

காஷ்மீரின் முதல் பின்னணிப் பெண் பாடகரானா ராஜ் பேகம் இறந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் ‘சாங் ஆஃப் பாரடைஸ்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் அவர் உயிர்பெற்றிருக்கிறார். இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 200 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு ராஜ் பேகத்தின் பெருமையையும் திறமையையும் பறைசாற்றிவருகிறது. ‘ஹாஃப் விடோ’, ‘தி இல்லீகல்’ படங்களை இயக்கிய காஷ்மீர் இயக்குநர் டேனிஷ் ரென்சு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
கனவு காண்பதே பெரும் தவறு என வஞ்சிக்கப்பட்ட நிலையில் தன் இசைக் கனவைச் சுமந்தவர் ராஜ் பேகம். காஷ்மீரத்து வானொலியில் ஒலித்த முதல் பெண் குரலும் அவருடையதுதான். உணர்வு பூர்வமாகவும் கலாச்சாரரீதியாகவும் பெண்கள் அடக்கிவைக்கப்பட்ட சமூகத்தில் அந்தக் கட்டுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து தன் தடத்தைப் பதித்தவர் அவர்.