தேடுங்கள் கிடைக்கும்! | பாற்கடல் 2

தேடுங்கள் கிடைக்கும்! | பாற்கடல் 2
Updated on
2 min read

நல்ல அழகான படித்துறை. அகல மான, தலை குப்புற இறங்கும் பெரிய படிகள். கீழே கடல்போல விரிந்து சுழித்தோடும் கோதாவரி ஆறு. எதிரே இரட்டைப்பாலம். பக்கத்திலிருந்த கோயில்களைப் பார்ப்பதற்காக காரில் நீண்ட பயணம். குழந்தைகள் ஆற்றைப் பார்த்ததும் கொஞ்ச நேரம் நின்று போகலாம் என்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் காரை ஓரம் கட்டிவிட்டுப் பாதிப் படிகளில் நின்று விரிந்தோடும் ஆற்றைப் பார்ப்பதே பேரானந்தமாக இருந்தது.

ஆற்றின் மீதிருந்த பெரிய பாலத்தில் ரயில் ஒன்று மெதுவாகப் போனது. அதைப் பார்த்த பெரிய குழந்தை சொன்னாள், ``அப்பா, எவ்வளவு பெரிய ‘மவுத் ஆர்கன்!” என்று. பாலத்தின் மீது செல்லும் ரயில் அவளுக்கு மவுத் ஆர்கன் போலத் தெரிந்திருக்கிறது. அதைக் கேட்டதும் சின்னவள் சொன்னாள், “ஆமாம் ஒரு ராட்சசன்தான் இதை வாசிக்க முடியும்” என்று. எனக்கு அதைக் கேட்தும், `என்ன அழகான கற்பனை’ என்று வியப்பு மேலிட்டது.

ஒரு கணம் படிகளை விழுங்கி, ஆறு மேலே ஏறிவந்து கால்களை நனைப்பதுபோல ஒரு மாயத் தோற்றம். கூடவே `மோக முள்’ நாவலில் வாழைமட்டையின் குறுக்கே வெட்டினால் தெரியும் சின்னஞ் சிறிய சதுர அறைகளைக் குறித்து தி.ஜானகிராமன் சொல்லும், `இவை, ஒரு பிரம்மாண்ட வீணையின் மேற்புறம் போல உள்ளது. இதை வாசிக்க கிண்ணர கிம்புருடர்களால்தான் முடியும்’ என்று. இது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு இப்படி இயல்பாகவே தோன்றுவதுதான் ஆச்சரியம்.

எங்கள் சிறுவயதில் பெரும்பாலும் குழந்தைகள் செப்புச் சட்டி பானைகள் வைத்து, பெரியவர்கள் போலவே சோறு பொங்கி விளையாடுவார்கள். அதற் கென்று மரத்தில் கடசல் முறையில் செய்யப்பட்ட பானை, சட்டி, அடுப்பு, கரண்டி, தட்டு என்று ஒரு செட் விற்பார்கள்.

அம்பாசமுத்திரம் கடசல் செப்புகள் இதற்குப் பேர் பெற்றவை. அந்தச் செப்புகளை வைத்து நிஜம் போலச் சமைத்து, பொய் விருந்து உண்ணுகிற குழந்தைகளை ஒளிந்தி ருந்து பார்க்கச் சுவாரசியமாக இருக்கும். அவர்கள் உபசரிப்பையும் சாப்பிடாமல் சாப்பிடும் அழகையும் நாம் அவர்களிட மிருந்து கற்றுக் கொள்ளலாம். இன்றோ அலைபேசி விளையாட்டுகள்தான்.

ஆனால் அதை அவர்கள் கெட்டிக் காரத்தனமாகவும் விளையாடுகிறார்கள். அலைபேசியோ, மடிக்கணினியோ, ஸ்மார்ட் டிவியோ நமக்குத் தெரியாத தெல்லாம் தெரிந்திருக்கிறது. எல்லா வித ஆப்ஸுகளும் அத்துப்படி. நமக்குத் தெரியாத நுணுக்கங்களை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அந்த விஷயத்தில் அவர்களே நமக்கு ஆசான்கள். என்ன ஒன்று நாம் சந்தேகமோ உதவியோ கேட்கிறபோது அவர்களுக்குச்
சொல்லித் தர விருப்பம் வேண்டும்.

போய் கூகிளில் தேடு என்று சொல்லி விட்டு விளையாட்டு மும்முரத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் மனசு வைத்தால் கூகுளில் தேடித்தான் கண்டு பிடிக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் குழந்தைகள் அப்படித்தான். நான் சிறுவனாக இருக்கையில், நல்ல கோடை வெயிலில் பெரியவர்கள் ஒய்வெடுக்கிற நேரம், ஒளிந்து கண்டுபிடிக்கும் `கள்ளன் போலீஸ்’ விளையாடிக் கொண்டிருந்தோம். என் அம்மா பகலில் தூங்க மாட்டார். புத்தகம் படிப்பார். தென்னை ஓலையைக் கிழித்து வாரியல் செய்வார். இல்லையென்றால் அரைப்படி அரிசி சேர்த்து அரைத்து முறுக்குப் பிழிந்து கொண்டிருப்பார்.

அப்போது மட்டும் நாங்கள் உதவிக்கு வருவதுபோல் பக்கத்தில் போய் அவர் சுடுகிற முறுக்குக்குக் கை நீட்டுவோம்.
ஒருநாள் பழைய துணி கிழிசலைத் தைக்க உட்கார்ந்திருந்தார். வயதாகி விட்டதால் ஊசியில் நூல் கோக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் அவர் பக்கம் போகையில், ``இதைக் கொஞ்சம் கோத்துக் கொடுடே ராசா” என்று கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள், ``போம்மா, வேற வேலை யில்லை” என்று விளையாட்டு மும்முரத்தில் ஓடி, ரகசியமான இடம் தேடி ஒளிந்து கொண்டிருந்தோம்.

அம்மா எப்படியோ ஊசியில் நூல் கோத்துவிட்டார். என்னையும் கண்டறிந்து விட்டார்கள். நான் வெளியே வந்து, ``நான் கோத்துக் கொடுக்கலைன்னு அவங்ககிட்ட காட்டிக் கொடுத்தியா” என்று சண்டை போட்டேன். ``நானேதான் கோத்தேன், நான் காட்டிக் கொடுக்கலை, விளையாட்டுல குறுக்க வருவேனா, தானே கண்டு பிடிச்சாத்தான் விளை யாட்டு நல்லா ருக்கும்” என்று சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

கல்லூரிக் காலத்தில் படித்த கட்டுரையில், ஒரு கப்பல் நடுக்கடலில் வழி தப்பிவிடும். கையிலிருந்த குடிநீரெல்லாம் காலியாகி தாகத்தில் செத்துக் கொண்டிருப்பார்கள். நல்ல வேளையாகச் சில கிலோ மீட்டர் தூரத்தில் இன்னொரு கப்பல் தென் படும். `உதவி, அவசரமாகத் தண்ணீர் தேவை’ என்று அதற்குச் செய்தி அனுப்புவார்கள்.

அதற்கு அங்கிருந்து, ‘நீங்கள் நிற்கும் இடத்திலேயே உங்கள் வாளிகளால் முகருங்கள்’ என்று பதில் வரும். முதலில் புரியாவிட்டாலும் ஒரு வாளியைக் கடலில் இறக்கி நீர் மொண்டு பார்ப்பார்கள். அருமையான தண்ணீராக இருக்கும். அது அமேசான் நதி கடலில் கலக்கிற இடம். பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நல்ல தண்ணீர் கடலுக்குள் புகுந்திருக்கும். அந்தப் பாடம் எனக்கு மறக்காது. `கணினியின் புதிர்களுக்குக் கணினியிலேயே தேடுங்கள் கிடைக்கும்’ என்று இப்போது குழந்தைகள் சொல்லித் தருவதும்தான்!

அமிழ்தெடுப்போம்

- kalapria@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in