Published : 28 Jul 2018 10:55 AM
Last Updated : 28 Jul 2018 10:55 AM

கலைடாஸ்கோப் 12: தியாகராஜருக்கு ஒரு நவீன அஞ்சலி

சாஸ்திரீய இசைப் பாணியை, இன்றைய தலைமுறை ரசிப்பதுபோலத் தர முடியுமா? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் முயற்சியாக உருவானதுதான் 'ஸ்டாக்டோ' பேண்ட்.

தியாகராஜரின் 250-வது பிறந்த ஆண்டு இது. தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பிரசித்தம். அதேநேரம், நாட்டிய நாடகத்துக்கான கீர்த்தனைகளையும் அவர் இயற்றியிருக்கிறார். அவற்றில் ஒன்று 'நௌகா சரித்தம்'. யமுனை ஆற்றில் கிருஷ்ணரும் கோபிகைகளும் படகுப் பயணம் சென்றதை விவரிக்கும் இசை நாட்டிய நாடகம் இது. இந்த நாடகத்தில் கிருஷ்ணரின் லீலைகளை விவரித்துள்ள அதேநேரம், கிருஷ்ணரிடம் சரணாகதி அடைவதற்கான ஒரு வழியாகவே இதையும் தியாகராஜர் கருதியுள்ளார்.

நௌகா என்றால் அழகு நிறைந்த படகு என்று அர்த்தம். படகில் செல்லும்போது கோபிகைகள் கிருஷ்ணரைக் கிண்டல் செய்கிறனர். இதனால் கோபமடைந்த கிருஷ்ணர், திருவிளையாடல் புரிந்து, பெரும் இடி மழையை உருவாக்கி, படகு மூழ்கும் நிலைக்கே இட்டுச் சென்றுவிடுகிறார். பிறகு என்ன ஆனது, கோபிகைகளும் கிருஷ்ணரும் எப்படி அதிலிருந்து தப்பித்தார்கள் என்பதை விவரிக்கிறது 'ஓடனு ஜரிபே' என்று தொடங்கும் பாடல்.

ரசிக்கத்தக்க கிளாசிக்

இந்த கிளாசிக் பாடலுக்கு புது வடிவம் தந்துள்ளது 'ஸ்டாக்டோ' இசைக்குழு. ஆர்.ஹெச். விக்ரம் இசையமைக்க, கௌதம் பரத்வாஜ் பாடியுள்ளார். 'சூப்பர் சிங்கர்' போட்டியில் 2006-ல் பங்கேற்றுள்ள கௌதம், கர்னாடக இசைப் பின்னணி கொண்டவர்.

கர்னாடக இசைப் பாடல்களை அவற்றின் இயல்பு குலையாமல், நவீன பின்னணி இசையுடன் தந்தால் ரசிக்க முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல். கர்னாடக இசைப் பாணியிலேயே பாடல் பாடப்பட்டிருந்தாலும், சுருக்கமாகவும் சிறு சுதந்திரம் எடுத்துக்கொண்டும் பாடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தப் பாடலை அனைவரும் ரசிக்கத்தக்கதாக மாற்றுவது, இனிமை நிறைந்த பின்னணி இசைதான். அது நம் காதுகளுக்கு ஏற்கெனவே பழக்கமான பாணி.

டிரம்ஸ், கிதார், கீபோர்டு போன்றவை பாடலுக்கான சூழலை உருவாக்கித் தந்தாலும், வயலினே கௌதமின் குரலுக்கு இணையாகத் துள்ளி விளையாடியிருக்கிறது. 'ஸ்டாக்டோ'வின் பஞ்ச் லைனே, 'கான்டெம்ப்ரரி கிளாசிக்'தான். அதற்கேற்ப இந்தப் பாடல் மொழி, இசைப் பாணியைக் கடந்து வசீகரிக்கிறது.

பாடலுக்கான வீடியோவில் ஒருபுறம் இசை வழி தியாகராஜர் கசிந்து வருகிறார் என்றால், மற்றொருபுறம் வண்ணங்கள் வழி தியாகராஜர் உருப்பெறவும் செய்துள்ளார். ஓவியர் மதூர்யா தியாகராஜரை ஓவியமாக வடிப்பதை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். செவ்வண்ணச் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த வீடியோவை இயக்கியிருப்பது 'பிக்சர் மேக்கர்ஸ்'.

ஸ்ரீதேவிக்குச் சமர்ப்பணம்

ஸ்டாக்டோ, சென்னையை மையமாகக் கொண்ட பேண்ட். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் இசை நிகழ்ச்சி வழங்கிய ஒரே பேண்டும்கூட. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இயக்குநர் டேனி பாய்ல் தலைமையிலான குழு நடத்திய போட்டியில், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் இசைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குழு என்ற பெருமையும் கொண்டது.

கர்னாடக இசைப் பாடல்களுக்கு ஸ்டாக்டோ நவீன வடிவம் கொடுத்துள்ளதுடன், புதிய பாடல்களையும் தந்துள்ளது; பிரபலத் திரைப்படப் பாடல்களுக்கு கவர் வெர்ஷனும் வெளியிட்டுள்ளது. மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்டாக்டோ உருவாக்கிய பாடல்கள் இனிமை நிறைந்தவை. அதிலும் மூன்றாம் பிறையின் ‘பூங்காற்று புதிதானது’ பாடலின் ஒரு பகுதியில் தொடங்கி, ‘ஜானி’யின் ‘தீம் மியூசிக்’ உடன் அஞ்சலிப் பாடலை முடித்துள்ள விதம் நிஜமாகவே ஸ்ரீதேவிக்குச் சிறந்த இசை சமர்ப்பணம் என்பதில் சந்தேகமில்லை

 

ஓடனு ஜரிபே பாடலை ரசிக்க: https://bit.ly/2NxUhyP

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x