Published : 23 Jul 2018 11:16 AM
Last Updated : 23 Jul 2018 11:16 AM

விழாக்கால செலவுகளை எப்படி சமாளிப்பது?

விழாக்காலம் தொடங்க இருக்கிறது. பல நிறுவனங்கள் சலுகை வழங்க ஆரம்பித்திருக்கின்றன.  சலுகை சமயத்தில் உங்கள் வசம் பணம் இருக்காது. இந்த சமயத்தில் மூன்று வகைகளில் பணம் திரட்டலாம். முதலாவது கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள் கடன் ஆகிய மூன்று வாய்ப்புகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்யலாம்.

கிரெடிட் கார்டு

பொருட்களை உடனடியாக வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகள் சிறந்த வாய்ப்பு. சரியான சமயத்தில் மொத்த தொகையையும் திருப்பி செலுத்தும் பட்சத்தில் வட்டியில்லாமல்  ஒரு மாதத்துக்கு கடன் கிடைக்கும்.  ஆனால் இதெல்லாம் சரியாக நடக்கும் வரைதான். ஒரு வேளை சரியான சமயத்தில் மொத்த தொகையையும் செலுத்த தவறினால்  மாதத்துக்கு 2.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

ஆண்டுக்கு என வைத்துக்கொண்டால் 30 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அதே சமயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லைக்குள் மட்டுமே கிரெடிட் கார்டினை பயன்படுத்த முடியும். ஒரு மாதத்துக்குள் உடனடியாக திருப்பி செலுத்த முடியும் என நம்பிக்கை இருந்தால் மட்டுமே கிரெடிட் கார்டினை பயன்படுத்தவும்.

இஎம்ஐ

கிரெடிட் கார்டு மூலம்  வாங்கும் பொருட்களை மாதாந்திர தவணை மூலமும் திருப்பி செலுத்தலாம். அதாவது மொத்தமாக பணத்தை பெற்றுக்கொண்டு, பகுதி பகுதியாக திருப்பி செலுத்தலாம். இதில் மிகப்பெரிய சலுகையே எந்தவிதமான சிக்கல் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பணத்தை திரட்ட முடிவதுதான்.  தவிர வங்கிகள் பல ரீடெய்ல் நிறுவனங்களுடன்  ஒப்பந்தம் செய்திருப்பதால் பலவிதமான சலுகைகளும் கிடைக்கும்.

நீங்கள் கிரெடிட் கார்டினை தேய்க்கும் போது, இஎம்ஐ-யாக மாற்ற விரும்புகிறீர்களா என கேட்கப்படும். அப்போதே ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச வட்டியை செலுத்தாமல் தவிர்க்கலாம். ஆனால் இதில் சில  கட்டணங்களும் நிபந்தனைகளும் உள்ளன. மாததவணையாக மாற்றுவதற்கு பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படும். தவிர உங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு எல்லை குறைக்கப்படும். மூன்று மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை கடனுக்கான காலம் இருக்கும். மேலும் இஎம்ஐ மூலம் நகை மற்றும் தங்கம் வாங்க முடியாது.

ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம்  தேய்க்கும் தொகையை இஎம்ஐயாக மாற்றினால் ஆண்டுக்கு 13-15 சதவீதம் வரை  வட்டி செலுத்த வேண்டி இருக்கும். குறுகிய கால கடன் வாங்குவதாக இருந்தால் கிரெடிட் கார்டு மூலம் தேய்த்து அதனை இஎம்ஐயாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஓர் ஆண்டுக்கு மேல் கடன் செலுத்துவதாக இருந்தால் தனிநபர் கடனே சிறந்த வாய்ப்பாக இருக்கும். தனிநபர் கடனில் ஆண்டுக்கு 10.99 சதவீத வட்டியில் கூட கடன் கிடைக்கின்றன.

ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டினை எடுத்துக்கொண்டால் மாதத்துக்கு 1.5 சதவீத வட்டி வசூலிக்கின்றன. அதேபோல ஆக்ஸிஸ் வங்கியும் மாத வட்டியை வசூலிக்கின்றன. அதனால் குறைந்த கால கடன் என்றால் கிரெடிட் கார்டு இஎம்ஐ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

சிறப்பு கடன்கள்

டிவி, குளிர்சாதன பெட்டி, மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இதற்காக பிரத்யேகமாக கன்ஸ்யூமர் டியூரபிள் கடன் கிடைக்கின்றன. வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இது போன்ற கடனை வழங்குகின்றன. தனிநபர் கடன்களுடன் ஒப்பிடும் போது இந்த கடன்கள் கூடுதல் வசதியானவை.

சம்பந்தப்பட்ட ரீடெய்ல் நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருப்பதால், இந்த கடன் எளிதாகவும் விரைவாகவும் வழங்கப்படும். மேலும் இந்த  கடன்களில் வட்டி ஏதும் இல்லை. அதே சமயத்தில் பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நிச்சயம் ஏதேனும் பொருள் மட்டுமே வாங்க திட்டமிட்டிருந்தால் தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களை விட இதுபோன்ற சிறப்பு கடன்களை பரிசீலனை செய்யலாம். நோ-காஸ்ட் இஎம்ஐ பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய தளங்கள் இதுபோன்ற கட்டணமில்லா இஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்க முடியும்.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டத்தை வழங்குகின்றன. கடன் கிடைக்கின்றன என்பதற்காக வாங்காமல், தேவை மற்றும் நிதி நிலைமையை அறிந்து கடன் வாங்குவது நல்லது.

- radhika.merwin@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x