Published : 08 Jul 2018 10:46 AM
Last Updated : 08 Jul 2018 10:46 AM

எசப்பாட்டு 43: பெறாதவளும் பெண்தான்

 

“ஒ

ரு காலத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்களை ‘மலடி’ என்று இழித்துப் பேசுவார்கள். நல்ல காரியங்களை அவர்களை வைத்துச் செய்ய மாட்டார்கள். கோபதாபங்களின்போது இதையே வசவுக்கான ஆதாரமாகக்கொள்வார்கள். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. குழந்தை இல்லாத பெண்களை யாரும் குறை கூறுவதில்லை. அவர்கள் அதைப் பற்றிய நினைப்பே இல்லாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ சுற்றமும் சூழலும் ஆதரவாக நிற்கின்றன” - இப்படி ஒரு பத்தியை எழுதிவிட மாட்டோமா என மனம் ஏங்குகிறது.

ரணமாக்கும் சொற்கள்

ஐ.டி. துறையில் பணியாற்றும் என் நண்பரின் மகளுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. கருப்பையில் கட்டி, சினைமுட்டைகளின் எண்ணிக்கையில் குறைபாடு என்று பலவிதமான பாதிப்பும் அதற்கான சிகிச்சையுமாகப் போராடிக்கொண்டிருக்கிறாள். மாமியார் வீட்டார் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் பூடகமாகவேணும் இதைப் பற்றி அவ்வப்போது பேசி அவளைக் குத்திக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். காலம் மாறினாலும் பிற்போக்கான உளவியல் இன்றும் அப்படியேதான் தொடர்கிறது.

போகாத கோயில் இல்லை கும்பிடாத சாமியில்லை என்று பேசுவது அந்தக் காலம். இப்போதெல்லாம் துறைவாரியாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். குழந்தைப்பேறு இல்லையெனில் போக வேண்டியது திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில். இன்னொரு சாரார் வேளாங்கண்ணி மாதா கோயிலில் எண்ணெய் வாங்கி வந்து வயிற்றில் தடவிக்கொள்கிறார்கள். வட்டாரத்துக்கு வட்டாரம் பிள்ளை வரம் தரும் சாமி என மக்கள் பல கோயில்களை அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

வேண்டுதலிலும் செலுத்துதலிலும் என எளிய மக்களின் பணம் கரைகிறது. மறுபுறம் பல்லாயிரக்கணக்கில் பணம் வாங்கி, மகப்பேற்றுக்கான மருத்துவம் செழிக்கிறது. இந்த எல்லா இடங்களிலும் ஏக்கம் நிறைந்த கண்களுடன் தம்பதிகள் காத்திருப்பதைக் காணலாம். அவரவர் அறிவு நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப நிவர்த்தியைத் தேடுவது பற்றி நமக்கொன்றும் ஆட்சேபம் இருக்க முடியாது.

இதில் அவள் குற்றம் என்ன?

ஆனால், எண்ணற்ற குடும்பங்களில் இந்தக் ‘குறை’ பெண்ணுடையது என்றே சொல்லப்பட்டு, அவளும் அதை விதியே என்று ஏற்றுக்கொண்டு தலை குனிந்து வாழும் நிலை இன்றைக்கும் தொடர்கிறது. இதுதான் நம் கவலை. இத்தகைய ஒரு தம்பதியின் கதையைத்தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் தன்னுடைய ‘மாதொரு பாகன்’ நாவலில் நுட்பமாக வடித்திருப்பார்.

“வாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து

தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே

மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்

தாயென்ற பெருமைதனை மனம் குளிர தந்தவளே”

என்ற திரைப்பாடலில் குழந்தைப்பேறு வாய்க்காத காலத்தின் பெண் உளவியல், ‘வருந்தி வருந்தித் தவமிருந்து’ என்ற சொல்லிலும் ‘வையகத்தார் ஏசாமல்’ என்பதிலும் வெளிப்படுகிறது.

‘ஆடு போகும் வழி தனிலே அரகரா மகனே மார்க்கண்டா - நான்

ஆறு குளம் வெட்டி வச்சேன் சிவனே

மரடி யோட பேரைச் சொல்ல அரகரா மகனே மார்க்கண்டா

மந்தை ஆடு அருந்தலையே சிவனே அரகரா’ (மரடி - மலடி)

இப்படி ‘மலடி’ என்பதால் ஆடு மாடுகூடத் தண்ணீர் அருந்தவில்லை என்ற எல்லைக்குப் பெண்களை அவமானப்படுத்திய சமூகம் நம் சமூகம். மலடி என்பதும் அறுதலி (தாலி அறுத்தவள்) என்பதும் இன்றளவும் நம் சமூகத்தில் வசைச்சொற்களாகவே நீடிக்கின்றன. இதில் அவள் குற்றம் என்ன, குழந்தைப்பேறு இல்லாவிட்டால் என்ன என்ற இடத்துக்கு நம் சமூகம் நகர வேண்டும். பிள்ளை பெற்றால்தான் அவள் பெண் என்ற கருத்து பல்லாண்டுகளாகப் பரப்பப்பட்டுப் பெண்ணின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறது. இதில் எந்தச் சமூகமும் விலகி நிற்கவில்லை.

“கத்தோலிக்கத் திருவிவிலியத்தில் சீராக்கின் ஞானநூல் என்றொரு பகுதி உள்ளது. இதில் 42-ம் பிரிவு 9, 10 வசனங்களின் தலைப்பே ‘மகளைப் பற்றிய தந்தையின் கவலை’ என்று இருக்கிறது. ‘9. தந்தை தம் மகளுக்கும் தெரியாமல் அவளைப் பற்றி விழிப்பாக இருக்கிறார்; அவளைப் பற்றிய கவலை அவரது உறக்கத்தை விரட்டியடிக்கிறது. இளமையிலே அவளுக்குத் திருமணம் ஆகாமல் போய்விடுமோ எனவும் திருமணமான பின் அவள் வெறுக்கப்படுவாளோ எனவும் கவலைப்படுகிறார். 10. கன்னிப் பருவத்திலேயே அவள் கெட்டுப்போகாதபடியும் தம் வீட்டிலேயே கருவுற்றவள் ஆகாதபடியும் கணவருடன் இருக்கும்போது நெறி தவறாதபடியும் திருமணமானபின் மலடி ஆகாதபடியும் அவர் கவலையாய் இருக்கிறார்” (கவிஞர் சக்திஜோதியின் கட்டுரையிலிருந்து).

தந்தைமைச் சமூகம் பெண்ணைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் அவள் எப்படி இருக்க வேண்டும் என விதிகளை இயற்றி அதை அவள் மீறுகிறாளா என்று கண்களில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. பேதை (5 முதல் 8 வயது வரை), பெதும்பை (9 முதல் 10 வயது வரை), மங்கை (11 முதல் 14 வயதுவரை), மடந்தை (15 முதல் 18 வயதுவரை), அரிவை (19 முதல் 24 வயதுவரை), தெரிவை (25 முதல் 29 வயது வரை), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) என்று பெண்ணுக்கு மட்டும் சிறப்புக் ‘கவனம்’ எடுத்துப் பேர் சூட்டியது ஒரு சான்று.

அதனால் என்ன?

இதே ‘பார்வை’தான் அவளைக் கல்யாணமானதும் பிள்ளைபெறச் சொல்கிறது. நவீன சமூகமாகிவிட்ட நாம் இன்று இந்தக் ‘கட்டாயத் தாய்மை’ என்னும் சங்கிலியிலிருந்து பெண்களை விடுதலை செய்ய வேண்டும். அது அவள் விருப்பம் என்பது சமூக நடைமுறையாக்கப்பட வேண்டும். தாய்மைக்கு வாய்ப்பில்லை என்றால், அதனால் என்ன என்று இயல்பாக இருக்கப் பெண் மனமும் சமூக மனமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். தெய்வங்களின் விருப்பமே அதுதான் என்று நம் தலைகளில் ஏற்றி வைத்திருப்பதால் இந்த உளவியலை மாற்றுவதற்குப் பெருமுயற்சி தேவைப்படும். ஆரம்பக் கல்வியிலிருந்து குழந்தைப்பேறு பற்றிய உளவியல் உருவாக்கத்துக்கு வித்திட வேண்டும்.

இந்தியாவில் மலட்டுத்தன்மை ஆண்களிடம் 40 சதவீதமும் பெண்களிடம் 40 சதவீதமும் இருவருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பதாக அறிவியல்பூர்வமான ஆய்வுகள் கூறுகின்றன. அறிவியல் உண்மைகள் எவ்வாறாக இருந்தாலும் நம் கலாச்சாரம் இது பெண்ணின் குற்றம் என்று வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே தீர்ப்பை எழுதிவைத்திருக்கிறது. மகப்பேறு இல்லாத பெண்களைப் பரிவுடன் பார்ப்பதோ கருணையுடன் பார்ப்பதோ மேலும் வேதனையை உண்டாக்கும். குழந்தை பெற்றுக்கொள்வதைப் போலவே பெறாமல் போவதும் இயற்கையானது, இயல்பானது என ஏற்றுக்கொள்ளும் சமூக உளவியலே இன்றைய தேவை.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x