Last Updated : 01 Jul, 2018 12:10 PM

 

Published : 01 Jul 2018 12:10 PM
Last Updated : 01 Jul 2018 12:10 PM

பெண் எழுத்து: பெண்ணியத்துக்கு ‘பென்’ பரிசு!

இன்று ஆங்கிலத்தில் எழுதும் மிக முக்கியமான கறுப்பின எழுத்தாளர்களில் சிமாமாண்டா எங்கோஸி அடீச்சியும் ஒருவர். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், இதுவரை ஆறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெண்ணியம் குறித்த சரியான புரிதலை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது இவரது எழுத்து.

இவருக்குக் கடந்த ஜூன் 12-ல் ‘பென்’ (PEN) பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரால்ட் பிண்ட்டரின் நினைவாக இந்தப் பரிசு ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டன், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இந்த உலகத்தின் மீது துணிச்சலான, தடுமாற்றம் இல்லாத பார்வையைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் விதமாக இந்தப் பரிசு ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அடீச்சிக்கு இந்தப் பரிசு வழங்கப்பட உள்ளது.

01chnvk_adichi1.jpgஏன் பெண்ணியவாதியாக இருக்க வேண்டும்?

பாலினம், நிறம், உலக அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது இவர் கொண்டிருக்கும் நவீன அணுகுமுறையே இந்தப் பரிசுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் என்று தேர்வு செய்த நடுவர்கள் கூறியிருக்கிறார்கள்.

முக்கியமாக, பாலினம் குறித்து இவர் கொண்டிருக்கும் பார்வை, நாம் கவனத்தில் கொள்ளவும் பின்பற்றவும் வேண்டியது. ‘அப்படி என்னவிதமான பார்வையைக் கொண்டிருக்கிறார்?’ என்று கேட்பவர்கள், அவர் எழுதிய ‘வீ ஷுட் ஆல் பி ஃபெமினிஸ்ட்ஸ்’ எனும் புத்தகத்தை வாசித்தால் போதும்.

ஆப்பிரிக்காவை மையப்படுத்தி லண்டனில் ‘டெட்எக்ஸ் யூஸ்டன்’ எனும் அமைப்பு, 2012-ல் சொற்பொழிவு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பெண்ணியம் குறித்துப் பேசினார் சிமமண்டா. அந்த உரையின் சற்றே விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்தப் புத்தகம். 2014-ல் வெளியானது.

‘நாம் அனைவரும் ஏன் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்?’ என்ற கேள்விதான், இந்தப் புத்தகத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது. ‘நாம் அனைவரும் வேறொரு உலகைக் கனவு காண வேண்டும். அந்த உலகத்தில் ஆண்களும் பெண்களும் தங்களுக்குத் தாங்களே உண்மையாக நடந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி நடந்துகொள்வதில் மகிழ வேண்டும். அப்படியொரு உலகைப் படைக்க, நம் மகள்களை வித்தியாசமாக வளர்க்க வேண்டும். மகன்களையும் வித்தியாசமாக வளர்க்க வேண்டும்’ என்று அந்தப் புத்தகத்தில் அவரே பதிலும் தருகிறார்.

யாரெல்லாம் பெண்ணியவாதி?

பெண்ணியத்தை மக்கள் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்படி நகைச்சுவையாகச் சொல்கிறார் அடீச்சி:

01chnvk_adichibook.jpgright

“நான் ‘பெண்ணியவாதி’ என்று சொன்னபோது, ஆண் பத்திரிகையாளர் ஒருவர், ‘பெண்ணியவாதிகள் எல்லாம் கவலையுடன் இருப்பவர்கள்’ என்றார். அன்றிலிருந்து நான் ‘மகிழ்ச்சியான பெண்ணியவாதி’ என்று என்னை அழைத்துக்கொண்டேன். பிறகு, ‘பெண்ணியம் என்பது ஆப்பிரிக்கர்களுக்கு ஒத்து வராது’ என்றார்கள். அதனால் என்னை ‘மகிழ்ச்சியான ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’ என்று அழைத்துக்கொண்டேன்.

பிறகு, ‘பெண்ணியவாதி என்றால் ஆண்களை வெறுப்பவர்கள்’ என்றார்கள். எனவே, நான் என்னை ‘ஆண்களை வெறுக்காத மகிழ்ச்சியான ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’ என்று கருதிக்கொண்டேன்.

இப்படியே செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் நான் ‘ஆண்களுக்காக இல்லாமல் தனக்காக ஹை ஹீல்ஸ் அணிந்துகொள்கிற ஆனால் ஆண்களை வெறுக்காத மகிழ்ச்சியான ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’ என்னும் அளவுக்கு வளர்ந்துவிட்டேன்.

ஆம். ‘பெண்ணியவாதி’ என்ற சொல் எவ்வளவு எதிர்மறையான அடையாளங்களுடன் வருகிறது? ஆண்களை வெறுப்பவராக, பிரா அணிய விரும்பாதவராக, பெண்கள் மட்டுமே எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பவராக, மேக்அப் போட்டுக்கொள்ள விரும்பாதவராக, எப்போதும் கோபம் கொண்டவராக, நகைச்சுவை உணர்வு இல்லாதவராக, டியோடரண்ட் பயன்படுத்தாதவராக…”

ஏன் மாற வேண்டும்?

புத்தகத்தின் ஓரிடத்தில் ‘ஓட்டலுக்குச் சென்றால், ஆண்கள்தாம் பணம் கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் எப்படி வந்தது? அப்படிப் பணம் கொடுப்பதை ஏன் ஆண்மைக்குரிய விஷயமாகப் பார்க்க வேண்டும்? ஒரு பெண், சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுத்தால், அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆணுக்கு ஏன் சர்வர் நன்றி சொல்கிறார்? அதாவது, பெண்ணிடம் பணமே இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அவள் கீழ்த்தரமானவள் என்ற சிந்தனை எங்கிருந்து வந்தது? ஒரு பெண் ஏன் மற்றவர்களின் மனதுக்குப் பிடித்தவளாக நடந்துகொள்ள வேண்டும்?’ என்று பல கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

அந்தக் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விவாதம் பிறக்கும். தீர்வுகள் கிடைக்க வழி ஏற்படும். வழி கிடைத்தால் கலாச்சாரமும் மாறும். ஏன் கலாச்சாரம் மாற வேண்டும்? அடீச்சியின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘கலாச்சாரம் மனிதர்களை உருவாக்குவதில்லை. மனிதர்கள்தாம் கலாச்சாரங்களை உருவாக்குகிறார்கள்!’

அடீச்சி எழுதிய இரண்டு நூல்கள், ‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’, ‘ஊதா நிறச் செம்பருத்தி’ ஆகிய தலைப்புகளில் அணங்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கின்றன. இவற்றை தமிழில் மொழிபெயர்த்தவர் பிரேம்.

வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், 3, முருகன் கோயில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி.

மின்னஞ்சல்: anangufeministpublication@gmail.com
தொலைபேசி: 9599329181

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x