Published : 16 Jul 2018 11:06 AM
Last Updated : 16 Jul 2018 11:06 AM

பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பது எப்போது?

நடுத்தர வகுப்பினரின் அதிகபட்ச கனவு ஒரு காரை வாங்கி குடும்பத்தோடு பயணிப்பதுதான். வங்கிகள், நிதி நிறுவனங்கள் சுலப தவணை திட்டம் மூலம் இது பெரும்பாலானோருக்கு சாத்தியமாகியுள்ளது. பொதுவாக கார் வைத்திருப்பது என்பது யானையை கட்டி தீனி போடுவதைப் போன்றதுதான். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையில் காரை பராமரிப்பது சற்று சவாலான விஷயம்தான்.

இது ஒரு புறம் என்றால், வாங்கிய வாகனம் பாதுகாப்பானது அல்ல என்றால் அனைவருக்குமே பயம் பற்றிக் கொள்ளும். நம்மிடம் உள்ள கார் தரச் சோதனைகளில் (கிராஷ் டெஸ்ட்) வெற்றி பெற்றதுதானா என்ற தேடல் ஆரம்பமாகும்.

இதற்கு காரணம் வேறொன்றுமில்லை, சமீபத்தில் வாகன பரிசோதனை (கிராஷ் டெஸ்ட்) ரெனால்ட் க்விட் கார் பூஜ்ய மதிப்பெண்ணை எடுத்துள்ளது. இந்த கார் பாதுகாப்பானதல்ல என்று என்சிஏபி நிறுவனம் தெரிவித்துள்ளது. என்சிஏபி என்பது புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (New Car Assessment Program for Southeast Asian Countries) என்பதன் சுருக்கம்.

இந்த தரச் சோதனையில் க்விட் எடுத்த மதிப்பெண் புள்ளிகள் நூற்றுக்கு வெறும் 24.68 மட்டுமே. இதனால் இதற்கு நட்சத்திர குறியீடு ஏதும் வழங்கப்படவில்லை. இது ஜீரோ ஸ்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காரில் பாதுகாப்புக்கு உதவும் தொழில்நுட்பம் (எஸ்ஏடி - Safety Assist Technologies) ஏதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 10.12 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களுக்கு 14.56 புள்ளிகளையும் க்விட் எடுத்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் ஏபிஎஸ், இஎஸ்சி, சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகள் ஏதும் இந்தக் காரில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரபட்சம்

இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்காக சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட கார்கள் மட்டுமே இவ்விதம் குறைபாடு உடையதாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவே லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படும் கார்களில் இத்தகைய குறைபாடுகள் இல்லை.

இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களின் உயிர் மலினமானது என்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் உள்ளவர்களின் உயிர் விலை மதிப்பற்றது என்று கார் தயாரிப்பு நிறுவனம் கருதுகிறதோ.

இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்ததும் க்விட் கார்தான். பிரான்ஸின் ரெனால்ட் நிறுவனம் சென்னையில் தயாரிப்பு ஆலையை அமைத்து செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தினால் மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம். இல்லையெனில்...

கிராஷ் டெஸ்ட் எப்படி நடத்தப்படுகிறது

வாகனங்களின் ஸ்திரத்தன்மையை பரிசீலிப்பது மட்டுமின்றி அதிலுள்ள பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும். இதற்காக வாகனங்களின் முன் பகுதி, பக்கவாட்டுப் பகுதி, பின் பகுதி ஆகிய மூன்று புறங்களில் இருந்தும் சோதனை மேற்கொள்ளப்படும். வலுவான பொருள் காரின் மீது இடிக்கும்போது எத்தகைய விளைவு காருக்கு ஏற்படுகிறது என்பதை வைத்து காரின் ஸ்திரத்தன்மை பரிசோதிக்கப்படும்.

இத்தகைய காரினுள் மனிதர்களைப் போல பொம்மைகள் உருவாக்கப்பட்டு டிரைவர் இருக்கை மற்றும் பயணிகள் இருக்கையில் வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.

பொதுவாக நான்கு அம்சங்கள் மட்டுமே பரிசோதனையில் முக்கியமாக கடைப்பிடிக்கப்படும்.

சோதனை நடத்தப்பட்ட பிறகு காரினுள் உள்ள டம்மி பொம்மைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆராயப்படும். உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள், ஏர் பேக்குகள் மற்றும் சீட் பெல்ட்களின் சிறப்பான செயல்பாடு ஆகிய நான்கு அம்சங்களே முக்கியமாக பரிசோதிக்கப்படும்.

இத்தகைய சோதனைக்கு உள்ளாக்கப்படும் காரில் உள்ள எரிபொருள் முற்றிலுமாக நீக்கப்படும்.

காரினுள் உள்ள டம்மி பொம்கைகளில் உணர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை விபத்தின் தன்மையை மதிப்பீடு செய்யும். கார் வேகமாக மோதும்போது உள்பகுதியில் எந்த அளவுக்கு பொம்மைகளுக்கு சேதம் ஏற்படுகிறது என்பது பரிசோதிக்கப்படும். அதுவும் குறிப்பாக டம்மி பொம்மைகளின் எந்தெந்த பாகங்கள் சேதமடைந்துள்ளன என்பது ஆராயப்படும்.

டம்மி பொம்மையில் கிரீஸ் பூசப்பட்டிருக்கும். இதன் மூலம் விபத்து நடந்தால் எந்தெந்த பகுதிகளில் காயம் படலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மொத்தம் 6 வகையில் காரின் ஸ்திரத்தன்மை சோதிக்கப்படும். முன் பகுதியில் மூன்று முறை மோதி சோதிக்கப்படும். அடுத்து ஒரு நடுத்தர அளவிலான மோதல் சோதனை மற்றும் டிரைவர் மற்றும் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் தலா ஒருமுறை நடத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x