Published : 02 Jul 2018 10:57 AM
Last Updated : 02 Jul 2018 10:57 AM

விளம்பரங்களில் கவனம் தேவை...

அச்சு மற்றும் மின் ஊடகங்களில் நம்பமுடியாத வாக்குறுதிகளுடன் விளம்பரங்கள் வெளிவருவது புதிதல்ல. அழகான சருமத்தை பெறுவதற்கான கிரீம், முடி உதிர்வைத் தடுக்கும் ஷாம்பூ அல்லது எண்ணெய், உயரத்தை அதிகரிக்கும் பானங்கள், எடையைக் குறைக்கும் உணவுகள், அதிக வருவாய் தரும் நிதி சார்ந்த பொருட்கள் அல்லது 100 சதவீத வேலைவாய்ப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்கள் என பலவகையான விளம்பரங்கள் வெளிவருகின்றன.

ஆனால் இந்த பொருட்கள் அல்லது சேவைகள் தாங்கள் சொல்வதை செய்கின்றனவா? நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் விளம்பரங்கள் பெரிய அளவில் தாக்கம் செலுத்தும் நிலையில் இவை தரும் தவறான வாக்குறுதிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், அதேவேளையில் இது தொடர்பாக கிடைக்கும் சட்ட உதவிகள் குறித்தும் அறிந்துகொள்ளவேண்டும்.

சட்ட ஒழுங்குமுறைகள்

மருந்துகள் மற்றும் தீர்வுகள் சட்டம், மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம், கேபிள் தொலைக்காட்சி சட்டம் , உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் மற்றும் சிறார் உணவுகள் சட்டம் என பலவகையான சட்டங்கள் விளம்பரங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு உணவுப் பொருளின் எடை அல்லது தரத்தை தவறாக குறிப்பிட்டாலோ அல்லது ஒரு பொருள் அறிவியல் ரீதியில் குறிப்பிட்ட பலன்களைத் தரும் என தவறாக உறுதியளித்தாலோ, உணவு பாதுகாப்பு சட்டப்படி ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, நிதி சார்ந்த பொருட்கள் மற்றும் உடல்நலம் போன்ற துறைகள் சார்ந்து வெளிவரும் விளம்பரங்களை முறையே ஐஆர்டிஏஐ, டிராய், செபி/ஆர்பிஐ, இந்திய மருத்துவ கவுன்சில் போன்றவை ஒழுங்குபடுத்துகின்றன.

இதுதவிர இந்திய விளம்பர தரநிர்ணய கவுன்சிலின் (ஏஎஸ்சிஐ) விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் விளம்பரங்கள் தயாரிக்கப்படவேண்டும். விளம்பரங்கள், உண்மைகளை நேர்மையாக வெளிப்படுத்தவேண்டும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்பது ஏஎஸ்சிஐ கொள்கை. குறிப்பிட்ட துறைசார் விளம்பரங்களுக்கான விதிமுறைகளையும் ஏஎஸ்சிஐ வகுத்துள்ளது.

எடுத்துக்காட்டாக, ஆட்டோமொபைல் துறை சார்ந்த விளம்பரத்தின்போது ஹெல்மட் அணிதல், சீட்பெல்ட் அணிதல், மொபைல் போனை பயன்படுத்தாது இருத்தல் போன்ற பாதுகாப்பு பயிற்சிகள் பின்பற்றப்பட வேண்டும். அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பை உள்ளடக்கிய உணவுப் பொருள் பற்றிய விளம்பரத்தின்போது அதுகுறித்த எச்சரிக்கை இடம்பெறவேண்டும் என ஏஎஸ்சிஐ வலியுறுத்தியுள்ளது.

எங்கே முறையிடுவது?

விளம்பரத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதியை ஒரு பொருள் அல்லது சேவை நிறைவேற்றவில்லை என நீங்கள் கண்டறிந்தால் https://gama.gov.in/Default.aspx என்ற இணையதளத்துக்கு செல்லலாம். தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் குறித்து ஆன்லைன் வழியாக புகார் அளிப்பதற்கான நுகர்வோர் விவகாரத் துறையின் இணையதளம் இது. பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லுடன் இந்த தளத்தில் உள்நுழைந்து உங்களது புகாரை பதிவு செய்யலாம். தவறான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்கள் குறித்த வீடியோக்களையும் கூடுதல் ஆதாரமாக இந்தத் தளத்தில் பதிவேற்றலாம். ஏஎஸ்சிஐ அமைப்பும் புகார் பதிவு மற்றும் புகார் பதிவின் நிலையை அறியும் வசதியை https://www.ascionline.org/index.php/lodge-ur-complaints.html என்ற தளத்தில் தருகிறது.

ஏஎஸ்சிஐ அமைப்பை வாட்ஸ்ஆப் வழியாக + 91 7710012345 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் வழியாக contact@ascionline.org என்ற முகவரியிலும் அல்லது 1-800-22-2724 என்ற கட்டணமற்ற அழைப்பு எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தவறான விளம்பரங்களுக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஏஎஸ்சிஐ-க்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகளில் உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கவில்லையென்றால் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்களை அணுகலாம்.

கடுமையான சட்டங்கள்

தவறான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய விளம்பரங்களில் பிரபலங்கள் தோன்றுவதைத் தவிர்க்கும் பொருட்டு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2018, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கமுடியும். தவறான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை அளிப்பதை ஒழுங்குபடுத்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x