாத வகையில் அதை நாங்கள் வடிவமைத்துள்ளோம்” என்கிறார் கேத்தி. இவரின் அடுத்த இலக்கு குழந்தைகளுக்கான டயபர்களை இயற்கையான முறையில் தயாரிப்பது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x