

உணவு வகைகளைச் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருப்பது இயல்பானது. ஆனால், சுவையைக் கொடுக்கும் உணவு வகைகள் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அப்படிச் சுவையோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பரிசளிக்கும் உணவு ரகங்களைப் பட்டியலிட்டால் முன்வரிசையில் நிற்பது கோங்குரா!
நம்மூரில் புளிச்சக் கீரை! ஆந்திராவில் கோங்குரா! தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தாலும் பக்கத்து மாநிலமான ஆந்திராவின் பிரதான உணவு என்று முதன்மைப்படுத்தும் அளவுக்கு அங்கு கோங்குராவின் பயன்பாடு மிக அதிகம்.
மேசை உணவு: ஆந்திர இல்லங்களின் உணவு மேசைகளில் தவறாமல் இடம்பெறக்கூடிய உணவுப் பொருள் கோங்குரா. எந்த உணவைச் சாப்பிட்டாலும் கோங்குராவால் செய்யப்பட்ட தொடு உணவு வகைகளின் ஆதரவில்லாமல் அவர்களுக்கு உணவு ருசிப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஆந்திர மக்களின் உணவியலில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது கோங்குரா. எப்படியெல்லாம் சமைக்க முடியுமோ, அப்படி அனைத்து வகைகளிலும் சமைத்து, சுவைகூட்டிப் பரிமாறுகின்றனர்.
புளிப்புச் சுவையைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் கோங்குரா, புளிப்பின் மருத்துவக் குணங்களை நமக்குப் பரிசளிக்கக்கூடியது. இயற்கையான புளிப்போடு எந்தச் சுவையைக் கூட்டினாலும் நாவின் சுவை மொட்டுகளுக்கு இன்பம் அளிக்கும் என்கிற எண்ணத்தில் கோங்குராவோடு வெல்லம், நாட்டுச் சர்க்கரை, மிளகு, வேறு சில அடிப்படை உணவுப் பொருள்கள் சேர்த்து வெவ்வேறு சுவைகளில் கோங்குரா உணவுகள் அங்கு பிறப்பெடுக்கின்றன.
ஆந்திராவின் எந்த உணவகத்துக்குச் சென்றாலும் கோங்குராவில் பல்வேறு ரகங்களைச் சுவைக்க முடியும். உப்பு பரிமாறுவதைப் போல கோங்குராவால் செய்த உணவு வகைகள் தன்னிச்சையாக உணவகங்களின் மேசைகளை அலங்கரிக்கின்றன. ஆந்திராவின் எந்த மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்டாலும் கோங்குராவைச் சுவைக்க மறந்துவிடாதீர்கள். ஒரே கோங்குரா தான்… ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு முறையில் கோங்குராவைப் பரிமாறுகின்றனர்.
ஆந்திராவின் கோங்குரா உணவு வகைகள்
அவித்த கோங்குரா, சின்ன வெங்காயம், மிளகு, நாட்டுப் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் கோங்குரா சூப் நோயிலிருந்து மீண்டவர்களுக்குத் தெம்பைக் கொடுக்கக்கூடியது. கோங்குராவோடு உளுந்து, மிளகுக் கூட்டி தயாரிக்கப்படும் துவையல், சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதற்கான அற்புத சேர்மானம். கோங்குரா கடையலை முதல் பிடி சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிட சுவையின்மை பிரச்சினை விரைவில் மறையும். செரிமானத் தொந்தரவு இருப்பவர்கள் அவ்வப்போது சேர்க்க வேண்டியது கோங்குரா சட்னியை.
குண்டூர் கோங்குரா ஊறுகாய்: காரப் பிரியர்கள் குண்டூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோங்குரா ஊறுகாயைச் சுவைக்கத் தவறாதீர்கள். புளிப்பும் கார்ப்பும் கலந்த அதன் சுவை, செரிமான சுரப்புகளைத் தூண்டி பசி உணர்வை மேம்படுத்தி செரிமானத்தில் முக்கியப் பங்காற்றும்.
மருந்தாகும் கோங்குரா: கோங்குராவால் செய்யப்பட்ட உணவு வகைகளோ செரிமானத்தைச் சீராக்கும் சிறப்பு மருந்து. பயண உணவு வகைகளில் எவ்விதப் பிரச்சினைகளையும் கொடுக்காத தனித்துவமான உணவு கோங்குரா. ஆண்களுக்கு வீரியத்தைக் கொடுக்கும் உணவுப் பொருளாகவும், பொதுவாக உடலுக்கு வலிமையை அளிக்கும் மருந்தாகவும் கோங்குராவைக் குறிப்படலாம். ரத்த அழுத்த நோயாளர்களின் உணவு முறையில் தவறாமல் இடம்பெற வேண்டிய கீரையும் இதுவே.
உணவு வகைகளுக்கு இயற்கையான நிறத்தை வழங்கவும் கோங்குராவைப் பயன்படுத்துகின்றனர். அசைவ உணவு வகைகளோடு நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்வது சிறப்பான உணவியல் பழக்கம். அந்த வகையில் அசைவ உணவு தயாரிப்புகளில் பொருந்திப்போகும் கோங்குராவுக்கு ஆந்திராவில் பெரும் மரியாதை. கோங்குராவின் உதவியுடன் செய்யப்படும் மதிப்பு கூட்டுப் பொருள்கள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
பண்டிகைக் கால உணவாக அல்லாமல், முப்பொழுதும் கோங்குரா ரக உணவு வகைகள் ஆந்திர மக்களின் உணவியலில் அழுத்தமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. கட்டுச்சாத வகைகளுக்குக் கோங்குரா சட்னியைத் தொட்டுச் சாப்பிட அமிர்தமாக இருக்கும்! நெல்லூர் அருகில் சாப்பிட்ட தயிர்சாத கோங்குரா காம்போவின் சுவை பல மாதங்களைக் கடந்தும் நினைவைவிட்டு அகல மறுக்கிறது.
நமது பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பேசப்பட்ட புளிச்சக் கீரையைப் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் கொண்டாடுகின்றனர்! நாமும் அதன் மகிமையை உணர்ந்து அடிக்கடி உணவாக்குவோம்!
கட்டுரையாளர், சித்த மருத்துவர். தொடர்புக்கு: drvikramkumarsiddha@gmail.com