Published : 11 Jun 2018 11:31 AM
Last Updated : 11 Jun 2018 11:31 AM

ஸ்மார்ட்போனின் `ஃபேஸ் அன்லாக்’ வசதி பாதுகாப்பானதா?

திக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதில் அதிகபட்ச பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள்தான் இப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் அம்சமாக இருக்கிறது. பட்டன்கள், கைவிரல் ரேகை என இருந்த பாதுகாப்பு வசதிகள் இப்போது முகத்தை அடையாளமாக எடுத்துக் கொள்வது வரை வந்து விட்டன. விரல் கைரேகை அல்லது பாதுகாப்பு நம்பர் அடையாளங்களைவிட இது எளிதாக உள்ளது என்கின்றனர். ஆனால் பாதுகாப்பானதா என சில கேள்விகளை எழுப்புகிறது காஸ்பர்ஸ்கை பாதுகாப்பு நிறுவனம். ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் மிகப் பொதுவானது. சில நேரங்களில் இந்த தொழில்நுட்பம் வேறு ஒருவரது முகத்துக்கு திறக்கும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை செய்கிறது.

கூகுள் நிறுவனம் 2011-ம் ஆண்டிலேயே ஆண்ட்ராய்டு 4.0 வெர்ஷனிலேயே முக அடையாளத்தை செல்போன் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு உருவாக்கிவிட்டது. ஆனால் இதை மிக மெதுவாகத்தான் மேம்படுத்தி வருகிறது. இதன் என்ஸ்கிரிப்ட் தொழில்நுட்பம் சீராக இல்லாததால் மிக மெதுவாகத்தான் செல்போன் தயாரிப்பாளர்களும் மேம்படுத்தி வருகின்றனர்.

2017-ம் ஆண்டில்தான் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் மாடல்களில் இவற்றை அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் X மாடலில்தான் கொண்டு வந்தது. இப்போது எல்ஜி, விவோ, ஓப்போ, ஜியோமி, ஒன்பிளஸ் போன்ற இதர பிராண்டுகளும் முன்பக்க கேமரா முக அடையாள வசதியை அளிக்கின்றன.

பயனரில் முகத்திலிருந்து குறைந்தபட்ச அடையாளக் குறியீடுகளை மட்டுமே இந்த தொழில்நுட்பம் எடுத்துக் கொள்கிறது. முகத்தை ஸ்கேன் செய்கையில் கேமராவின் கோணம், வெளிச்சம் மற்றும் முகம் வெளிப்படுத்தும் உணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் சில பிரத்யேகக் குறியீடுகளை உருவாக்கி அதை செல்போன் நினைவகம் சேமித்து கொள்கிறது. அன்லாக் செய்கையில் சில நேரங்களின் நமது முக உணர்ச்சிகள், கேமரா கோணம் மாறும்போது இந்த தொழில்நுட்பம் அன்லாக் ஆவதில்லை. தவிர இந்த பிரத்யேக குறியீடுகளுடன் பிற முகங்கள் பொருந்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்த முக அடையாள பிரத்யேக குறியீடு முகத்தின் இடங்களை அல்காரிதம்களாக மாற்றுகிறது. ஆப்பிள் போன் முகத்தை 30,000 புள்ளிகளாக மாற்றி 3டி வடிவில் சேமித்துக் கொள்கிறது, பயனர் கேமராவின் முன் முகத்தை காட்டுகையில் ஆப்பிள் போனின் இன்ப்ராரெட் கேமரா இந்த புள்ளிகளை ஆராய்வதுடன், இன்ப்ராரெட் புகைப்படத்தை தனது நினைவகத்துக்கு அனுப்பி சோதிக்கிறது.

ஒன்பிளஸ் 5டி மற்றும் 6 மாடல்கள் பயனரின் முகத்தில் 100 அடையாளங்களை ஆராய்கிறது. பயனர் கேமராவை பார்க்கும் தூரம், அதன் அடிப்படையில் மூக்கு, கண், மேல் உதடு போன்றவற்றை சேமித்து வைக்கிறது. இதுபோல ஒவ்வொரு நிறுவனங்களும் முக பாதுகாப்பில் ஒவ்வொரு விதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

இந்த முக அல்காரிதம் தொழில்நுட்பத்தைதான் முன்னேறிய தொழில்நுட்பம் அல்ல என்கிறது கேஸ்பர்ஸ்கை. 2டி கேமரா, புள்ளி அல்காரிதம் போன்றவை எளிதாக நுழையும் தொழில்நுட்பங்கள். குறிப்பிட்ட பயனரின் சமூக வலைதள புகைப்படங்களைக் கொண்டு கேமராவை அன்லாக் செய்துவிடலாம் என்கிறது.

தவிர ஆப்பிள் போனில் ஐந்து முறைக்கு மேல் முக சென்சார் மூலம் திறக்க முயற்சி செய்தால் போன் சென்சார் செயல்படாது. கைவிரல் ரேகை பதிவு செய்துதான் உள் நுழைய முடியும். எனவே முகப் பாதுகாப்பு மட்டுமே முழுமையானது அல்ல. அது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள கூடுதல் வசதிதான். பட்டன் மற்றும் கைரேகையே அதிக பாதுகாப்பு என்பதையே காஸ்பர்ஸ்கை ஆய்வு உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x