

உணவு என்பது நமது உணர்வோடு ஒன்றிவிட்ட ஒன்று. வெறுமனே உயிர்வாழத் தேவையான சக்திக்காக மட்டுமே உண்கிறோம் என்று நாம் நினைப்பதில்லை.
ருசி மிகுந்த உணவை ரசனையுடன் உண்பது நமது வழக்கம். விதவிதமான உணவை உண்ணும் நமக்கு அதைச் சமைத்துப்போடவும் ஆள் வேண்டும், உணவின் நுட்பமான சேதிகள் தெரிந்தவராக அவர் இருக்க வேண்டும் என்பதெல்லாம் நமது தேவை.
அந்தத் தேவை பெருகிவிட்டதால் அதைப் பூர்த்தி செய்வது என்பது ஒரு தனித் துறையாகவே வளர்ந்துவிட்டது. அந்தத் துறையில் எப்படிச் சமைக்க வேண்டும், சமைத்த உணவை எப்படி அலங்காரமாகப் பரிமாற வேண்டும், நமது ஆரோக்கியம் பேணும் உணவு எது, நமது பண்பாட்டை ஒட்டிய உணவு எது போன்ற உணவு சார்ந்த சகல நுணுக்கங்களும் சொல்லித் தரப்படுகின்றன. அதுதான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறை.
இந்திய அளவில் ஏராளமான ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட்கள் பெருகியுள்ளன. இவற்றில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் இந்த ஆண்டு முதல் எமர்ஜ் லேனிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் சார்பாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.
"இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலான பயிற்சிகளை அளிப்பதே எங்கள் முதன்மை நோக்கம்" என்கிறார் இதன் நிர்வாக இயக்குநர் கண்ணன்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆகியவற்றை படித்திருப்போர் இந்நிறுவனம் நடத்தும் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்க இயலும் என்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் பட்டப் படிப்பு படிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
டிப்ளமோ படிப்புகள் பயிற்சிக் காலத்தை 3, 6 ,12 மாதங்கள் கொண்டிருக்கும் என்றும் பட்டப் படிப்பு மூன்று வருடங்களிலும் நிறைவடையும் என்றும் அவர் தெரிவிக்கிறார். டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் செஃப் போன்ற பணிகளிலும் சமையல் தொடர்பான பணிகளிலும் சேர்ந்துகொள்ள முடியும்.
இண்டர்நேஷனல் செஃப் டிரெயினிங் புரோகிராம் என்னும் பயிற்சியும் இங்கே தரப்படுகிறது. ஏழு மாதங்களைப் பயிற்சி காலமாகக் கொண்ட இது துபாயில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. மாதத்திற்கு லட்ச ரூபாய் வரை செலவு பிடிக்கும் இந்தப் படிப்பை முடித்தால் தொடக்க சம்பளமே நாற்பதாயிரம் ரூபாய் அளவில் இருக்கும் என்றும் கண்ணன் கூறுகிறார்.
கோவா, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 38 மையங்கள் செயல்படுகின்றன. இந்த ஆண்டு முதல் சென்னையிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனம் இது என்று தெரிவிக்கும் கண்ணன், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு சான்றிதழ் பயிற்சிகளை அளிப்பதாகவும் கூறுகிறார்.
இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற சுமார் 3,300 பேர் கப்பல்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் பணியில் சேர்ந்துள்ளதாகவும் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார் அவர்.