Published : 27 Jul 2018 10:53 AM
Last Updated : 27 Jul 2018 10:53 AM

வாட்ஸ்அப் வதந்திகள்

நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு தபால் கார்டு அல்லது ஒரு பிட் நோட்டீஸ் வரும். அதிலே ஒரு சாமியைப் பற்றியோ கோயிலைப் பற்றியோ தகவல் இருக்கும். அதை உடனே பிரதி எடுத்து பிறருக்கு வினியோகித்தவர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டங்களைப் பற்றியும் கிழித்துப் போட்டவர்களுக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்குப் பயந்துகொண்டே பிரதி எடுத்து அனுப்பியவர்கள் அநேகர். ஆனால், இப்போது வாட்ஸ் அப்பில் கிடைத்தவற்றையெல்லாம் ஃபார்வார்ட் செய்வது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

தகவல் தொழில்நுட்பத்தில் வாட்ஸ்அப் என்பது எதையும் உடனுக்குடன் அதிக செலவின்றி பகிர்ந்துகொள்ளக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம். ஆனால், அதை நாம் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா?  இதன் உச்சகட்டமாக வாட்ஸ்அப்பில் வந்த புரளிகளை நம்பி குழந்தைத் திருடுபவர்கள் என இந்தியாவின் பல மாநிலங்களில் பலர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பரவும் ஃபார்வர்டுகள்

உலகிலேயே செய்திகளை ஃபார்வர்ட் செய்வதில் இந்தியர்கள்தாம் முன்னணியில் இருப்பதாக வாட்ஸ்அப்  நிறுவனம் கூறுகிறது. தினமும் காலை வணக்கம், இரவு வணக்கம், இந்த நாள் இனிய நாள், கடவுளின் ஆசி, கஷ்டம் தீரட்டும் இது போன்றவற்றைத்தான் அதிகமாகப் பகிர்கிறோம். மருத்துவச் செய்திகள் என்ற பெயரில் ஒரு புறம் நாட்டின் பாரம்பரிய வைத்திய முறையைப் போற்றும் பகிர்வுகள்.  இன்னொரு புறம் அதே ஆயுர்வேதம் எப்படி உடலை நாசமாக்குகிறது என்றும் பகிர்வுகள்.

அடுத்தபடியாக இன்னார் இங்கே விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளார், சான்றிதழ்கள் கிடைத்துள்ளன, உடனடியாகப் பகிரவும் என்றும் செய்திகள். இதையடுத்து காவல்துறை அல்லது அரசு ஊழியரின் அத்துமீறல், இவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை பகிரவும். இவருக்கு இந்த வியாதி, இதனைப் பகிர்ந்தால் ஒவ்வொரு பகிர்வுக்கும் ஐந்து பைசா வீதம் கிடைக்கும், அதனால் அதிகம் பகிர்ந்து உயிரைக் காப்பாற்றவும். 

பகிரும் படித்தவர்கள்

2015-ல் சென்னை வெள்ளத்தின்போது உதவி அளிக்கிறோம் எனப் பல நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றின் முகவரி, தொலைபேசி எண்கள் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டன. ஆனால், 2017-லும் அதே செய்திகள் பகிரப்பட்ட கொடுமை சென்னையில் நிகழ்ந்தது.

இதில் வருத்தப்பட வேண்டியது இதைப் பகிர்ந்தவர்கள் யாரும் படிக்காத அல்லது விஷயம் தெரியாதவர்கள் அல்லர். நன்கு படித்த நல்ல பதவியில் இருப்பவர்கள்கூட இவற்றைப் பகிர்ந்தனர். ஒரு சிறுவனைக் காணவில்லை என ஒளிப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிந்திருந்தார். அந்தக் குழந்தை கிடைத்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக அந்தப் பையனை எங்கு பார்த்தாலும் உடனே அவருக்குத் தொலைபேசியில் அழைப்பு வருகிறதாம்.

யார் காரணம்?

வதந்திகளையும் பொய்த் தகவல்களையும் உருவாக்குபவர்கள் ஒரு சிலரே. அவர்களது நோக்கம் தமாஷாக ஏதாவது செய்வது முதல் கலவரத்தை உண்டாக்குவது, அரசியல் நோக்கம் என விரிந்து கொண்டே போகிறது. ஆனால், அதைப் பகிர்பவர்களில் ஒரு சதவீதம்கூட அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் நிஜம்.

அப்போது ஏன் அவற்றைப் பகிர்கிறார்கள்? நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கமே இதைப் பகிர்வதற்கு அவர்களைத் தூண்டுகிறது. இவற்றைப் பகிர்வதால் யாரோ ஒருவர் காப்பாற்றப்படுவர் என்ற நோக்கமே இதன் பின்னணி.  நாமும் சமூகத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகப் பகிரும் செய்தி உண்மையா பொய்யா என்று ஆராயாமல் பகிரத் தூண்டுகிறது.

எப்படித் தடுப்பது?

வதந்திகளையும் பொய்த்தகவல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று வாட்ஸப் நிறுவனத்திற்குக் கட்டளையிடுவதால் இதை நிறுத்த முடியுமா? உண்மையில் என்ன செய்தி பகிரப்படுகிறது என்பதை வாட்ஸப் நிறுவனம் கண்காணிக்க இயலாது. அப்படியே இடைமறித்தாலும் தினமும் பகிரப்படும் கோடிக்கணக்கான செய்திகளை உறுதிப்படுத்துவதும் இயலாத காரியம். தற்போது ஒரு செய்தியை ஐந்து பேருக்கு மேல் பகிர முடியாது என்ற கட்டுப்பாடு எந்த விதத்திலும் வதந்திகளைத் தடுத்து நிறுத்த முடியாது. இதையெல்லாம் தடுத்த நிறுத்தவே முடியாதா என்றால் வழி இருக்கிறது.

ஒரு செய்தியை அனுப்பும்போது அது எந்தத் தொலைபேசியிலிருந்து வந்தது என்று தெரியும். ஆனால், அதனை இன்னொருவருக்குப் பகிரும்போது முதலில் அனுப்பியவரின் எண் தெரியாது. இதுதான் பிரச்சினையே. இதனை மாற்றும் வகையில் எந்தச் செய்தியையும் பகிரும்போது இதுவரை அதனை ஒவ்வொரு படியாகப் பகிர்ந்தவர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் வெளிப்படையாகத் தெரியும் வகையிலோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுலபமாகக் கண்டுபிடிக்கும் வகையிலோ வழி செய்ய வேண்டும்.

இப்படி ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தால், ஒரு செய்தியோ வீடியோவோ ஆயிரம் நபர்கள் கடந்து பகிரப்பட்டிருந்தாலும் ஆரம்பம் எங்கிருந்து என்பதைக் கண்டறிய முடியும். இதற்கு வழிசெய்தாலே தாங்கள் சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்கப்படுவோம் என்பதால் வதந்திகளைப் பரப்புவர்களது அட்டகாசம் வெகுவாகக் குறைந்துவிடும்.

- ஸ்ரீஅருண்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x