Published : 25 May 2018 11:04 AM
Last Updated : 25 May 2018 11:04 AM

திரைப் பள்ளி 06: விருமாண்டி கமலுக்கே இவர் தாத்தா!

ஒரு ஊரில் ஒரு ராஜா, அவனுக்கு ஒரு ராணி என்று தொடங்குவது மரபார்ந்த கதை சொல்லும் முறை. தொடக்கத்தில் இலக்கியமும் இதை வைத்துத்தான் வண்டியோட்டி வந்தது. ஆனால், புகழ்பெற்ற ஜெர்மானிய உளவியலாளரான சிக்மண்ட் ஃபிராய்ட்டின் (Sigmund freud) உளவியல் ஆய்வு 19-ம் நூற்றாண்டின் இலக்கிய உலகைப் புரட்டிப்போட்டது.

ஃபிராய்ட், மனித ஆழ்மனம் (Unconscious mind) பற்றியும் ஆழ்மன ஆசைகளின் வெளிப்பாடாக விளங்கும் கனவுகளை விளக்கியும் 1890-ம் ஆண்டு ‘சைக்கோ அனாலசிஸ்’(Psycho analysis) என்ற உளப் பகுப்பாய்வுச் சிந்தனையை உலகுக்கு வழங்கினார். இந்தச் சிந்தனையின் தாக்கம் இலக்கிய வடிவங்களில் குறிப்பாக நாவல்களின் கதை வெளிப்பாட்டு முறையில் பல புதிய உத்திகளைப் புகுத்த எழுத்தாளர்களுக்கு மாபெரும் தூண்டுதலைத் தந்தது.

நிகழ்காலச் சம்பவம் ஒன்றால் தூண்டப்படும் முதன்மைக் கதாபாத்திரம், தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து அதில் நடந்த நிகழ்வுகளை வரிசையாக விவரித்துச் சொல்லும் நனவோடை உத்தி (Stream of consciousness), ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் சம்பவங்களை ஒப்புதல் வாக்குமூலம்போல வெளிப்படுத்துவது (Interior monologue), முதன்மைக் கதாபாத்திரத்துடன் தொடர்புகொண்ட துணைக் கதாபாத்திரங்களின் பார்வையிலும் கதையை நகர்த்துவது (Multiple points of view) போன்ற நவீன உத்திகள் தோன்றியதால், இலக்கியம் ‘நவீன இலக்கிய’மாக செழுமைபெறத் தொடங்கியது.

இரண்டு தலைமை ஆசிரியர்கள்

இலக்கியத்திலிருந்து தனக்கான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்துகொண்ட திரைப்படக் கலையிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. நவீன இலக்கியம்போலவே நவீன சினிமாவிலும் காலமும் இடமும் கலைத்துப் போடப்பட்டன. அதன்விளைவாக ‘நான் லீனியர்’ திரைக்கதை உத்தி பிறந்தது. அதுவரை, கால வரிசையைக் கலைக்காமல் ஒரே நேர்கோட்டில் கதைகூறும் பாட்டிகளிடம் “ம்…” கொட்டியபடி கதைகேட்டு பழக்கப்பட்ட குழந்தைகளைப் போல இருந்த பார்வையாளர்கள், ‘நான் - லீனியர்’படங்களைக் கண்டு சிலிர்த்துப்போனார்கள்.

திரைக்கதையில் சிதறடிக்கப்பட்ட காலமும் இடமும் அவர்களது சினிமா ரசனையை உயர்த்தின. நான் லீனியர் திரைக்கதை உத்தியை உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் ‘திரைமொழியின் பிதாமகன்’ என நினைவுகூரப்படும் டி.டபிள்யு. கிரிஃபித் (D.W. Griffith). மவுனமொழி பேசி வந்த காலத்திலேயே 1916-ல் ‘சகிப்பின்மை’(Intolerance) என்ற நான் - லீனியர் படத்தைத் தந்து, பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தார்.
 

25chrcj_Intolerance 1

சாதியையும் மதத்தையும் கலைகளையும் கண்டறிந்த மனிதன், காலம் தோறும் நாகரிகத்தில் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறான். ஆனால் சகிப்பின்மை எனும் அவனது குணம், நூற்றாண்டுகளைக் கடந்து அழிவுகளுக்கே வழிவகுத்திருக்கிறது என்ற மையக் கருத்தைத் தாங்கி, நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை ஒப்பிட்டுக் காட்டியது ‘இண்டாலரன்ஸ்’ படத்தின் திரைக்கதை.

அதிகார வர்க்கத்தின் சகிப்பின்மையால் அதிகமும் பாதிக்கப்படுவது சாமானிய எளிய மக்கள்தாம் என்பதைக் கால வரிசையில் முன்பின்னாகத் தாவிச்சென்று சித்தரித்த இந்தப் படம், உலகின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. இப்போதும் இந்தப் படத்தை யூடியூபில் காணலாம்.

ரஷோமான் விளைவு!

திரைக்கலையை நவீனத்தின் அடையாளமாகக் கையாண்ட மற்றொரு தலைமை ஆசிரியர் அகிரா குரசோவா. புராணக் கதைகளின் பிடியிலிருந்து மெல்ல சமூகக் கதைகளுக்குள் தமிழ் சினிமா நுழைந்துகொண்டிருந்த 1950-ல் அகிரா குரசோவாவின் ‘ரஷோமான்’(Rashomon) வெளியாகி ஹாலிவுட் சினிமாவிலும் உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு சாமுராய் வீரன், அவனுடைய மனைவி, அவளைப் பாலியல் வல்லுறவு செய்துவிடும் ஒரு திருடன், திருடனுடன் மோதும் சாமுராய். காட்டில் நடக்கும் இந்தக் குற்றச் சம்பவத்தை மறைந்திருந்து பார்க்கும் ஒரு மரம்வெட்டி என விரியும் திரைக்கதையின் முக்கியச் சம்பவத்தை இயக்குநர் அகிரா பார்வையாளர்களுக்கு நேரடியாகக் காட்டவில்லை. முக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு கதாபாத்திரங்களும் என்ன நடந்தது என்பதை அவரவர் பார்வையில் தனித்தனியாக விவரிக்கிறார்கள்.

சுயநலமும் மிகைப்படுத்தலும் பொய்மையும் நிறைந்த முரண்பாடுகளுடன் ஒரே சம்பவம் நான்கு வெவ்வேறு காட்சிகளாகக் பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டுகிறது. மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று வெவ்வேறு காலங்களில் கதாபாத்திரங்கள் கூறும் இந்தப் படத்தில்தான் ‘இப்படியும் நடந்திருக்கலாமே’என்ற சக கதாபாத்திரங்களின் (Multiple points of view) பார்வைகளை அகிரா முதன் முதலில் முன்வைத்தார். ‘ரஷோமான்’படத்தின் முக்கிய சம்பவத்தின் இறுதியில் இறந்துவிடும் சாமுராய், ஒரு பெண்ணின் உடலில் புகுந்து ஆவியாக வாக்குமூலம் அளித்து நடந்ததை விவரிக்கிறார். ஆனால் அதுவும்கூட ஆவி ஊடகமாகச் செயல்படும் அந்தப் பெண்ணின் மிகையாக இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கும் விவாதத்துக்கு அகிரா நம்மை இட்டுச் சென்றிருப்பார்.

25chrcj_rashomonகமலுக்குத் தாத்தா!

ஒரே சம்பவத்தின் முரணான பக்கங்களைத் தன்முனைப்புடன் கூடிய வெவ்வேறு பிம்பங்களாக முதன்மைக் கதாபாத்திரங்கள் கதையாக்கிக் கூறுவதுபோல் அமைந்த இந்தத் திரைக்கதை உத்தி, உலக திரைப்படத் துறையிலும் சமூக வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றாட உலக நிகழ்வுகள் பற்றிய விவாதங்களில் வெளிப்படும் முரண்பட்ட பார்வைகளை ‘ரஷோமான் விளைவு’ என்று குறிப்பிடும் வழக்கம் இந்தப் படத்தின் திரைக்கதை உத்தியால் விளைந்ததுதான்.

தமிழில் ‘விருமாண்டி’ படத்தைப் பார்த்தவர்கள், இதே உத்தியை அந்தப் படத்தில் முயன்று பார்த்த திரைக்கதாசிரியர் கமல்ஹாசனுக்கு தாத்தா அகிரா குரசோவா என்பதைப் புரிந்துகொண்டுவிடுவார்கள்.

திரைக்கதையில் ‘ரஷோமான்’ உருவாக்கிய அலை, மெல்ல மெல்ல வளர்ந்து, திரைக்கதை கடிகாரத்தின் நொடிமுள்ளை முன்னும் பின்னும் நகர்த்தி முக்கிய கதாபாத்திரத்துக்கு மேலும் சில வாய்ப்பை வழங்கும் நியோ ரியலிஸ்டிக் (Neo realistic) வகை சினிமா பிறக்கவும் வழிவகுத்தது. நியோ ரியலிஸ்டிக் பட வரிசையில் போலந்து நாட்டின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கியின் (Krzysztof Kieslowski) இயக்கத்தில் 1987-ல் வெளியான ‘பிளைண்ட் சான்ஸ்’ (Blind Chance) மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தப் படத்தின் தாக்கத்தில் ஜெர்மானிய இயக்குநர் டாம் டைக்வர் இயக்கி 1998-ல் வெளிவந்த ‘ரன் லோலா ரன்’ இன்னொரு ஆச்சரியம். இந்த இரு படங்களின் பாதிப்பில் தமிழிலும் ஒரு படம் உருவானது. அது ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவாவின் படமாக்கல் மற்றும் இயக்கத்தில் வெளியான ‘12பி’. இந்த மூன்று படங்களும் கதாபாத்திரங்களுக்குத் தரும் கூடுதல் வாய்ப்புகள் பார்வையாளனுக்கு எத்தகைய திரை அனுபவத்தைத் தருகின்றன என்ற சாளரத்தின் வழியே இந்தப் படங்களில் காலம் என்ற அம்சத்தைத் தாண்டி மிளிரும் திரைக்கதையின் உத்திகளைத் தொடர்ந்து கற்போம்.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

“என்னால் படம் இயக்க முடியும். ஆனால்...” - விஜய் ஆண்டனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x