Published : 13 Jul 2018 10:33 AM
Last Updated : 13 Jul 2018 10:33 AM

2019 - டி.கே. பட்டம்மாள் நூற்றாண்டு: ‘பட்டம்மாள் மாதிரி வரணும்!’

நி

னைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது! டி.கே. பட்டம்மாள் என்ற இசைப் பேரரசியின் வெற்றிக் கதையையும் அவர் கடந்துவந்த பாதையையும் பற்றி. இசை உலகில் அவரது சம காலச் சாதனைப் பெண்களான எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி ஆகிய இருவரும் இசைப் பாரம்பரியம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அப்படி எதுவும் இல்லாமல், மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பப்பின்னணியிலிருந்து வந்தவர் பட்டம்மாள்.

அது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டம். 1900-களில் பெண்கள் இப்போது இருப்பதுபோல இல்லை. அதிலும் பட்டம்மாள் பிறந்து வளர்ந்த பிராமண சமூகத்தில் பெண்கள் பாடுவதும் ஆடுவதும் நினைத்தே பார்க்கமுடியாத ஒன்று. பட்டம்மாளின் தாயார் ராஜம், புகுந்த வீட்டில் நடந்த ஒரு திருமண வைபவத்தின் நலங்குச் சடங்கின்போது கீர்த்தனை ஒன்றைப் பாடினார்.

அப்போது பாராட்டுக்கு பதிலாகத் தனது மாமனாரிடம் வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டார். பாடுவதையும் ராஜம் அப்படியே விட்டுவிட்டார். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த பட்டம்மாள், இந்த கட்டுக்களை உடைத்தெறிந்துவிட்டுச் சாதிக்க அவரது தேடலும் உழைப்புமே காரணமாக இருந்தன.

13CHRCJ_DK_PATTAMMAL_1 1931-ல் காஞ்சிபுரம் அரசு பாடசாலை மாணவியாக நாடகம் ஒன்றில் நடித்து தங்கப் பதக்கம் பெற்ற தருணத்தில். காஞ்சியிலிருந்து

காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் என்ற கிராமம்தான் பட்டம்மாள் பிறந்த ஊர். அங்கே கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் - ராஜம்மாள் தம்பதியின் மூத்த மகளாக 1919-ம் வருடம் மார்ச் 19-ம் நாள் பிறந்தார் டி.கே. பட்டம்மாள். தடுக்கப்பட்ட தனது பாடும் திறனை ஒரு வயதிலிருந்தே மகளுக்குப் புகட்டிய தாயார் ராஜம்தான் பட்டம்மாளின் முதல் குரு. அந்த வகையில் சங்கீதத்தின் அடிப்படைப் பாடங்களை தாயாரிடமிருந்தே கற்றுக்கொண்டார்.

சிறுமியாகக் கோவில் கச்சேரிகளுக்குத் தாயுடனும் தனது சகோதரர்களுடனும் சென்று வந்த பட்டம்மாள், அங்கே கேட்கும் கீர்த்தனைகளை வீட்டுக்கு வந்ததும் ஸ்வரப்படுத்தி ராகங்களின் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொண்டு பாடம் செய்துகொள்வார். தனது தந்தை கற்றுக்கொடுக்கும் சிறு சிறு ஸ்லோகங்கள், பக்திப் பாடல்களை அழகாகப் பாடிக்காட்டுவார். முறையாக ஒரு குருவிடம் சென்று சங்கீதம் கற்றுக்கொள்ளாவிட்டாலும் அந்த வயதில் இசைத்தேவதையின் பரிபூரண அருள், சிறுமி பட்டம்மாளிடம் குடிகொண்டிருந்தது. பின்னாளில் ஒரு தெலுங்கு வாத்தியார் அவருக்கு குருவாக அமைந்தார். அவரிடம் சங்கீதத்தோடு தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார் பட்டம்மாள்.

இசை உற்சவத் திருப்புமுனை

பட்டமாளின் எட்டாவது வயதில் நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையில் முதல் திருப்புமுனையாக அமைந்தது. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற இசைவிற்பன்னர்களில் ஒருவரான காஞ்சிபுரம் நாயனாப்பிள்ளை ஆண்டுதோறும் காஞ்சிபுரத்தில் தியாகராஜர் நினைவாக இசை உற்சவம் ஒன்றை விமரிசையாக நடத்தி வந்தார். அவர் நடத்திய இசைப்போட்டியில் கலந்துகொண்டு ‘ரக்க்ஷ பெட்டரே’ என்ற தியாகராஜரின் பைரவி ராகக் கீர்த்தனையைப் பாடி முதல் பரிசு பெற்றார் பட்டம்மாள்.

13CHRCJ_D_K_PATTAMMAL_2right

இதனால் சிறுமி பட்டம்மாள் மீதும் இசையுலகின் கவனம் விழுந்தது. பத்தாவது வயதில் அகில இந்திய வானொலியில் பாடும் வாய்ப்பு, பதிமூன்றாவது வயதில் ரசிக ரஞ்சனி சபாவில் முதல் மேடைக்கச்சேரி என வளர்ந்தார். அதன் பிறகு அவரது வாழ்வில் சாதனைகளுக்கான வாசல் திறந்துவிட்டது. அவரது எண்பதாவது வயது வரை சாதனைகளும் வெற்றிகளும் அவரை தாமாகவே வந்து சூழ்ந்த வண்ணம் இருந்தன.

தன்னடக்கத்தின் தனி அடையாளம்!

‘ராக விஸ்தாரம் பண்ணறதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். பொம்மனாட்டிகளாலே அதெல்லாம் முடியாது. அதே முடியாதுங்கறப்போ தானம் - பல்லவி எல்லாம் அவாள்ளாம் நெனைச்சே பார்க்க முடியாது. அதெல்லாம் ஆண்களால் மட்டுமே முடியக்கூடிய சமாச்சாரம்’ - என்று சொல்லி இசை உலகில் பெண்களை முழுவதுமாக ஒதுக்கி வைத்திருந்த நாட்கள் அவை.

அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கான காலச்சூழலில் - ‘எங்களால் ஏன் முடியாது, ஆண்களுக்கு நிகராக, ஏன், அவர்களை விடவே சிறப்பாக இசையின் எல்லா அம்சங்களிலும் பெண்களாலும் சாதிக்க முடியும்’ என்று போர்க்குரல் எதுவும் எழுப்பாமல் - தனது மகத்தான திறமையால் இளம் வயதிலேயே மௌனமாக ஒரு இசைப் புரட்சியையே நிகழ்த்திக் காட்டியவர்தான் டி.கே. பட்டம்மாள். சத்தமே இல்லாமல் அவர் நிகழ்த்திக்காட்டிய அந்தச் சாதனை மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. ஆனால் அந்தச் சாதனையின் புகழைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் "எல்லாம் பகவான் கிருபை. பெரியவா ஆசீர்வாதம்" என்று அவர் காட்டிய தன்னடக்கம் அந்தச் சாதனைகளை விட மிகப்பெரியது.

முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் கீர்த்தனைகள்

பொதுவாக, ஒவ்வொரு பாடக, பாடகியரும் ஒரு குறிப்பிட்ட வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகளைப் பாடுவதில் சிறப்புற்று இருப்பார்கள். அந்த வகையில் டி.கே. பட்டம்மாள் - சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளை தனது சிறப்பம்சமாகக் கொண்டிருந்தார். முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பரம்பரையில் வந்த அம்பி தீக்ஷிதரிடமும், ஜஸ்டிஸ் டி.எல். வெங்கட்ராம அய்யரிடமும் அவற்றை கற்றுத் தேர்ந்து தனது திறமையைப் பெருக்கிக்கொண்டார்.

‘தியாகராஜ யோக வைபவம்’ என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ஆனந்த பைரவி ராகக் கீர்த்தனை ஒன்றே போதும் ‘கான சரஸ்வதி’ என்று கொண்டாடப்பட்ட பட்டம்மாளின் திறமையைப் பறைசாற்ற. அவரது தனிச் சொத்தாகவே அந்தக் கீர்த்தனை மாறிவிட்டிருக்கிறது. மகாகவி காளிதாசரின் ‘சியாமளா தண்டகம்’ பட்டம்மாளின் புகழ் மகுடத்தில் வைரக்கல் என்றால் அது மிகையே அல்ல.

13CHRCJ_PATTAMMAL2திரைப் பயணம்

திரையிசையிலும் சாதனை படைத்த பாபநாசம் சிவனிடமும் நேரடியாகப் பல கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டார். நவரச கானடாவில் அவர் பாடியிருக்கும் ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா’ என்ற சிவனின் கீர்த்தனையில் அவர் காட்டியிருக்கும் அழுத்தம், பாவம், உருக்கம், எல்லாமே - வார்த்தைகளால் விவரிக்க முடியாத உச்சம் கொண்டவை. இப்படிப்பட்ட திறமைசாலியை திரை உலகம் மட்டும் பயன்படுத்திக்கொள்ளாமல் போகுமா?

‘தமிழ்த் திரையுலகின் தந்தை’ எனப் போற்றப்படும் கே.சுப்பிரமணியம் இயக்கி 1939-ல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட படம் ‘தியாகபூமி’. அந்தப் படத்தில் துணிச்சலாக ‘தேச சேவை செய்வோம் வாரீர்’ என்று அழுத்தம் திருத்தமான குரலால் அனைவரையும் அழைத்ததன் மூலம் திரையிசையில் அடி வைத்தார் டி.கே. பட்டம்மாள். தொடர்ந்து திரையில் மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி - "பாரதியார் பாடலா, பட்டம்மாள்தான் பாடணும்" - என்று கூற வைத்து அதிலும் தனி முத்திரையைப் பதித்தவர் அவர்.

சுதந்திர இந்தியா மலர்ந்தபோது 1947,ஆகஸ்ட் 15 - அன்று ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று அகில இந்திய வானொலியில் ஆனந்த சுதந்திரம் அடைந்ததைத் தனது கம்பீரக் குரலால் இசைத்து அனைவரையும் சிலிர்க்க வைத்தவர் அவர்தான். ஒட்டுமொத்தமாக 12 படங்களில் 18 பாடல்களைப் பாடியிருக்கும் அவரது ஒவ்வொரு திரைப் பாட்டும் அவரது அபூர்வமான குரலால் செதுக்கப்பட்ட தெவிட்டாத இசைக் கல்வெட்டுக்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் வாழ்ந்து, அதற்காகப் பாடி, அதைப் பெற்ற பெருமிதத் த்வனி சற்றும் குறையாத கம்பீரத்துடன், தனது தள்ளாத முதுமையில் அவர் பாடிய தேசிய கீதம், இன்றைய தலைமுறைக்கு ஆச்சரிய ஆவணம்.

பத்ம விபூஷன்

நாட்டின் இரண்டாவது பெரிய கௌரவமான ‘பத்ம விபூஷன்’ விருதுபெற்ற பட்டம்மாளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது கணவர் ஈஸ்வரன். அந்த வகையில் ‘ஈஸ்வர சகாயம்’ அவருக்கு நிறையவே கிடைத்தது.

பட்டம்மாள் புகழ்பெற்று உயர்ந்த காலத்தின் தலைமுறையில் பெண்குழந்தைகள் சங்கீத வகுப்புகளுக்கு முதல் முதலாகப் புறப்படும்போது வீட்டில் உள்ள தாய்மார்கள், "நன்றாகப் பாடி பட்டம்மாள் மாதிரி வரணும்" என்று வாழ்த்தி அனுப்புவார்கள். அந்த வார்த்தைகளில் உள்ள பெருமிதம் பட்டம்மாளின் திறமைக்கு கிடைத்த - வேறு யாருக்குமே கிடைக்க முடியாத - மிகப் பெரிய அங்கீகாரம். இதைவிடப் பெருமை வேறு என்ன வேண்டும்?

தொடர்புக்கு: pgs.melody@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x