Last Updated : 16 Jul, 2018 11:08 AM

 

Published : 16 Jul 2018 11:08 AM
Last Updated : 16 Jul 2018 11:08 AM

சரியும் ஃபோர்டிஸ் சாம்ராஜ்யம்

சீட்டுக் கட்டிலுள்ள சீட்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு கோபுரம் போல அமைக்கும் விளையாட்டை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கண்டிருக்கலாம், நீங்களே விளையாடிக்கூட பார்த்திருக்கலாம். அத்தகைய கோபுரங்களை எல்லா நேரங்களிலும் சரியாக அமைத்துவிட முடிவதில்லை. ஒரு நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்துவதென்பதும் சீட்டுக் கட்டு கோபுர விளையாட்டைப் போன்ற காரியம்தான். இதில் எல்லா நிறுவனங்களும் வெற்றி பெற்று விடுவதில்லை.

சீட்டுக் கட்டு விளையாட்டின் வெற்றி, கோபுரத்தை அமைத்த சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் ஒரு நிறுவனம் தொடர்ந்து தனது லாபத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தால்தான் வணிகத்தில் வெற்றிபெற முடியும். இப்படி மூன்று தலைமுறைகளாக ரான்பாக்ஸி, ரெலிகேர், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் என படிப்படியாக, வெற்றிகரமாக கட்டப்பட்ட ஒரு வணிக சாம்ராஜ்யம் ஒரு சீட்டுக் கட்டு விளையாட்டு கோபுரம்போல் தற்பொழுது சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.

1937-ம் ஆண்டில் ரஞ்சித், குர்பாக்ஸ் என்ற இருவரால் ஆரம்பிக்கப்பட்ட ரான்பாக்ஸி நிறுவனம் கடன் சுமையில் விழுந்ததைத் தொடர்ந்து பாய் மோகன் சிங் என்ற தொழிலதிபர் அந்த நிறுவனத்தை வாங்குகிறார்.

இங்கிருந்துதான் பர்வீந்தர் சிங். மஞ்சித் சிங், அனல்ஜித் சிங் என்ற அடுத்த வணிகத் தலைமுறையும், மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் என்ற அதற்கடுத்த வணிகத் தலைமுறையும் உருவாகிறது. நிறுவனத்தின் வீழ்ச்சி மூன்றாம் தலைமுறையான மல்விந்தர், ஷிவிந்தர் காலத்தில்தான் தொடங்கிறது. அமெரிக்காவின் டியூக் பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டம் பெற்ற இருவராலும் இந்த நிறுவனத்தை ஏன் திறம்பட நடத்தமுடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.

என்ன பிரச்சினை?

தங்களது தந்தையான பர்விந்தர் சிங்கின் மறைவுக்குப் பிறகு ரான்பாக்ஸி மற்றும் ரெலிகேர் நிறுவனங்களின் பொறுப்புகளை அண்ணன் மல்விந்தரும், தம்பி ஷிவிந்தரும் ஏற்கிறார்கள். 2001-ம் ஆண்டில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தையும் தொடங்குகிறார்கள். நிதிச் சேவைகள் நிறுவனமான ரெலிகேர் ஒரு வங்கியாக மாற வாய்ப்புள்ள அளவுக்கு முன்னேற்றமடையத் தொடங்குகிறது. போர்டிஸ் ஹெல்த்கேர் பல நாடுகளில் தனது கிளைகளை பரப்பி வெற்றிகாண ஆரம்பிக்கிறது. 2008-ம் ஆண்டு ரான்பாக்ஸி நிறுவனம் 460 கோடி டாலருக்கு ஜப்பானைச் சேர்ந்த டெய்ச்சி சாங்யோ நிறுவனத்துக்கு விற்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் சறுக்கல்கள் ஆரம்பமாகின்றன.

நிறுவனம் விற்கப்பட்டாலும் ரான்பாக்ஸியின் தலைமைச் செயல் அதிகாரியாக மல்விந்தர் சிங் தொடர்ந்தார். இந்த நிலையில் தங்களது தர நிர்ணய கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யாத மருந்துகளை ரான்பாக்ஸி நிறுவனம் விற்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் ரான்பாக்ஸியின் 30 மருந்துகளுக்கு தடை விதித்தது. மருந்துகளைப் பற்றிய தவறான தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறி ரான்பாக்ஸி நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

டெய்ச்சி சாங்யோவுக்கும், மல்விந்தர் சிங்குக்கும் இதுதொடர்பாக எழுந்த சச்சரவுகளைத் தொடர்ந்து மல்விந்தர் 2009-ம் ஆண்டு பதவி விலகினார். 2013-ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 50 கோடி டாலரை அபராதமாக டெய்ச்சி சாங்யோ செலுத்தியது.

2008-ம் ஆண்டில் ரான்பாக்ஸி நிறுவனத்தின் மருந்துகள் தடை செய்யப்பட்டாலும், 2006-ம் ஆண்டிலேயே விதிமுறை மீறல்கள் குறித்த குற்றசாட்டுகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் முன்வைத்திருந்தது. ஆனால் இதுகுறித்த தகவல்களை தங்களுக்குத் தெரிவிக்காமல் ரான்பாக்ஸி நிறுவனத்தை விற்றுவிட்டதாகக் கூறி டெய்ச்சி சாங்யோ நிறுவனம், சிங் சகோதரர்கள் மீது சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் புகார் தெரிவித்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 2014-ம் ஆண்டு சன் பார்மா நிறுவனத்துக்கு ரான்பாக்ஸியை தாங்கள் வாங்கியதைவிடக் குறைந்த தொகையான 320 கோடி டாலருக்கு டெய்ச்சி சாங்யோ விற்றது. 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிங்கப்பூர் நடுவர் மன்றம் 38.5 கோடி டாலரை சிங் சகோதரர்கள், டெய்ச்சி சாங்யோ நிறுவனத்துக்கு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர். இந்தத் தொகையை பெற்றுத்தருமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெய்ச்சி சாங்யோ முறையிட்டது. டெய்ச்சி சாங்யோ நிறுவனத்துக்கு சிங் சகோதரர்கள் ரூ.3,500 கோடி அளிக்கவேண்டும் என 2018-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஃபோர்டிஸ் நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்து சிங் சகோதரர்கள் விலகினர். 2014-15 காலகட்டத்தில் இருந்து போர்டிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைய ஆரம்பித்தது. ஆனால் சிங் சகோதரர்கள் ராஜினாமா செய்தபிறகும் சிக்கல்கள் குறையவில்லை. ஏனெனில் அதற்கு முன்பாக அவர்கள் செய்த காரியங்களின் விளைவுகளை ஃபோர்டிஸ் காண ஆரம்பித்தது.

மேலும் சிக்கல்கள்

2017-18 நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை ஃபோர்டிஸ் நிறுவனம் அறிவித்ததும் அடுத்த சிக்கல்கள் ஆரம்பித்தன. மார்ச் காலாண்டில் மொத்தமாக ரூ.993 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாகவும், இதில் பிற நிறுவனங்களுக்கு கடன் அளித்தவகையில் (இன்டர் கார்ப்பரேட் டெபாசிட்) ரூ.445 கோடி நஷ்டம் அடைந்ததாகவும், இதற்கான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபோர்டிஸ் தெரிவித்தது.

இதுகுறித்து லுத்ரா அண்ட் லுத்ரா சட்ட நிறுவனம் நடத்திய விசாரணையில், சிங் சகோதரர்களுக்கு சொந்தமான 3 நிறுவனங்களுக்கு, போர்டிஸ் இயக்குநர் குழுவை கட்டாயப்படுத்தி ரூ.445 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது திரும்பி வரவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சிங் சகோதரர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் லுத்ரா அண்ட் லுத்ரா குற்றம் சாட்டியுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை செபி மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் ஃபோர்டிஸ் சமர்ப்பித்திருக்கிறது.

இந்த கடன் வழங்குவது தொடர்பாக தன்னிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை என ஷிவிந்தர் சிங் கூறியிருக்கிறார். ஆனால் எல்லா முடிவுகளும் சம்பந்தப்பட்ட குழுக்களின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டதாக மல்விந்தர் சிங் கூறியிருக்கிறார்.

ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகுதான் சிங் சகோதரர்களின் நிலை என்னவாகும் எனத் தெரியவரும்.

ஆனால் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் நிலை அதற்கு முன்பாகவே தெரிந்துவிட்டது. தொடர் நஷ்டத்தில் உழலும் ஃபோர்டிஸ் நிறுவனம் விற்கப்பட இருக்கிறது. மலேசியாவை சேர்ந்த ஐஹெச்ஹெச் ஹெல்த்கேர் பெஹார்ட் நிறுவனம் ஃபோர்டிஸை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

ரான்பாக்ஸி நிறுவனத்தை விற்பதற்கு முன்னால் அதிலுள்ள சிக்கல்களை டெய்ச்சி சாங்யோ நிறுவனத்துக்கு தெரிவிக்காததன் மூலம், ஒரு நிறுவனத்தை விற்கும்பொழுது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை அறத்தையே சிங் சகோதரர்கள் காற்றில் பறக்கவிட்டார்கள். ரூ.445 கோடி அளவுக்கு தொகையை இயக்குநர் குழுவை கட்டாயப்படுத்தி தங்கள் நிறுவனங்களுக்கு மாற்றிக்கொண்ட அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். குற்றசாட்டுகள், வழக்குகள் என நிறுவனம் அலைகழிக்கப்பட்டது வீழ்ச்சிக்கான ஒரு காரணம் என்றால், தாங்கள் கற்றுக்கொண்ட மேலாண்மையை தங்கள் நிறுவனத்திலேயே சிங் சகோதரர்கள் அமல்படுத்தாதது மற்றொரு காரணம்.

சிங் சகோதர்களின் தந்தை பர்வீந்தர் சிங் உயிருடன் இருக்கும்பொழுது தனது மகன்களை இயக்குநர் குழுவிலேயே அனுமதிக்கவில்லை. சிங் சகோதரர்கள் இயக்குநர் குழுவுக்குள் வந்தால் என்ன ஆகும் என்கிற தீர்க்கதரிசனம் பர்வீந்தர் சிங்குக்கு அப்பொழுதே இருந்திருக்கலாம். 56 வயதில் துரதிர்ஷ்டவசமாக புற்று நோயால் அவர் இறந்துபோனதும் இந்த குழுமத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x