Last Updated : 12 Jun, 2018 10:32 AM

 

Published : 12 Jun 2018 10:32 AM
Last Updated : 12 Jun 2018 10:32 AM

ஆங்கிலம் அறிவோமே 217: எல்லாம் நல்லதுக்குத்தானா?

கேட்டாரே ஒரு கேள்வி

The yolk of eggs is white.

The yolk of eggs are white.

இந்த இரண்டில் எது சரி என்பதைக் கூற முடியுமா?

----------------------

“அது ஒரு cult movie” என்கிறார்களே. அதற்குப் பொருள் என்ன?

லத்தீன் மொழியில் cult என்றால் வழிபடுவது என்று பொருள். குறைவான எண்ணிக்கை கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவில் நம்பிக்கைகொண்டு அதன் வழிமுறைகளைப் பின்பற்றும்போது அதை ‘cult’ என்கிறார்கள்.

Society suffers from dangerous cults, media control and misrepresentations.

Cult films என்பது என்ன?

அதுபோன்ற திரைப்படங்களுக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அவர்கள் அந்தப் படத்தின் பெயரைச் சொன்னால் புளகாங்கிதம் அடைவார்கள். அதை மீண்டும் மீண்டும் பார்த்திருப்பார்கள் (திரையரங்குகளிலேயே!). அதன் வசனங்களை அப்படியே ஒப்பிப்பார்கள். ‘பாசமலர்’, ‘திருவிளையாடல்’, ‘அவள் அப்படித்தான்’, ‘பாட்ஷா’, ‘நாயகன்’ ஆகிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. என்றாலும் அனைத்தையுமே cult flims என்ற பிரிவுக்குள் அடக்கலாம்.

----------------------

கேட்டாரே ஒரு கேள்வி வாசகரே, இங்கே white என்பது yolk-ஐத்தான் குறிக்கிறதே தவிர egg-ஐ அல்ல. எனவே The yolk of eggs is white என்பதுதான் சரி.

----------------------

Keep the flag flying என்றால் என்ன?

வெளிநாடுகளில் இருக்கும்போது தாய்நாட்டின் பிரதிநிதியாகச் செயல்படுவதை இப்படிச் சொல்வார்கள்.

பொதுவாகவே flag-flying என்றால் ஒருவரது நாடு அல்லது அரசியல் கட்சி அல்லது நிறுவனத்துக்கான ஆதரவை மிகவும் ஆத்மார்த்தமாக (ஆவேசமாகவும்) வெளிப்படுத்துவதுதான்.

நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருப்பதையும் இப்படிக் குறிப்பிடுவார்கள்.

----------------------

ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வரும் வகையில் ‘எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்பார்கள். இதுபோன்ற சூழல் ஏற்படும்போது ஆங்கிலத்தில் நாம் என்ன சொல்வதுண்டு?

ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டால்தான் அமைதி கிடைக்குமென்று நீங்கள் நினைத்தால், கீழே உள்ள சிறிய பட்டியல் உங்களுக்குக் கைகொடுக்கும்.

Everything is relative.

There must be a reason.

Sometimes you get the bear .. and sometimes the bear gets you.

It probably prevented something worse happening.

Life goes on.

Worse things happen at sea.

----------------------

“காலணி இல்லாமல் நடப்பதை bare-foot ஆக நடக்கிறேன் என்று சொல்ல வேண்டுமா அல்லது bare-footed ஆக நடக்கிறேன் என்று சொல்ல வேண்டுமா?”

Bare-foot என்பது adverb. அது verb-ஐ விவரிக்கிறது. He walked bare-foot. I walk bare-foot.

Bare-footed என்பது adjective. அது noun-ஐ விவரிக்கிறது. The bare-footed workers crossed the field.

----------------------

‘Pop into’ என்று ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் படித்தேன். அதற்கு என்ன பொருள்?

‘கொஞ்ச நேரத்துக்கு விசிட்செய்வது’ என்று பொருள். I will just pop into post office to buy some stamps.

நண்பர் வீட்டில் காபி நன்றாக இருக்கும். அதற்காகவே அந்த வீட்டுக்கு ஒரு எட்டு செல்கிறீர்கள் என்றால், I pop into my friend’s house for coffee எனலாம்.

----------------------

பலரும் தவறாக உச்சரிக்கும் வார்த்தை creche என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பலரும் தவறான ஸ்பெல்லிங்கை எழுதும் வார்த்தை என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

வாசகரே, உடனடியாகத் தோன்றும் ஒரு வார்த்தை மிகக் குறைவான என்ற அர்த்தம் கொண்ட minuscule. ஆனால் பலரும் இதை miniscule என்றே குறிப்பிடுகிறார்கள். ‘Mini’ என்ற வார்த்தை, அதன் அர்த்தத்துக்குப் பொருந்துவதாக இருப்பதாலோ என்னவோ அமெரிக்கர்கள் miniscule என்பதையும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்பது வேறு விஷயம்.

----------------------

“What about you? என்று யாராவது கேட்டால் நாம் நம்மைப் பற்றிய விஷயங்களை விவரிக்க வேண்டுமா?”

நண்பரே, அவர் தன்னைப் பற்றிய விஷயங்களைக் கூறிவிட்டு இந்தக் கேள்வியை எழுப்பினால் அப்போதுதான் அதற்கு நீங்கள் கூறிய அர்த்தம் வரும்.

இந்தக் கேள்வி பெரும்பாலும் இரண்டு சந்தர்ப்பங்களில்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவருந்த ஹோட்டலுக்குச் செல்கிறீர்கள். “நான் தோசை சாப்பிடப் போகிறோன் What about you?” என்றால் “நீங்கள் எதைச் சாப்பிட விரும்புகிறீர்கள்?” என்று அதற்கு அர்த்தம். ஒரு சிறுவன் தன் நண்பனிடம் “My ​parents had taken me to Vandalur Zoo during this summer vacation. How about you?” என்று கேள்வி கேட்டால் “உன் பெற்றோர் உன்னை எங்கே அழைத்துச் சென்றார்கள்?’’ என்று பொருள்.

தொடக்கம் இப்படித்தான்

ஐ.நா.சபையில் சில நாடுகளுக்கு மட்டும் ‘வீட்டோ பவர்’ இருக்கிறது என்கிறார்கள். Veto என்ற வார்த்தை எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.

லத்தீன் மொழியில் vetare என்றால் ‘I forbid’ என்று பொருள். அதாவது ‘நான் தடை செய்கிறேன்’.

அந்தக் காலத்தில் ரோம ராஜ்யத்தில் அரசு உறுப்பினர்கள் சபை ஒன்றைச் செயல்படுத்த நினைத்தால் அதை ரோம சாம்ராஜ்யத்தின் நீதிக்குழு ஏற்கலாம், ஏற்காமலும் போகலாம். ஏற்கவில்லையென்றால் நீதிபதி அதை veto செய்வார். அந்த அதிகாரம் அவருக்கு உண்டு. இப்படித்தான் தடை செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை ‘வீட்டோ’ என்றும் குறிக்கத் தொடங்கினார்கள்.

சிப்ஸ்

# Thinking outside the box என்கிறார்கள். அது என்னவென்று புரியவில்லை கொஞ்சம் விளக்குங்களேன்.

வழக்கத்துக்கு மாறாகவும், ஒரிஜினலாகவும் யோசிப்பதை இப்படிச் சொல்கிறார்கள். இதை thinking out of box என்றும் சொல்வார்கள்.

# Bona fide என்றால் என்ன அர்த்தம்?

நம்பத்தகுந்த

# Preponed என்ற வார்த்தையைத் தவறு என்கிறார்களே. அதற்குப் பதிலாக advanced என்பதைத்தான் பயன்படுத்த வேண்டுமா?

Prepone என்று ஒரு வார்த்தை நெடுங்காலத்துக்கு இல்லாமல்தான் இருந்தது. ஆனால், இப்போது ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற அகராதிகளில்கூட இது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆங்கிலத்துக்கு இந்தியர்களின் நன்கொடை!

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x