Last Updated : 16 Jul, 2018 11:06 AM

 

Published : 16 Jul 2018 11:06 AM
Last Updated : 16 Jul 2018 11:06 AM

சபாஷ் சாணக்கியா: இவர்களுக்கு உதவலாமா?

‘பிரச்சினை கொண்ட மனிதன், உண்மையே பேசாதவன், எப்பவும் கவலைப்படுபவன், முட்டாள் ஆகிய நான்கு பேர்களுக்கு உதவி செய்யக் கூடாது ' என்கிறார் சாணக்கியர்.

தம்பி, முதலில் ஒன்றைப் புரிஞ்சுக்கணும். தர்மம் செய்வது வேறு. உதவி செய்வது வேறு. ‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை' எனப் பிச்சையிடுவதை வரையறுக்கிறார் ஐயன் வள்ளுவர்.அதாவது சிரமத்தில் இருக்கும் ஏழைக்குப் பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல், பச்சாதாபப் பட்டு, சாப்பாடு போடுவது, துணிமணி கொடுப்பது. இத்யாதி..

ஆனால், இதைக் கூடக் கண்ணை மூடிக்கொண்டு செய்யக் கூடாதென்கிறது குறள். ‘தாளாற்றித் தந்த பொருளெல்லம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு ' எனும் குறளுக்கு உரை எழுதியவர்கள், பணத்தை வீணே அள்ளி விடக் கூடாதென்றும், அன்பற்றவர், குற்றம்புரிவோர், சோம்பேறி முதலானவர்களுக்கு கொடுக்கக் கூடாதென்றும் விளக்கம் கூறியுள்ளனர்.பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டுமில்லையா?

உழைக்கக் கூடிய வயதும் உடம்பும் உள்ளவர்களுக்குப் பிச்சை போடுவது சரியா?

அண்ணே, இதற்கே இப்படி என்றால், கடன் கொடுப்பது, வேலை கொடுப்பது, இடமாற்றம் கொடுப்பது போன்ற உதவிகளை , அவற்றைப் பெற இருப்பவரின் தரமறிந்து, மனமறிந்து குணமறிந்து செய்ய வேண்டுமல்லவா? அதைத் தான் வலியுறுத்துகிறார் சாணக்கியர். உலகில் யாரை எடுத்துக் கொண்டாலும் ஏதாவது பிரச்சினை இருக்கத் தானே செய்யும்? பிரச்சினையே இல்லாத மனிதன் இருக்க முடியாதே! ஆனால் சிலருக்கோ, அவர்களே தான் பிரச்சினை. அதாவது நாம் சொல்வது பிரச்சினை உள்ள மனிதர்களைப் பற்றியல்ல; பிரச்சினையான மனிதர்களைப் பற்றி! இவர்களுக்கு உதவப் போனால் நம்மையும் புதைகுழிக்குள் இழுத்து விடுவார்கள்.

வங்கியில், நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனுபவப்பட்டு இருப்பீர்கள்.ஒரு கடன் ஏற்கெனவே கெட்டுப் போய் விட்டால், அதற்குக் காரணம் அந்த வாடிக்கையாளரின் நிர்வாகத் திறமையின்மை போன்ற அவர் சார்ந்த காரணங்களே என்றால், அவருக்கு மேன்மேலும் கடன் கொடுக்க மாட்டீர்கள் அல்லவா?

அதே போல, இந்தப் பொய் பேசுபவர்களுக்கு உதவப்போய், பின்னர் வருத்தப்படுபவர்கள் பலர். எனது நண்பர் ஒருவரின் மனைவி. இளகிய மனம் படைத்த அந்தச் சகோதரி தம்மிடம் பழகுபவர்கள் என்ன சொன்னாலும் நம்பி விடுவார். அந்தச் சகோதரியின் வீட்டின் அருகில் குடியிருந்த ஒரு பெண்மணி இதைச் சரியாகப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தார். வைரமுத்து சொல்வது போல, அவருக்கு மெய்யெல்லாம் பொய். சமயத்திற்கு ஏற்றார்ப்போல் எதையாவது சொல்லிப் பணம் பறித்து விடுவார்.

‘குழந்தைக்கு உடம்பு சரியில்லை, ஊரில் பாட்டி இறந்து போனாள் ' என அவள் சொல்வதைக் கேட்டால், நம்ம சகோதரி உருகி விடுவார்கள். ‘கடன் தான் .வீட்டுக்காரருக்கு இந்த மாதம் சம்பளம் வந்ததும் தந்து விடுவேன் ' எனச் சொன்னாலும், அது பாட்டிற்குக் கடன் ஏறிக் கொண்டேதான் இருக்கும்.

பாவம் அந்தச் சகோதரி.தம் தொழிலிலேயே தன் நேரத்தை எல்லாம் செலவிட்டுக் கொண்டிருந்த அவர் கணவருக்கு மனைவியுடன் உட்கார்ந்து பேச நேரம் இருப்பதில்லை. எனவே இந்தப் பக்கத்து வீட்டு அம்மாவாவது பேசுகிறாளே எனும் ஆறுதல் .முதலில் நூற்றுக்கணக்கில் ஆரம்பித்த கடன் பின்னர் ஆயிரக்கணக்கில் வளர்ந்து விட்டது.வெளியூர் செல்ல கணவன் வைத்திருந்த 25,000 ரூபாயை நம்ம சகோதரி அந்த அம்மாவை நம்பிக் கொடுக்க, அந்த அம்மா வீட்டையே காலி செய்து சென்றுவிட, லட்சரூபாய் நட்டமாக, வீட்டில் வெடித்தது பூகம்பம்.நம்ம சகோதரி எச்சரிக்கையாய் இருப்பது பின்கதை. தன் சௌகரியத்திற்காக நம்மைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் புல்லுருவிகளுக்குப் போய் உதவலாமோ?

அடுத்து சாணக்கியர் சொல்வது எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவனைப் பற்றி.. இன்று கவலைப்பட ஒன்றுமில்லையே என்று கூடக் கவலைப்படக் கூடியவர்கள் அவர்கள். நல்ல ஊருக்கு இடமாற்றம் வாங்கிக் கொடுத்தால் நன்றியுடன் இருக்க மாட்டார்கள். பணிப்பளு கூடுமோ என சந்தேகம் வந்து விடும். நட்புடன் இனிப்பு கொடுத்தால் கூடச் சுவையை ரசிக்க மாட்டார்கள்.கொஞ்சமாகச் சாப்பிட்டு மகிழ மாட்டார்கள்.நமக்கு இதை இவர் ஏன் கொடுக்கிறார், உள்நோக்கம் இருக்குமோ, சர்க்கரை வியாதியை உண்டாக்கப் பார்க்கிறாரோ என்றெல்லாம் யோசிப்பார்கள்.

அப்படி எதையும் எதிர்மறையாக யோசிப்பவர்களுக்கு உதவி என்னங்க பலன்? அவர்களும் திருப்தியடைய மாட்டார்கள். உங்களையும் ஏன் இவர்களுக்கு உதவினோம் என வருத்தப் படத்தான் வைப்பார்கள். கடைசியாக இந்த முட்டாள்கள். அவர்களுக்கு உதவுவது ஆபத்தை விளைவிக்கக் கூடியது. திறமையற்ற முட்டாளுக்குப் பதவி உயர்விற்கு சிபாரிசு செய்தால் என்னவாகும்? பின்னர் அவர் தவறு செய்யும் பொழுது உங்கள் நிலை என்ன? பைத்தியக்காரனிடம் ஆயுதத்தைக் கொடுக்க மாட்டீர்கள் இல்லையா?

ஐயா, உதவி செய்யுங்கள்.ஆனால் சாணக்கியர் சொல்வது போல இந்த நால்வருக்கும் செய்யாதீர்கள்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x