Published : 16 Jun 2018 11:01 AM
Last Updated : 16 Jun 2018 11:01 AM

கலைடாஸ்கோப் 06: ஆஸ்கர் நாயகனின் ‘கால்பந்துக்கு மரியாதை’

உலகமே கால்பந்து மோகத்தில் திளைத்துக் கிடக்கும் இந்நேரத்தில், நமக்கும் கால்பந்துக்கும் ஏழாம் பொருத்தம் என்று நினைக்க வேண்டியதில்லை. கால்பந்துக்கும் நமக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. ஆங்கிலேயர் தந்துவிட்டுப் போன எச்சங்களில் இந்தியாவைப் பிடித்தாட்டும் கிரிக்கெட்டால் அழிந்துபோன விளையாட்டுகளில் கால்பந்தும் ஒன்று.

அதேநேரம், கால்பந்து தேசமான பிரேசிலின் நாயகன் பீலேயைப் பற்றிய ‘பெர்த் ஆஃப் எ லெஜெண்ட்’ ஹாலிவுட் படத்துக்கு இசை, ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மான்தான். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஜிங்கா’ பாடலைவிடக் கால்பந்துக்கு வேறு எது மிகப் பெரிய சமர்ப்பணமாக இருக்கப் போகிறது?

கால்பந்து மன்னன்

சர்வதேசக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிபாவால் ‘கடந்த நூற்றாண்டின் சிறந்த வீர'ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் பீலே. ஐந்து முறை வென்றதன் மூலம் உலகக் கால்பந்துக் கோப்பையை அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றது பிரேசில். அதில் மூன்று முறை கோப்பை வென்ற அணிகளில் இடம்பிடித்திருந்தவர் பீலே. பிரேசிலின் அடையாளங்களில் ஒன்றாகக் கால்பந்து திகழ்கிறது என்றால், அதற்கு பீலேவும் முக்கியக் காரணம்.

பீலேயின் ‘ஜிங்கா’

16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் ஆப்பிரிக்க அடிமைகளுடன் பிரேசிலில் குடியேறினார்கள். இதில் மன உறுதி படைத்த ஆப்பிரிக்கர்களில் சிலர் போர்த்துகீசியர்களிடம் இருந்து தப்பிக் காடுகளில் தஞ்சமடைந்தார்கள். அப்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் பண்டைய போர் தற்காப்புக் கலையான ஜிங்காவை ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தினார்கள். பிரேசிலில் அடிமைத்தனம் சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்ட பிறகு, அவர்கள் காட்டை விட்டு வெளியே வந்தார்கள். அதற்கு முன்பாகவே பொதுவெளியில் ஜிங்காவைப் பயன்படுத்துவது சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கப்பட்டிருந்தது.

சட்டத்தின் கரங்களால் கைதுசெய்யப்படாமல் ஜிங்கா முறையைப் பயன்படுத்துவதற்குச் சிறந்த வழியாகக் கால்பந்தையே ஆப்பிரிக்கர்கள் அன்றைக்குக் கண்டார்கள். பீலேயின் கால்பந்து உத்தி இந்த ஜிங்கா முறையை அடிப்படையாகக் கொண்டதே. அதைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ‘பீலே: பெர்த் ஆஃப் எ லெஜெண்ட்’ படத்தில் ‘ஜிங்கா’ என்ற பாடலை ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கினார்.

ரஹ்மான் அடித்த கோல்

‘ஜிங்கா’ பாடல் விளம்பர வீடியோவாக உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் படத்தின் ஒரு பாகமாக இல்லாமல், கடைசி நேரத்தில் படக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பாடலை யூடியூப் வீடியோவாக ஏ.ஆர். ரஹ்மான் விரிவுபடுத்தினார். ஏ.ஆர். ரஹ்மானும் பிரேசிலைச் சேர்ந்த பாடலாசிரியை-பாடகியான அன்னா பீட்ரிஸும் பாடிய பாடல் இது. இருவருமே வீடியோவிலும் தோன்றினார்கள். இதில் ரஹ்மான் கால்பந்தும் விளையாடியிருப்பதும் அவருடைய மகன் ஏ.ஆர். அமீன் இசைப்பது போன்ற காட்சியும் ரசிகர்களுக்கு போனஸ்.

பீலேயின் ‘ஜிங்கா பாணி’யை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடலின் மற்றொரு முக்கிய அம்சம் ‘பைசைக்கிள் கிக்’. ‘பீலே கிக்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்தக் கால்பந்து உத்திக்கு ‘பைசைக்கிள் கிக்’, ‘சிசர் கிக்’ என்று வேறு பெயர்கள் உண்டு. தலைக்கு மேலே கால்களைத் தூக்கி கால்பந்தை உதைப்பது, குறிப்பாக, கோலாக்குவதே இந்த உத்தியின் தாத்பர்யம். ‘ஜிங்கா’ பாடலுக்கான வீடியோ குறும்படத்துக்கான சஸ்பென்ஸுடன் எடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்குத் தீனி போடும்.

‘ஜிங்கா’ பாடலை ரசிக்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x