சுற்றுச்சூழல் குற்றங்களை எப்படிப் புரிந்துகொள்வது?

சுற்றுச்சூழல் குற்றங்களை எப்படிப் புரிந்துகொள்வது?
Updated on
1 min read

சுற்றுச்சூழல் குற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒரு வார்த்தை ஆகிவிட்டது. விதிமீறல்களின் பாதிப்பு வரம்பு கடந்து செல்கையில், அதைக் குற்றமாக அரசுத் துறைகள் அணுகவேண்டிய அவசியம் ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் சிட்டிசன் கன்ஸ்யுமர் அண்ட் சிவிக் ஆக் ஷன் குரூப் (சி.ஏ.ஜி.) என்கிற அமைப்பு இது சார்ந்த ஒரு விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நிகழ்வை நேற்று (27.12.24) நடத்தியது.

“ஒருவரின் உடலையோ, உடைமையையோ பாதிக்கும் செயல்பாடு சுற்றுச்சூழல் குற்றம் என்கிற புரிதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இத்துடன், அவர் வாழும் சுற்றுச்சூழலையே ஓர் உடலாக, உயிராகப் பாவித்து, அதற்கு ஏற்பட்ட பாதிப்புகளும் சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கல்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அளவுக்குத் தீர்வு காணும் முறை வெளிநாடுகளில் மேம்பட்டுள்ளது.

உதாரணமாக, கங்கை ஆற்றில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப் படும் மக்களோடு, அந்த ஆற்றையும் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர்போலக் கருத வேண்டும். அதன் மூலமாக மட்டுமே, பாதிப்பை முழுமை யாகவும் துல்லியமாகவும் சீரமைக்க முடியும். நம் நாட்டிலும் அத்தகைய புரிதல் ஏற்பட வேண்டும்.

இதில் காவல்துறையின் பங்களிப்பு சிறப்பான தீர்வுகளை வழங்க முடியும். ஆனால் நடைமுறையில் சுற்றுச்சூழல் சார்ந்த புகார்களில் நடவடிக்கையில் இறங்குவதற்கு அவர்களுக்குப் பல தடைகள் உள்ளன. சுற்றுச்சூழல் குற்றம் நிரூபிக்கப்படுவதும் கடினமாக உள்ளது.

நகரங்களைவிட, கிராமப்புறங்களில் விதிமீறல்கள் எளிதாக நடக்கின்றன. கண்காணிப்பு அமைப்பு வலுவாக இல்லாததே காரணம்” என சிஏஜியின் மூத்த ஆய்வாளர் ஏ. சங்கர் பிரகாஷ் குறிப்பிட்டார். இந்த அமைப்பின் செயல் இயக்குநர் சரோஜா, ஆய்வாளர் கே.ராமலிங்கம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், சென்னை மாநகராட்சி போன்றவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பேசினர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in