Last Updated : 24 Jul, 2018 11:08 AM

 

Published : 24 Jul 2018 11:08 AM
Last Updated : 24 Jul 2018 11:08 AM

ஆங்கிலம் அறிவோமே 223: கேட்டாரே ஒரு கேள்வி

கேட்டாரே ஒரு கேள்வி

ஒரு நாவலில் “I will help you off with coat” என்று படித்தேன். அப்படியானால் “கோட் அணிவிக்கவா” என்ற அர்த்தமா, “உங்கள் கோட்டை நீக்கட்டுமா” என்ற அர்த்தமா?

---------------------------------

“‘Horror, comedy, musical என்று திரைப்படங்களில் பல வகைகள் தெரியும். ஆனால், Neo-noir film என்று ஒரு திரைப்படத்தை அதன் விமர்சனத்தில் வகைப்படுத்தி இருந்தார்கள். அப்படியென்றால் என்ன?”

நண்பரே, முதலில் Noir film என்பது என்ன என்பதை அறிந்துகொள்வோம். 1940-50க்களில் தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களை Noir films என்று வகைப்படுத்தினார்கள். இவை குற்றங்களைக் கதைக்களனாகக் கொண்டவை. நிழல் உலகத்தை விரிவாகக் கூறுபவை. அதேநேரம் அதன் ஒளிப்பதிவில் ஒரு தனித்துவம் இருக்கும். தொடக்கத்தில் ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படி உருவானவற்றை மட்டுமே Noir-films என்று குறிப்பிட்டார்கள். இப்போது உலகில் எந்தப் பகுதியில் மேற்கண்ட இலக்கணங்களுக்கு உட்பட்ட படங்கள் உருவானாலும் அவற்றை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். Noir-film என்ற சொற்களைப் பிரபலப்படுத்தியவர்கள் ரேமண்ட் போர்டு, எடியேன் சாம்டன் ஆகிய இரண்டு பிரெஞ்சு விமர்சகர்கள்தாம்.

Neo என்பது new என்பதைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் Neos என்பதன் பொருள் new. சமீபகாலத்தில் வெளியாகும் Noir திரைப்படங்களை இப்படி neo-noir films என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றில் பழி வாங்குதல், வெறித்தனம், நீண்ட நாட்களாக நம்பப்பட்டுவரும் நெறிக் கொள்கைகளிலிருந்து மாறுபடுதல் போன்றவை இருக்கும். நல்லது கெட்டது அல்லது நல்லார், தீயவர் என்று இனம் பிரிக்க முடியாமல் இவை ஒன்றோடொன்று கலந்திருக்கும்.

eng 1jpg100 

கேட்டாரே ஒரு கேள்வி வாசகரே, நீங்கள் குறிப்பிட்டுள்ள வாக்கியத்துக்கு “கோட்டைக் கழற்றுவதற்கு உதவட்டுமா?” என்றுதான் பொருள்.

---------------------------------

“அமெரிக்கக் கால்பந்துப் பயிற்சியாளர் வின்ஸ் லோம்பார்டி ஒருமுறை, ‘If you are not fired with enthusiasm, you will be fired with enthusiasm’ என்றார். இதுபோன்ற பயன்பாடுகளை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பார்கள்?”

தமிழில் வஞ்சப் புகழ்ச்சி அணி, உவமை அணி என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்போம். (உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கும்போது அருகில் இருப்பவர் ‘என்ன ஆச்சு?’ என்று கேட்டால் ‘ஒண்ணும் இல்லே. கண்ணிலே தூசு விழந்துடுச்சு’ என்பது இலேச அணி என்பதையும் தெரிந்து கொள்வோம்). அதுபோல ஆங்கிலத்திலும் அணிகள் (figures of speech) உண்டு. அவற்றில் மேற்படி வாசகர் குறிப்பிடும் வாக்கியம் antanaclasis என்ற வகையைச் சேர்ந்தது.

அதாவது ஒரு சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்துதல். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வகையான அர்த்தம். வாசகர் குறிப்பிட்டுள்ள வாசகத்துக்கு ‘உற்சாகத்துடன் நீங்கள் செயல்படவில்லை என்றால் உற்சாகத்துடன் உங்களை வெளியேற்றிவிடுவேன்’ என்று பொருள்.

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பலவிதங்களில் (விஞ்ஞானி, அமெரிக்கா உருவாகப் பாடுபட்ட சிற்பி) பிரபலமானவர். அவர் இதுபோன்ற வாசகங்களை அற்புதமாகப் பயன்படுத்துவார்.

இன்றைய பல பட்டிமன்றங்கள், நியூஸ் சேனல்களின் விவாத மேடைகளுக்கு அற்புதமாகப் பொருந்தும் ஒரு வாக்கியத்தை அவர் சுவையாக இப்படிக் கூறியிருக்கிறார்.

Your argument is sound, nothing but sound.

அமெரிக்கச் சுதந்திர ஆவணத்தில் கையெழுத்திடும்போது அவர் இப்படிக் கூறினார். We must, indeed all hang together, or assuredly we shall all hang separately.

சங்கப் பாடல் ஒன்று ‘வஞ்சியே என்றவன் அன்போடு உரைத்தான்’ என்று தொடங்கும். அதில் ‘வஞ்சியான் வஞ்சியான்’ என்ற சொற்கள் அடுத்தடுத்து இடம்பெறும். அதாவது சேரநாட்டவன் (வஞ்சி என்பது அவர்களது தலைநகரத்தின் பெயர்) ‘வஞ்சிக்க மாட்டான்’ என்று அர்த்தம்.

கணிசமான திரைப்படப் பாடல்களிலும் இந்த அணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நீங்கள் நினைவுபடுத்த மாட்டீர்களா என்ன?

---------------------------------

“You will be sorry you asked” என்று ஒருவரிடம் கூறினால் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் நண்பர் ஒருவர்.

நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். அதற்கான பதிலை நான் சொல்லாமல் “You will be sorry you asked” என்று நான் கூறினால் அதற்குப் பொருள் இதுதான். “உன் கேள்விக்கு நான் பதில் கூறினால் அது உனக்கு வருத்தத்தைக் கொடுக்கும். ஏண்டா இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று ஆகிவிடும்”.

---------------------------------

COMPRISE - CONSIST

இந்த இரண்டு சொற்களுமே ஒரே அர்த்தம் கொண்டவைதாம். ஆனால், பயன்படுத்துவதில் சில வேறுபாடுகள் உண்டு.

This book consists of 10 chapters. This book comprises 10 chapters.

அதாவது consist என்ற சொல்லைத் தொடர்ந்து of அல்லது in என்ற preposition நிச்சயம் இடம்பெறும். Comprise என்பது தனியாகவே நிற்கும். Preposition-னின் ஒட்டு தேவையில்லை.

தொடக்கம் இப்படித்தான்

ஒருவரைப் பற்றி An Albatross round the neck என்று குறிப்பிட்டால் அந்தத் துரதிருஷ்டசாலி ஏதோ ஒரு தேவையில்லாத சுமையைச் சுமப்பதாகப் பொருள். ‘வருத்தப்பட்டுப் பாவம் சுமப்பவன்’. Albatross என்பது ஒரு பெரிய வெண்ணிறப் பறவை. கடலின் அருகில் வசிக்கும். நீளமான, உறுதியான இறக்கைகள் கொண்ட பறவை இது.

பிரபல ஆங்கிலக் கவிஞரான காலெரிட்ஜ் என்பவர், கவிதை ஒன்றில் இந்தப் பறவையை யாராவது சுட்டுவிட்டால் அவர் தன் கழுத்தைச் சுற்றி அந்தப் பறவையை நீண்ட காலத்துக்குத் தொங்கவிட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

His own supporters see him as an albatross in this election என்றால் இந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு அவர் சுமைதான். அவரை நீக்கிவிட்டால் கட்சி மேம்படும் என்று பொருள்.

சிப்ஸ்

# கொல்லைப்புறம் என்பதை ஆங்கிலத்தில் எந்த சொல்லால் குறிக்கலாம்?

Backyard

# On time, in time இரண்டில் எது சரி?

இரண்டுமே சரி.

#  Manner, manners என்றால் என்ன?

Manner என்றால் வழி அல்லது வழிமுறை - way, method.

Manners என்றால் நடத்தை, நன்னடத்தை - behaviour, politeness

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x