

கேப்டன் விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சூப்பர் ஆக்டர் சூர்யா, தல அஜித், தளபதி விஜய், பெர்ஃபெக்ஷனிஸ்ட் ஆமீர் கான், கில்லாடி ஆஃப் பாலிவுட் அக்ஷய் குமார், பாய்ஜான் என்று அழைக்கப்படும் சல்மான் கான் தற்போது சிவகார்த்திகேயன் என மாஸ் ஹீரோக்களுக்கு மாஸ் வெற்றியைக் கொடுப்பதில் சொல்லி அடிப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது ‘ரமணா’வையும் ‘ஏழாம் அறி’வையும் ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுகிறார்கள். வரிசையாக மூன்று வெற்றிகளைக் கொடுத்தவகையில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்க்கு ரொம்பவே ஸ்பெஷல்! ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்க்கார்’ உருவான நாள்களில் விஜயுடனான தருணங்களை இங்கே பதிவு செய்திருக்கிறார்:
“‘துப்பாக்கி’ படத்தில் விஜய் சார் ஏற்ற ஜெகதீஷ் தனபால் என்கிற ராணுவ டி.ஐ.ஏ. சிறப்புப் புலனாய்வு அதிகாரி கேரக்டர் அவருக்கு அவுட்அண்ட் அவுட் புதிதாக இருந்தது. அதற்குக் காரணம், துப்பாக்கியின் திரைக்கதையை நான் விஜய் சாருக் காக எழுதவில்லை. ஆனால், அந்தக் கதாபாத்திரமும் மும்பைக் கதைக் களமும் அவருக்கு அற்புதமாகப் பொருந்தியது. இது எதிர்பாராமல் அமைந்த ஒன்றுதான்!