மண்டையோடு எங்கே? - ஜெர்மன் இயக்குநர் முர்னா | கல்லறைக் கதைகள் 13
ஜெர்மன் இயக்குநர் முர்னா, கார்ல் மேயர் எழுதிய, ‘தி லாஸ்ட் லாஃப்’ எனும் திரைப்படத்தை 1924ஆம் ஆண்டு எடுத்தார். கதையைப் படமாக்கியபோது கதாபாத்திரங்களின் பார்வையில் எல்லாவற்றையும் பார்ப்பது போல கேமரா மூலமாக எல்லாவற்றையும் படம் பிடித்தார். அதாவது, கதாப்பாத்திரங்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் பாணியைப் பின்பற்றினார்.
அதுமட்டுமல்லாமல், படக்காட்சிகளை ஒரு சங்கிலித் தொடர்போலப் படம் பிடிக்கும் உத்தியைப் பின்பற்றினார். இது அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவற்றுக்குக் கிடைத்த அங்கீகாரம் முர்னாவுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவந்த, எக்ஸிஃபிசனிஸ்ட் கொள்கைக்கு முற்றிலும் மாறான வகையில் படமாக்கப்பட்டது. இது முர்னாவின் பிற திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட வகையிலும் இருந்தது என்றே கூறலாம்.
கடைசி ஜெர்மன் படம்: இதற்குப் பிறகு மீண்டும் வித்தியாசமான படம் ஒன்றை எடுத்தார். அந்தப் படத்தின் பெயர் ‘ஃபவுஸ்ட்’. 1926 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் பாரம்பரிய கோத்திய பாணியும், பண்டைக்கால 'ஃபவுஸ்ட்' உடைய கதையும் சேர்ந்த வித்தியாசமான கலவையாக இருந்தது. இந்த முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும் முர்னாவின் கடைசி ஜெர்மன் படமாக அது அமைந்துவிட்டது.
ஹாலிவுட்டில் என்ட்ரி: 1926ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் களமிறங்கினார் முர்னா. முர்னாவின் படைப்புகளையும் கதைப் பாணியையும் நன்கறிந்த பிரபல ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவமான ஃபாக்ஸ் ஸ்டுடியோ அவரைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டது.
தேடி வந்த விருதுகள்: அந்த நிறுவனத்தின் சார்பாக ‘சன்ரைஸ்: எ சாங் ஆஃப் டூ ஹியூமன்ஸ்’ எனும் திரைப்படத்தை 1927இல் இயக்கி வெளியிட்டார். தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்த படைப்பாக இந்தப் படம் கருதப்பட்டாலும் வர்த்தரீதியாகப் பெரிய வசூலை எட்டவில்லை. இருப்பினும், முதன் முதலில் ஹாலிவுட் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இந்தப் படம் பல விருதுகளைத் தட்டிச் சென்றது. திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் முர்னாவுக்கு நிதிப் பிரச்சினை எதுவும் ஏற்பட்டவில்லை.
தோல்வியைத் தழுவிய படங்கள்: அந்தக் காலத்தில் இசை மற்றும் ஒலி அமைப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் சினிமாத் துறையில் புதிய புரட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தன. அதனால், அந்தத் தொழிற் மாற்றங்களைத் தனது திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்ள முர்னா முயன்றார். அதன் அடிப்படையில், ‘ஃபோர் டெவில்ஸ்’ (1928), ‘சிட்டி கேர்ள்’ (1930) ஆகிய இரு படங்களை இசை மற்றும் ஒலி அமைப்புகளைச் சேர்த்து முழுப் படமாக வெளியிட்டார். ஆனால், அந்த இரு படங்களுமே தோல்வியைத் தழுவின. இந்தத் தோல்விகள் முர்னாவின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தின. அதனால், ஃபாக்ஸ் ஸ்டூடியோவை விட்டு விலகினார்.
முறிந்த நட்பு: அந்தச் சமயத்தில் பிரபல ஆவணப் பட இயக்குநர் ராபர்ட் ஜெ. ஃபிளாஹெர்டியின் நட்பு கிடைத்தது. இருவரும் கூட்டாகச் சேர்ந்து சில படங்களை எடுக்கத் திட்டமிட்டனர். அதன் அடிப்படையில், ‘டபு’ (1931) எனும் படத்தை எடுக்க முடிவெடுத்தனர். படப்பிடிப்பின்போது ஃபிளாஹெர்டிக்கும் முர்னாவுக்கும் கருத்து வேறுபாடுகள் முளைத்தன. இதனால், ஃபிளாஹெர்டி கூட்டு முயற்சியில் இருந்தும் படப்பிடிப்பில் இருந்தும் விலகினார்.
எனவே, முர்னா, அந்தப் படத்தைச் சுயமாக எவருடைய உதவியுமின்றி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தப் படம், அமெரிக்க சென்சார்ஸ் அமைப்பின் சான்றிதழுக்காகத் திரையிடப்பட்டது. படத்தில் சில காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக சென்சார் குழுவினர் தெரிவித்து, அவற்றை அகற்ற உத்தரவிட்டனர்.
உயிரைப் பறித்த விபத்து: 1931ஆம் ஆண்டு, அப்படம் திரையிட முடிவு செய்யப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டம் முர்னாவைத் தாக்கியது. கார் விபத்து ஒன்றில் அவர் சிக்கினார். அதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், தலையில் காயம் பலமாக இருந்ததால், மருத்துவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
விரும்பியடி கல்லறை: அவர் விருப்பப்படியே, ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகருக்கு அருகே உள்ள ஸ்டான்டார்ப் எனும் இடத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டது. சினிமாத் தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத நிலையில் சில புதுமையான, புரட்சிகரமான தொழில்நுட்பங்களைக் கையாண்டு சினிமா உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்து, ஒரு சகாப்தத்தை ஏற்படுத்திய முர்னா, அந்தக் கல்லறையில் துயில் கொண்டார்.
ஆனால், கல்லறையில் அவரை அமைதியாகத் துாங்க விடவில்லை சிலர். கல்லறையில் இருந்து அவரது உடலைத் தோண்டி எடுத்துக் கடத்திச் செல்ல பலமுறை முயற்சி நடந்திருக்கிறது. இறுதியில், அவரது தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர் என்று அவரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த ஸ்டீபனி பப்பாஸ் என்கிற அறிவியல் ஆய்வாளர் கூறிய தகவலின் அடிப்படையில், வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
அவரது கல்லறையில் இருந்து அவரது மண்டையோடு துண்டித்து எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, அவரது கல்லறையில் மெழுகுவத்தி ஒன்று எரிந்துகொண்டிருந்தததாம். ‘நிச்சயமாக இது சூனியக்காரர்களின் வேலைதான்’ என்று ஒரு சாராரும், ‘இல்லை இல்லை... தலையைத் திருடிய கொள்ளைக்காரர்கள், சவத்தை வாங்க விரும்புவர்களிடம் அதை விற்றிருக்கலாம்’ என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். கடைசிவரை மர்மம் விலகவில்லை.
> முந்தைய அத்தியாத்தை வாசிக்க: தலையில்லாத சடலம் - ஜெர்மன் இயக்குநர் முர்னா | கல்லறைக் கதைகள் 12
