

கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோயில், கல்விச் செல்வம் அருளும் திருத்தலமாக போற்றப் படுகிறது. சரஸ்வதி தேவியே இத்தலத்தில் சாரதாம்பாளாக அருள்பாலிப்பதாக ஐதீகம். கேரள மாநிலத்தின் காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் அத்வைத தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியவர். ஒருசமயம் மகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்ற பண்டிதரிடம் ஆதிசங்கரர் வேதம் தொடர்பாக வாதம் செய்தார். வாதத்துக்கு நடுவராக மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதி செயல்பட்டார்.
உபயபாரதி சரஸ்வதி தேவியின் அவதார மாக போற்றப்படுபவர். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறத்தை விடுத்து இல்லறம் மேற்கொள்வதாகவும், மண்டனமிஸ்ரர் தோற்றால், இல்லறத்தை விடுத்து துறவறம் மேற்கொள்வதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் வாதம் தொடங்கும் முன்னர் இருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, யாரு டைய மாலை முதலில் வாடுகிறதோ, அவரே தோற்றவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
வாதம் 17 நாட்கள் நடைபெற்றது. முதலில் மண்டனமிஸ்ரரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக் கொள்ள மண்டனமிஸ்ரர் தயாராக இருந்தார். ஆனால் உபயபாரதி அதற்கு உடன்படவில்லை. மாலை வாடியதால் மட்டுமே தோல்வியை ஏற்க முடியாது. இல்லறம் குறித்த கேள்விக்கு ஆதிசங்கரர் பதில் அளித்தால் மட்டுமே, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று உபயபாரதி தெரிவித்தார்.
ஒரு மாதம் கழித்து இல்லறம் பற்றிய வாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சங்கரர் தெரிவித்து விடைபெற்றார். செல்லும் வழியில் அமருகன் என்ற மன்னர் இறந்ததை அறிந்த ஆதிசங்கரர், தன் யோக சக்தியால் மன்னரின் உடலில் புகுந்து இல்லறம் குறித்து அறிந்தார். அதுவரை சங்கரரின் உடலை பத்மபாதர் என்ற சீடர் பாதுகாத்து வந்தார். மீண்டும் தன் உடலுக்குள் புகுந்து, ஆதிசங்கரர் உபயபாரதியுடன் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றதால், மண்டனமிஸ்ரர் துறவறம் ஏற்றார். சுரேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்று, அவர் ஆதிசங்கரரின் சீடரானார்.
சரஸ்வதி தேவியின் அம்சமான உபயபாரதி, தன்னை தொடர்ந்து வர வேண்டும் என்று ஆதிசங்கரர் கூறினார். அதற்கு உடன்பட்ட உபயபாரதி, “உம்மைத் தொடர்ந்து நான் வரவேண்டும் என்றால், நீர் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பினால் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்” என்றார். ஆதிசங்கரருக்கு சுரேஸ்வரர், பத்மபாதருடன் அஸ்தாமலகர், தோடகர் ஆகிய சீடர்களும் சேர்ந்தனர்.
அவர்களும் ஆதிசங்கரருடன் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களை உபயபாரதி பின் தொடர்ந்தார். ஓர் இடத்தில் (சிருங்கேரி) நல்ல பாம்பும் தவளையும் சேர்ந்து எழுப்பும் சப்தம் கேட்டது. இந்த இடமே யோகிகள் தங்குவதற்கு ஏற்ற இடம் என்று ஆதிசங்கரர் தீர்மானித்தார். திடீரென்று அந்த இடத்தில் உபயபாரதியின் சிலம்பொலி கேட்கவில்லை. ஆதிசங்கரர் திரும்பிப் பார்த்தார். நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே உபயபாரதி நின்றுவிட்டார்.
(தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவு செய்தபோது, விபாந்த முனிவரின் புதல்வர் ரிஷ்ய சிருங்க முனிவர், யாகத்தை நடத்திக் கொடுத்தார். அவர் வாழ்ந்த பகுதியே சிருங்ககிரி - சிருங்கேரி என்று ஆனது) அங்கேயே பாறை மீது ஸ்ரீசக்கரம் வடித்த ஆதிசங்கரர், தேவிக்கு ‘சாரதா’ என்று திருநாமத்தை சூட்டினார். ஆதிசங்கரருக்கு காட்சியளித்த அன்னை, “இன்று முதல் இந்த பீடம் சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடிகொண்டு அருள்பாலிப்பேன்” என்றார். சுரேஸ்வரர் சாரதா பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.
துங்கை ஆற்றின் அருகே சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர், சிவபெருமானால் அருளப்பட்ட ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திர மௌலீஸ்வரரையும், ரத்தின கர்ப்ப கணபதியையும் சுரேஸ்வரரிடம் கொடுத்து பூஜைகள் செய்து வரப் பணித்தார். இன்றுவரை இந்த ஸ்படிக லிங்கத்துக்கு ஆச்சார்யர்கள் பூஜை செய்து வருகின்றனர். சாரதா பீடத்தின் காவல் தெய்வங்களாக கிழக்கே காலபைரவர், மேற்கே அனுமன், வடக்கே காளி, தெற்கே துர்கை அமைந்துள்ளனர்.
சகல சௌபாக்கியங்களையும் அருளும் அன்னையாக சரஸ்வதி தேவியே இங்கு சாரதாம்பாளாக பெரிய ராஜ கோபுரத்துடன் தனி கோயிலில் அருள்பாலிக்கிறாள். வைகாசி சுக்ல பஞ்சமியில் 5 நாள் சங்கர ஜெயந்தி, வியாசர் பூஜை, வரலட்சுமி விரதம், மகா சிவராத்திரி, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்த பத்மநாபா விரதம், உமா மகேஸ்வர விரதம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அமைவிடம்: மங்களூருவில் இருந்து 105 கிமீ தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 300 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது சிருங்கேரி.