Published : 04 Apr 2014 10:50 AM
Last Updated : 04 Apr 2014 10:50 AM

ஜெயமுண்டு பயமில்லை: 04-04-14

தவளையை வைத்து ஆராய்ச்சி செய்தார் ஒரு விஞ்ஞானி. தவளையின் ஒரு காலை வெட்டிவிட்டு “ஜம்ப்” என்றார். தவளை கஷ்டப்பட்டு குதித்தது. நான்கு கால்களையும் வெட்டிவிட்டு “ஜம்ப்” என்றார். தவளையால் குதிக்க முடியவில்லை. உடனே விஞ்ஞானி ஆராய்ச்சி முடிவை இவ்வாறு எழுதினார் “தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் அதற்குக் காது கேட்காமல் போய்விடும்”

இதுபோல, படிப்புக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதை பலமுறை காண்கிறோம். நுண்ணறிவு (Intelligence) என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. நுண்ணறிவு என்பது ஒரே ஒரு பண்பு என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஒரு விஷயத்தில் நுண்ணறிவுடன் இருப்பவர்கள் எல்லா விஷயங்களிலும் நுண்ணறிவுடன் இருப்பார்கள் என்று எண்ணியிருந்தனர். ஆனால் ஹோவார்ட் கார்ட்னர் என்ற அறிஞர் நுண்ணறிவு என்பது ஏழுவகையான அறிவுகளின் கலவை என்று கூறினார்

1.மொழி அறிவு: கவிஞர்களுக்கு முக்கியமானது 2.தர்க்க, கணித அறிவு: அறிவியலாளர்களுக்கு முக்கிய மானது 3.திசை மற்றும் முப்பரிமாண அறிவு (Spatial Intelligence): வாகனம் ஓட்டுபவர்களுக்கு இன்றியமை யாதது 4.இசை அறிவு: ஓசைகளைக் கவனித்து ஆராயும் அறிவு 5.உடல் இயக்கம் பற்றிய அறிவு (Kinesthetic Intelligence): இது விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமானது 6.பிறரைப் பற்றிய அறிவு (Inter Personal): இது மற்றவர்களுடன் பழகுவதைத் தீர்மானிக்கிறது 7.தன்னைப் பற்றிய (Intra Personal) அறிவு.

இந்த ஏழுவகை அறிவுகளும் எல்லோருக்கும் அவசியம். நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) என்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதே. ஒருவன் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் திறமையாக இருந்தால் போதாது . ஒரு சில விஷயங்களில் மேதைகளாக இருப்பது சிறப்பானது. ஆனால் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் அடிப்படைத் திறமை இருப்பதே உண்மையான அறிவு.

இந்தப் பட்டியலில் இல்லாத இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதுதான் உணர்ச்சிகளை அறியும், கட்டுப்படுத்தும் அறிவு (Emotional Quotient). அறிவுடையவர்களாக இருந்தும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் வெற்றி பெறுவது கடினம்.

உண்மையான கல்வி என்பது எல்லாவிதத் திறமைகளையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். கணிதத்தில் நூறு மதிப்பெண் வாங்கிவிட்டு அருமையான இசை காதில் விழும்போது ரசிக்கத் தெரியாவிட்டால் என்ன பலன்? அதேபோல, ஒருவர் மிகச்சிறந்த ஹாக்கி வீரராக இருந்துவிட்டு ஒரு கவிதையை ரசிக்க முடியவில்லை என்றால் அவரை முழுமையானவராகக் கருத முடியாது.

வெறுமனே மனப்பாடம் செய்யும் திறமைக்கு இந்தப் பட்டியலில் இடமே இல்லை. ஆயிரம் பாடல்களை மனப் பாடம் செய்பவனைவிட சுயமாக ஒரு பாடல் எழுதுபவனே உண்மையான அறிஞன்.

-மீண்டும் நாளை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x