Last Updated : 13 Jul, 2018 11:13 AM

 

Published : 13 Jul 2018 11:13 AM
Last Updated : 13 Jul 2018 11:13 AM

அது ஒரு சலூன் காலம்!

 

பா

ரம்பரிய சலூன் கடைகளை உலகமயமாக்கம் விழுங்கி ஏப்பம் விட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வாயில் நுழைய முடியாத பெயர்களுடன் விதவிதமான பெயர்களுடன் நவநாகரிக சலூன்கள் இன்று தெருவெங்கும் வந்துவிட்டன. ஏதோ பெரிய நகரில் மட்டும் இந்த நிலை என நினைக்க வேண்டாம். ஊர்ப் புறத்திலும் அப்படித்தான் உள்ளது.

இன்று அவற்றின் பெயர்களை ஒழுங்காக உச்சரிப்பதே பெரும் சாதனைதான். லோரஞ், லோரியல், வாரன் டிரிகோமி, லா ரிய்னா, எசன்சுவல்ஸ் எனப் பெயர்கள் நீள்கின்றன. இன்னும் சிலவற்றின் பெயர்களின் அர்த்தம் புரிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் வைக்கப்பட்டதுபோல உள்ளன. ஒயெல்ஜி, சில்பிரீஸ், சலூன்புளோ, வர்வ், லைம் லைட் போன்றவற்றின் அர்த்தம், அவற்றைச் சூட்டியவர்களுக்காவது தெரியுமா?

30YTBugBoyjpg

நெருப்புடா என்பதுபோல ‘ப்ரீஸ் டா’ என்று ஒரு சலூனுக்குப் பெயர். பார்களை நினைவூட்டும் விதமாக ‘ஸியர் ஜீனியஸ்’, ‘பவுன்ஸ்’ போன்ற பெயர்களையும் காண முடிகிறது. ‘கணேஷ் சிகை அலங்காரக் கடை’, ‘முருகன் சிகை அலங்காரக் கடை’ போன்றவை எல்லாம் மலையேறிவிட்டன. ரஜினி, கமல், டிஸ்கோ, தல, தளபதி போன்ற பெயர்களுக்கும் மூடு விழா நடத்தி ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழகத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத ‘டோனி’ பெயரில் பல சலூன்கள் உள்ளன. கேப்டன் தோனியோ என நினைத்துக் கேட்டால், அது அவரல்ல என்கிறார்கள். ‘அப்ப யாரப்பா அந்த டோனி’ என்று கேட்டால், அந்தக் கடையில் வேலை செய்பவர்களிடம் அதற்கும் பதில் இல்லை.

இவற்றையெல்லாம் மீறி அத்தி பூத்தாற்போல 80-களை நினைவூட்டும் வகையில் சில சலூன்களின் பெயர்கள் உள்ளன. கிராப் சலூன், ரிச் கட்ஸ், சக்தி சலூன் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ‘கிராப் கட்’ என்பதை 40 வயதைக் கடந்தவர்கள் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

இன்று சலூன்களின் பெயர்ப் பலகையை ரஜினி, கமல் போன்றவர்கள் ஆக்கிரமிப்பதில்லை. இன்று அவற்றின் பெயர்ப் பலகையை மட்டுமல்லாமல், அந்தக் கடை களுக்குள்ளும் வெளியாட்களே ஆக்கிரமித்து நிரம்பி வழிகிறார்கள். இதனால் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள் சலூனின் சுவரிலிருந்தும் நம் மனத்திலிருந்தும் மறைந்துவிட்டார்கள்.

சலூனில் எந்தத் திசையில் திரும்பினாலும் அந்தப் பக்கமே நம் தலையைச் சில நிமிடங்கள் அசையாமல் இருக்கும்படி செய்ய நடிகைகளின் படங்கள் அன்று ஒட்டப்பட்டிருக்கும். முடி வெட்ட வந்தவர்களும் மெய்மறந்த நிலையில் அந்தப் படங்களில் லயித்துச் சிலையாகச் சில நிமிடங்கள் இருப்பார்கள். இன்று நடிகைகளுக்குப் பதில் பல அழகு சாதனப் பொருட்களை ஏந்தியபடி அயல் நாட்டு விளம்பர மாடல்கள் சலூன் சுவர்களில் செயற்கையாகச் சிரிக்கிறார்கள்.

அன்றைய நாட்களைப் போல் இன்று சலூன்களில் நாம் வியர்வையின் பிசு பிசுப்பை உணர முடிவதில்லை. ஒரு வேளை நாம் அண்ச்டார்டிகாவில் இருக்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்குப் பல கடைகள் குளிரில் உறைய வைக்கின்றன. 1980-90-களில் என்ன ஸ்டைல் சொன்னாலும் முடி திருத்துபவர் முடியாது என்று சொல்லாமல், அதை ஒரு சவாலாக ஏற்று முடி வெட்டுவார்கள். கண்ணாடியைப் பார்க்கும்போதுதான், நாம் சொன்னதற்கும் அவர்கள் வெட்டியதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தெரியும். அது தனி சோகக் கதை, பாஸ். ‘அட்டக்கத்தி’ தினேஷ் போன்று கைக்குட்டையால் தலையை மறைத்துக்கொண்டு ஆற்றாமையுடன் திரிந்தவர்கள் அன்று ஏராளம்.

இன்று அப்படியில்லை. சுருட்டை முடியை நேராக மாற்றுகிறார்கள். நேரான முடியைச் சுருட்டை முடியாக்குகிறார்கள். கறுப்பு முடியை பான்ப்ராக் எச்சிலில் முக்கி எடுத்த நிறத்தில் மாற்றுகிறார்கள். பாதி மொட்டை, பின் தலை மொட்டை, பக்கவாட்டு மொட்டை என விதவிதமாக இன்று மொட்டையடிக்கிறார்கள்.

அன்றைய நாட்களில், முடி திருத்துபவர்களுடன் இளைஞர்கள் பேசாத விஷயமே கிடையாது. முடி திருத்துபவர்களுக்கும் தெரியாத ரகசியமே கிடையாது. பெரும்பாலும் அவர்களே அன்றைய இளைஞர்களுக்குக் காதல் குருவாகவும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்தார்கள். எல்லா வயதினருடன் அவர்கள் நட்பு பாராட்டியது வியப்புக்குரியதே. சில வருடங்களுக்கு முன்பு வந்த ‘சென்னை-28’ படத்தில் சித்திரித்தது போன்ற நட்பை அன்று முடி திருத்துபவர்களுடன் இளைஞர்கள் கொண்டிருந்தனர்.

இன்று அவர்களுடன் வெறுமனே பேசுவதே பெரிய விஷயம்தான். இன்று பெரும்பாலும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவரே முடி திருத்துபவராக இருப்பதால், எப்படி முடி வெட்ட வேண்டும் என்பதைக்கூட சைகையால் உணர்த்தி, வேலைக்காரன் ரஜினியைப் போன்று ‘யெஸ்’, ‘நோ’ என்று சொல்லும் நிலையே உள்ளது. இறுதியில் பில்லைப் பார்த்து வாய்விட்டுத் திட்டக்கூட முடியாமல் வார்த்தைகளோடு சேர்த்து கோபத்தையும் விழுங்கிக்கொண்டு செல்லும் நிலை சோகமானதே.

இன்றைய நவீன சலூன் கடைகள் எல்லாவற்றையும் ஒரு சேர மாற்றிவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x