Published : 30 Jul 2018 09:48 AM
Last Updated : 30 Jul 2018 09:48 AM

பஜாஜ் நிறுவனத்துக்கு கை கொடுத்த கேடிஎம்!

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பெரும் பாலும் கோலோச்சுபவை ஜப்பானிய நிறுவனங்கள்தான். ஆரம்பத்தில் இந்தியாவில் கால் பதிக்க இந்திய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்த ஜப்பானிய நிறுவனங்கள் பின்னாளில் கூட்டணியை முறித்துக் கொண்டு தன்னிச்சையாக களம் இறங்கிவிட்டன.

இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தமட்டில் டிவிஎஸ்ஸுடன் கூட்டு சேர்ந்த சுஸுகி, ஹீரோ மற்றும் கைனடிக் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த ஹோண்டா, பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்த கவாஸகி, யமஹா- எஸ்கார்ட்ஸ் கூட்டணி ஆகியவை அனைத்துமே முறிந்துவிட்டன. இந்த கூட்டணி முறிவால் இரண்டு இந்திய நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன. ஒன்று கைனெடிக் மற்றொன்று ராஜ்தூத் மோட்டார் சைக்கிளை தயாரித்த எஸ்கார்ட்ஸ்.

மற்ற இந்திய நிறுவனங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தட்டுத் தடுமாறி நிலைத்துவிட்டன. ஆனால் இவை அனைத்துமே ஒரு காலத்தில் தங்களின் கூட்டு நிறுவனமான ஜப்பான் நிறுவனங்களுடைய போட்டியை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஸ்கூட்டர்  தயாரிப்பில் முன்னணியில் இருந்த பஜாஜ் நிறுவனம் கவாஸகியுடன் இணைந்து மோட்டார் சைக்கிளைத் தயாரித்தது. அந்நிறுவனத்துடனான கூட்டு முறிந்த பிறகு சொந்த முயற்சியில் பாக்ஸர், பல்சர் என தனி பிராண்டுகள் மூலம் சந்தையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இப்போது அந்நிறுவனத்துக்கு பெருமளவு கைகொடுத்து வருகிறது மற்றொரு வெளிநாட்டு நிறுவன மோட்டார் சைக்கிள். அது ஆஸ்திரியாவைச் சேர்ந்த கேடிஎம் பைக்குகள்தான். கடந்த 8 ஆண்டுகளாக இந்நிறுவனத்துக்கு கேடிஎம் பைக்குகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 1,700 கோடியாகும்.

2007-ம் ஆண்டு ஆஸ்திரியாவைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தில் 14.5 சதவீத முதலீடு செய்தது பஜாஜ். நஷ்டத்தில் இயங்கி வந்த இந்நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளிலும் நஷ்டத்தையே சந்தித்தது. ஆனால் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனத்துக்கு ஏறுமுகம்தான். இந்நிறுவனத்தில் முதலீடுகளை தொடர்ந்து அதிகப்படுத்தி வந்த பஜாஜ் தற்போது இந்நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 2017-ம் ஆண்டு மட்டும் நிறுவனத்தில் உள்ள பங்குகளுக்கான லாபமாக இந்நிறுவனத்துக்கு ரூ 382 கோடி கிடைத்துள்ளது.

வியன்னா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கேடிஎம் பங்குகள் கடந்தசில ஆண்டுகளாகவே ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 148 கோடி டாலராக உள்ளது. இதில் 48 சதவீத பங்குகளை வைத்துள்ள பஜாஜ் நிறுவனத்தின் பங்குகளுக்கான மதிப்பு ரூ. 4,900 கோடியாகும்.

இந்நிறுவனத்தில் பஜாஜ் நிறுவனம் மேற்கொண்ட முதலீடு ரூ. 1,600 கோடி முதல் ரூ. 1,700 கோடி வரையாகும். லாபம் மற்றும் டிவிடெண்ட் வகையில் நிறுவனத்துக்கு கிடைத்த தொகை ரூ. 1,700 கோடி. ஜப்பானிய நிறுவனமான சுஸுகி மத்திய அரசு நிறுவனமான மாருதி உத்யோக் லிமிடெட்டுடன் இணைந்து கார்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது 56 சதவீத பங்குகள் சுஸுகி நிறுவனம் வசம் உள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் ராயல்ட் மற்றும் டிவிடெண்ட் இந்தியாவை விட்டு ஜப்பானுக்கு செல்கிறது.

அதேபோல ஆஸ்திரிய நிறுவனத்தில் பஜாஜ் செய்த முதலீடு காரணமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்குள் வருகிறது. மாருதி நிறுவனத்தின் லாபம், டிவிடெண்ட் அதிகமாக இருப்பதால் அதிக அளவு தொகை சுஸுகி நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. 2017-18-ம் நிதி ஆண்டில் மட்டும் சுஸுகி நிறுவனத்துக்கு கிடைத்த தொகை ரூ. 5,575 கோடியாகும்.  இதேபோல பஜாஜ் நிறுவனத்துக்கு கேடிஎம் முதலீடு மூலம் கடந்த ஆண்டு கிடைத்ததொகை ரூ. 600 கோடியாகும். 

2017-ம் ஆண்டில் கேடிஎம் நிறுவனம் 2,38,408 மோட்டார் சைக்கிளை விற்றுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீத வளர்ச்சியாகும். இதனால் பஜாஜ் நிறுவனத்துக்குக் கிடைத்த லாப அளவும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கேடிஎம் பிராண்டு மோட்டார் சைக்கிளை மகாராஷ்டிர மாநிலம் சக்கனில் உள்ள ஆலையில் பஜாஜ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு 98,132 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் தயாரித்தது. இதில் உள்நாட்டில் 46,321 மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனையாயின.

53,211 மோட்டார் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஜப்பானிய நிறுவனமான கவாஸகி போனாலும் இப்போது ஆஸ்திரியாவின் கேடிஎம் நிறுவனம் பஜாஜுக்கு கை கொடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x