Published : 23 Jul 2018 11:04 AM
Last Updated : 23 Jul 2018 11:04 AM

இந்திய சாலைகளில் பிஎம்டபிள்யூ பைக்

பிஎம்டபிள்யூ மோட்டாராட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொடங்கியது. இந்திய சாலைகளில் பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனங்கள் பறக்க வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. இதற்காக உள்நாட்டு கூட்டாளியாக டிவிஎஸ் நிறுவனத்தை இணைத்துக் கொண்டது. சில ஆண்டுகள் முயற்சிகளுக்கு பின்னர்  இப்போது அந்த இலக்கினை பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் எட்டிவிட்டது.

இந்திய சாலைகளுக்கு ஏற்ப உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மாடல்களை கடந்த வாரத்தில் இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் தனது கணக்கினை தொடங்கி விட்டது.

குர்காவ்னில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் என்கிற மாடல் ஸ்போர்ட்ஸ் விரும்பிகளையும்,  ஜி310ஜிஎஸ் மாடல் அட்வெஞ்சர் விரும்பிகளையும் ஈர்க்கும். ஜி 310 ஆர் மாடலின் விலை ரூ.2.99 லட்சம், ஜி310 ஜிஎஸ் மாடலின் விலை ரூ.3.49 லட்சம் ஆகும்.

500 சிசிக்கு உள்பட்ட மோட்டார் சைக்கிள் சந்தையில் ஏற்கெனவே உள்ள பிற நிறுவன மாடல்களுக்கு போட்டியை அளிக்கும் விதமாக இந்த வரவுகள் அமையும்.

குறிப்பாக மிக சமீபத்தில்தான் டிவிஎஸ் நிறுவனம் 310 சிசி அப்பாச்சி மாடலை அறிமுகம் செய்துள்ளது. கேடிஎம் 390 டியுக் மாடலுக்கு போட்டியாக இது அமையலாம். தவிர விரைவில் அறிமுகமாகவுள்ள கேடிஎம் 390 அட்வெஞ்சர் மாடலுக்கு போட்டியாகவும் பிஎம்டபிள்யூ மாடல்கள் அமையலாம். கேடிஎம் பைக்குகள், அப்பாச்சி போன்றவை பிஎம்டபிள்யூ பைக்குகளை விட விலை குறைவானதுதான். ஆனால் தரம் மற்றும் பிராண்ட் மதிப்பு அடிப்படையில் ஜி 310 மாடல்கள் சந்தையை ஈர்க்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் மூன்று வருட அன்லிமிடெட் மைலேஜ் வாரண்டியினை பிஎம்டபிள்யூ மோட்டாராட் வழங்க உள்ளது.

மோட்டார் சைக்கிள்களை விரைவாக சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்ப கடந்த சில மாதங்களாகவே  டீலர் ஷிப் கட்டமைப்பினையும் உருவாக்கிவந்தது. தற்போது டீலர்கள் வசம் மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி இருக்கும். புக்கிங் செய்துவிட்டு காத்திருப்பதற்கான சூழல் இருக்காது என்று நிறுவனம் கூறியுள்ளது.

பிஎம்டபிள்யூ- டிவிஎஸ் கூட்டணியில் முதலில் வெளிவந்துள்ள இரண்டு மாடல்களும் 313 சிசி திறன் கொண்டவை. லிக்விட் கூல்ட்ஸ் ஒற்றை இன்ஜினை கொண்டதாகும். 6 ஸ்பீடுகியர் கொண்டுள்ளது.

அதிகபட்ச டார்க் பவர் 28 ஆகும். மைலேஜ் 30 கிலோமீட்டர் என நிறுவனம் கூறியுள்ளது.இரண்டு மாடல்களிலும் ஸ்டீல் டியூப் சேசிஸ் உள்ளது. 41 எம் எம் பிரண்ட் போர்க், மற்றும் ரியர் மோனோஷாக் தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்கை உருவாக்க டிவிஎஸ் நிறுவனத்துடன் 2013-ம் ஆண்டில் கூட்டணி உருவானது. பிஎம்டபிள்யூ வடிவமைப்பில் ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில் இந்த  உற்பத்தி செய்ய ஒப்பந்தமானது. உள்ளூர் உதிரிபாகங்களைக் கொண்டு இந்திய சாலைகளுக்கு ஏற்ப வடிவமைத்துள்ளதுதான் இதன் சிறப்பாகும்.

தற்போது முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 9 டீலர்களை நியமித்துள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங் தொகை ரூ.50,000 ஆகும்.  டிவிஎஸ் நிறுவனம் தயாரித்தாலும் பிஎம்டபிள்யூ மாடல் வேறுபட்டதாகவே இருக்கும். இதற்கான முழு வடிவமைப்பினையும் பிஎம்டபிள்யூ மேற்கொள்கிறது. ஏற்றுமதி சந்தைக்கும் ஓசூர் ஆலையை பயன்படுத்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. எங்களது இலக்கு புதிய வாடிக்கையாளர்கள்தான். அவர்களை கவர வேண்டும் என்று பிஎம்டபிள்யூ இந்தியா குழுமத்தின் தலைவர் விக்ரம் பாவா கூறியுள்ளார்.

குழுமத்தின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான தலைவர் டிமிரிட்ஸ் ரப்டிஸ் கூறுகையில், பிராண்ட் மதிப்பை விரும்புபவர்களுக்கு பிஎம்டபிள்யூ சிறந்த தேர்வு என்று குறிப்பிட்டுள்ளார். முதல் 1,000 கிலோமீட்டரில் முதல் சர்வீஸ் செய்வதற்கு நிறுவனம் பரிந்துரைக்கிறது. பிஎம்டபிள்யூ மோட்டோரோட் நிறுவனத்துக்கும் இது பரிசோதனை காலம்தான். பைக்குகள் முதல் 1,000 கிலோ மீட்டருக்குள் வாடிக்கையாளர்களை கவர்ந்து விட்டால்  ஏற்றம் நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x