

எப்போதும் அனைத்திலும் வெற்றி காணும் மன்னர் கிருஷ்ண தேவராயா வெங்கடேஸ்வர பெருமாள் மீதான தனது பக்தியையும், கவிதை இயக்கியத்தின் மீதான விருப்பத்தையும் இணைத்து ‘ஆமுக்த மால்யதா’ என்ற நூலை இயற்றியுள்ளார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் வாழ்க்கையை விளக்கும் காவியமாகவும் இந்நூல் விளங்குகிறது. திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் மீது தீவிர பக்தி கொண்ட மன்னர் கிருஷ்ண தேவராயா, ஏழுமலையானுக்காக பல கிராமங்கள், வைர நகைகள், தங்க ஆபரணங்கள் வழங்கியுள்ளார். அவரது அரசவையில் சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்துவந்தார்.
ராயாவின் தாய்மொழி தெலுங்கு. பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களால் ஈர்க்கப்பட்ட ராயா, தினமும் ஆழ்வார் பாசுர வரிகளைப் படித்து அதன் நுணுக்கம் மற்றும் சாராம்சத்தில் ஒன்றிப் போனார். ஏகாதசி விரதம் மேற்கொண்ட ராயாவுக்கு விஜயவாடா அருகே ஸ்ரீகாகுளம் கிராமத்தில் ஆந்திர விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கிறது. அவரது கட்டளைப்படி ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் – கோதா தேவியின் திருமணத்தை மையமாக வைத்து தெலுங்கு மொழியில் பாடல்கள் புனையத் தொடங்கினார் ராயா.