Last Updated : 31 Jul, 2018 10:29 AM

 

Published : 31 Jul 2018 10:29 AM
Last Updated : 31 Jul 2018 10:29 AM

ஆயிரம் வாசல் 15: மொழி வளம் பெற ஓர் உண்டியல்

வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கு அருகிலும் அட்டைப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் புதிதாகப் படித்த சொல் ஒன்றை காகிதத்தில் எழுதி அந்த அட்டைப்பெட்டியில் போட்டுவைத்துக்கொள்கிறார்கள். வாரம் ஒருமுறை அதுவரை கற்றுணர்ந்து சேகரித்த சொற்களை எல்லோர் முன்னிலையிலும் எண்ணி அதுகுறித்து சின்ன கலந்துரையாடல் நடைபெறுகிறது.

பிறகு அவரவர் நோட்டுப்புத்தகத்தில் அந்தச் சொற்கள் பதிவேற்றப்படுகின்றன. பிறகு வகுப்பறையில் வைக்கப்பட்டிருக்கும் பொதுப் பெட்டி ஒன்றில் அத்தனை சொற்களும் கொட்டப்படுகின்றன. இதேபோல ஒவ்வொரு வகுப்பிலும் சேகரித்த சொற்கள் பள்ளியின் பெரிய பெட்டி ஒன்றில் இருக்கிறது.

இதன் மூலம் சொல், சொல்லுக்கான பொருள், அதை உச்சரிக்கும் முறை, அதன் மூலம் வடிவமைக்கும் வாக்கியங்கள் எனப் பலவற்றை ஆர்வத் துடன் கற்றுக்கொள்கிறார்கள் இந்தக் குழந்தைகள்.

இந்தச் சொல் வங்கித் திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகிறது பட்டுக்கோட்டை குறிச்சியில் உள்ள இந்தியன் வங்கி ஊழியர் சங்கப் பள்ளி.  வங்கியின் செயல்பாட்டை முன்மாதிரியாகக் கொண்டுதான் சொல் வங்கி என்ற கருத்தாக்கத்தை இவர்கள் அறிமுகம்செய்திருக்கிறார்கள்.

அதிகரிக்கும் மாணவிகள்

வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக-பொருளாதாரச் சூழலைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் இந்தப் பள்ளியை இந்தியன் வங்கி ஊழியர் சங்க கல்வி அறக்கட்டளை 2002-ல் தொடங்கியது. விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் தலைமையில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது.

விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள இப்பகுதியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் தாம் பெரும்பான்மை மாணவர்கள். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்குக் கிராமப்புறங்களில் கல்வி மறுக்கப்படும் பட்சத்தில் அக்குழந்தைகளுக்கு இந்தப் பள்ளி கல்வி ஒளி விளக்கேற்றி உறுதுணையாக உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தவிர ஆரம்பப் பள்ளியில் 69 மாணவிகளும் உயர்நிலைப் பள்ளியில் 28 மாணவிகளும் தற்போது படித்துவருகிறார்கள்.

அறிவியல் படைப்பாற்றல்

இதுதவிர வசதிவாய்ப்பற்ற மாணவர்களுக்கு வங்கி ஊழியர்கள் பலர் கல்விக் கட்டணத்தைச் செலுத்துகிறார்கள். “மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அதேவேளையில் பாடங்களைக் கடந்து பல செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உதாரணமாக, இந்திய வரைபடத்தைக் கற்பிக்க உள்ளூர் வரைபடத்தில் தொடங்கி தாலு கா, மாவட்டம், மாநிலம் என நகர்ந்து ஒட்டுமொத்த தேசம் குறித்த விவாதத்தை நடத்துவோம்” என்கிறார் பள்ளியின் தாளாளர் ரா.சோமசுந்தரம்.

இந்தியன் வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுத் தற்போது இந்தப் பள்ளியின் தாளாளர் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டுவருகிறார் இவர். கல்வியாளர்களும் எழுத்தாளர்களும் தொடர்ந்து வருகை புரிவதும் ஆலோசனைகள், பயிற்சிகள் அளித்து வருவதும் இப்பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறது.

“வழக்கமான படிப்பைத் தாண்டி படைப்பாற்றலுக்குச் சனிக்கிழமைதோறும் நேரம் ஒதுக்குகிறோம். அறிவியலை அறிதல், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடல், சமூக ஆர்வத்தோடு செயல்படல் ஆகியவற்றை எங்கள் மாணவர்களுக்கு ஊட்டுகிறது ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’. தும்பைப் பூச்செடியை சாயம் ஊற்றிய நீரில் ஊற வைத்தால் அது எப்படி நிறம் மாறுகிறது, ஏன் அப்படி நடைபெறுகிறது, உருளைக்கிழங்கில் உள்ள சக்தி மூலம் டைனமோ எரிவதைச் செய்து காட்டல் போன்றவை மாணவர்களுக்கு விளையாட்டுபோல் செய்முறை விளக்கத்துடன் காட்டப்படுகின்றன.

இன்னொன்று அறிவியல் ஆய்வு செயல்திட்டம். இளம் விஞ்ஞானிகளுக்கான இந்தத் திட்டத்தில் தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி விருதை எங்களுடைய மாணவர்கள் நான்கு முறை வென்றுள்ளனர்” என்கிறார் தலைமை ஆசிரியை செ. வாசுகி.

aayiram 2jpg

ஏரிக் கரையில் ஆய்வு

ஒரு காலத்தில் விவசாயத்தில் செழித்துப் பின்பு வீழ்ச்சியடைந்துபோன நிலையில் உள்ள கிராமப் பகுதியில் வீற்றிருக்கிறது இந்தப் பள்ளி. சுற்றுப்புற நான்கு கிராமங்களுக்கு நீர் பாய்ச்சிய குறிச்சியின் ஏரி இன்று வற்றிப்போனதற்கான காரணத்தை அறியும் ஆய்வை இந்தப் பள்ளி மாணவர்கள் அண்மையில் நடத்தினர். ’குறிச்சியில் ஒரு ஏரி’ என்ற தலைப்பில் அவ்வாய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டியது, ஏரி பற்றி அறிய கேள்வித்தாளைத் தயாரித்ததும் முதலில் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர்களைத்தான் சந்தித்தனர் மாணவர்கள். அவர்களுடன் உரையாடி தகவல்கள் மட்டுமின்றி அவர்களுடைய கடந்த கால நினைவுகளையும் அனுபவங்களையும் குறிப்பெடுத்துக் கவனமாக எழுதினர்.

ஏரியைக் காப்பாற்ற வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாகச் சுவரொட்டிகள் ஒட்டுவது, பேரணி நடத்துவது… என இத்திட்டச் செயல்பாடு புதிய பரிமாணம் அடைந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள் குறிச்சி மக்கள்.

ஆரம்பத்தில் சிறிய திட்டமாகத் தொடங்கிய இந்த முன்னெடுப்பு பின்பு ஆழமான ஆய்வறிக்கையாக உருவெடுத்தது. அது  மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டுப் பின் மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் தேர்வாகித் தேசிய இளம் விஞ்ஞானி விருதை இந்தப் பள்ளி மாணவர்களுக்குப்  பெற்றுத் தந்தது.

சனிக்கிழமைகளில் நடைபெறும் மற்றொரு விஷயம் படைப்பாற்றலை ஊக்குவிக்கக் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் எழுத்துப் பயிற்சி. மாணவர்கள் விருப்பம்போல் தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஒரு மணி நேரம் ஒரு கட்டுரையை எழுதுவார்கள். பின்பு அவர்கள் எழுதியதைப் பொதுவில் வாசிப்பார்கள்.

ஒவ்வொரு வாரமும் அவர்கள் எழுதி வாசித்ததை வகுப்பறையில் சேகரித்து வைப்பார்கள். இப்படியாக இந்தப் பள்ளி மாணவர்கள் தொகுத்த வாய்மொழிக் கதைகள் யுரேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களே பாடல் எழுதிப் பாடுவது இங்கு அரங்கேறும் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று.

தமிழ்வழிக் கல்வியோடு ஆங்கிலப் புலமையும் தேவை என்பதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களை உற்சாகப்படுத்த உணவுத் திருவிழா ஒருநாள் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவுக்கு மாணவர்களே உணவுகளைக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டு இறுதியில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் சினிமா பாடல்கள் தவிர்க்கப்படுகின்றன; கிராமியப் பாடல்கள் இடம்பெறுகின்றன. கரகம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம் சிலம்பம் போன்றவை ஆண்டு விழாவில் இடம்பெறும்.இவை அனைத்தையும் செய்ய இந்த மாணவர்களுக்குத் தகுதிச்சான்று கிடையாது, பிரம்படி கிடையாது, வீட்டுப் பாடம் கிடையாது. ஆனால், அத்தனையையும் லயித்துச் செய்கிறார்கள்.

பள்ளியைத் தொடர்புகொள்ள: 9943373505


கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x