Published : 03 Jun 2018 10:23 am

Updated : 03 Jun 2018 10:23 am

 

Published : 03 Jun 2018 10:23 AM
Last Updated : 03 Jun 2018 10:23 AM

இல்லம் சங்கீதம் 38: விலகினாலும் இணைந்தே இருப்போம்

38

ஒரு மலரைப் பறிப்பதுபோல்

பறித்தாலும் சரி


ஒரு மிருகத்தை வெல்வதுபோல்

வென்றாலும் சரி

ஒன்றுபோலவே இருக்கிறது

ஒரு அன்பைத் தொடர்வது.

- மனுஷ்யபுத்திரன்

 

இங்கே வேற்றுமைக்கு நடுவிலும் ஒற்றுமையாக இருக்கும் ஆதர்ச தம்பதிகளும் உண்டு; சீர்செய்யவே முடியாத சிக்கல்களால் சட்டப்படி பிரிந்துவாழ்கிறவர்களும் உண்டு. ஆனால், ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் நடைமுறை நிர்பந்தங்களால் திரிசங்கு நிலையில் தடுமாறுபவர்களும் இங்கே கணிசமாக உண்டு.

தங்கள் மணவாழ்க்கை மகிழ்வானது என்று இவர்களால் உறுதியாகச் சொல்லவும் முடியாது; மகிழ்ச்சியில்லை என்று சொல்வதற்கான இறுதி தருணங்களும் வந்திருக்காது. இந்த அரைவேக்காட்டு மணவாழ்க்கையிலேயே அல்லாடிக்கொண்டிருப்பார்கள். ஏற்பாட்டுத் திருமணங்கள் மட்டுமன்றி காதல் திருமணங்களிலும் இப்படி அரைகுறையான மணவாழ்க்கை அமைவதுண்டு. இல்லறம் தடுமாறுவதற்கான காரணங்கள் உடல் சார்ந்து மட்டுமே அமைவதில்லை. ஆத்மார்த்தமான நேசிப்புக்கும் அன்புக்கும் ஏங்கும் மனநெகிழ்வு சார்ந்த சிக்கல்களும் இதில் அடக்கம். இப்படி இணக்கக் குறைவுக்கு ஆளாகும் மணவாழ்வின் முக்கியப் பிரச்சினை, வாழ்க்கைத்துணை தன்னை ஆதிக்க நபராக அடையாளப்படுத்துவதாலேயே நேர்கிறது.

ஆதிக்க இம்சையாளர்கள்

இல்லற வாழ்வில் தான், தனது, தன்னால் மட்டுமே அனைத்தும் ஆகும், தன்னைச் சுற்றியே உலகம் சுழல வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். இல்லறத்தில் இவர்களைப் போன்ற ‘ஹிட்லரை’ இணையாகப் பெற்றவர்கள் எப்போதும் இம்சைக்கு ஆளாவர்கள். இந்த ‘ஹிட்லரி’ல் ஆண் - பெண் இருபாலரும் உண்டு. வாழ்க்கைத் துணையின் விருப்பு வெறுப்பு, தேவை, சிரமங்கள் என எதைப் பற்றியுமே அக்கறையின்றித் தனது தேவையை மட்டுமே முன்னிறுத்தி இந்த ஹிட்லர்கள் மகிழ்வார்கள். சிறு தடுமாற்றங்களையும் இமாலயத் தவறுகளாக இட்டுக்கட்டுவதும் குற்றம்சாட்டுவதுமாக ஒரு வகையான அச்சத்திலும் மன அழுத்தத்திலும் இணையை வைத்திருப்பார்கள்.

தப்பிப் பிழைப்பது எப்படி?

நிதர்சனத்தை உணர்வதும் உள்வாங்குவதும் இதிலிருந்து விடுபடுவதன் முதல்படி. சில பெண்கள் புகட்டப்பட்ட கற்பிதங்களால் கணவனது வல்லாதிக்கத்தை நியாயப்படுத்துவார்கள். கணவனின் அப்படியான செயல்பாட்டை நினைத்துப் பெருமைப்படும் பெண்களும் உண்டு. ஆதிக்கம் செய்பவரின் எதிர்ப்பார்ப்பைப் பொய்யாக்குவது இந்தச் சிக்கலின் அடுத்த நிலை. வழக்கமான எதிர்ப்பாட்டுப் புலம்பல்கள், அழுகை, கவலை ஆகியவற்றைத் தவிர்க்கும்போது, தன் எதிர்பார்ப்பு பொய்யாகும் குழப்பம், எரிச்சல், கோபம் ஆகியவற்றுடன் ஆதிக்கப்பிடி கைநழுவுகிறதோ என்ற பதற்றத்தில் ‘ஹிட்லர்’ தவிப்பார்.

சுயமரியாதை முக்கியம்

சுயமரியாதைக்கும் சுயகவுரவத்துக்கும் இழுக்கு நேரும்போது உங்கள் எல்லைக்கோடுகளை பரிசீலிப்பது நல்லது. காயப்படும் உங்கள் உணர்வுகளைக் கவனியுங்கள். அவற்றுக்கு நிவாரணம் தேடாவிட்டால் பின்னாளில் உங்கள் நிலை மேலும் நிர்கதியாகும். எத்தனை முக்கியமான உறவென்றாலும், உறவின் உன்னதத்துக்கு மதிப்பளிக்காதவரை உதாசீனம் செய்வது எதிராளியை நிலைகுலையச் செய்யும். அதற்கு முன்பாக வாய்ப்பு கிடைக்கும்போது தனது வருத்தத்தையும் சிரமங்களையும் இதமாகச் சொல்வதும் அதிருப்தியை உணர்த்துவதும் முக்கியம்.

அடுத்ததாக உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யக் கட்டாயப்படுத்தும்போது, அதை மறுப்பதன் மூலமும் எதிர்ப்பை உணர்த்தலாம். ஒரேயடியாக எதிர்ப்புக் காட்டுவதைவிட ஒவ்வொரு தருணத்திலும் சில தப்படிகள் பின்வாங்குவதும் மீண்டும் பாய்ச்சல்காட்டுவதும் அவர் தனது தவறுகளை உணரவும் திருந்தவும் அவகாசமளிக்கும்.

நிமிர்ந்து நிற்க வேண்டும்

இந்தப் போராட்டங்களின் இடையே உங்களைப் பராமரிப்பதும் பாதுகாத்துக்கொள்வதும் முக்கியம். இணையைச் சார்ந்திராத வகையில் ஏதேனும் சிலவற்றைக் கற்றுக்கொள்வதும் ஆறுதல்தருவதில் ஐக்கியமாவதும் சுயத்துக்குத் திடம் சேர்க்கும். வாசிப்பு, இசை, புதிய மொழி, கைத்தொழில் இப்படி சுவாரசியமான ஒன்றில் கரைவது மனத்துக்கும் இதம் தரும். சதா உறுத்தும் நெருக்கடிகளில் இருந்து இவை விடுதலை உணர்வைத் தரும். திருப்பியடிக்காமல் தெளிவாகவும் திடமாகவும் நிமிர்ந்து நிற்பதே ‘ஹிட்லரை’த் திக்குமுக்காடச் செய்யும். கோபமானாலும் தாபமானாலும் தன்னைச் சார்ந்தே எல்லாம் நடக்கும் என்ற அவரது எதிர்பார்ப்பு பொய்யாகும்போது தன்னை உணர வாய்ப்பாகவும் அமையும்.

ஆதிக்கவாதிகளை உருவாக்கும் வளர்ப்பு

“ஆண் - பெண் வளர்ப்பு முறையில் பெற்றோர் காட்டும் பாரபட்சமே பின்னாளில் ஆண்களை ஆதிக்கவாதிகளாக மாற்றுகிறது. இப்படி வளர்க்கப்பட்டவரது ஆதிக்கத்தை சமயோசித மனைவியால் எளிதில் தகர்க்க முடியும். ஆனால், சிறுவயதில் பலவகையிலும் பாதிக்கப்பட்டதால் பின்னாளில் தம்மை ஆதிக்கவாதிகளாக காட்டிக்கொள்பவர்கள் மணவாழ்க்கையில் பல வகையிலும் பிரச்சினைக்குரியவர்களாக இருப்பார்கள். இவர்களை வழிப்படுத்த சற்று மெனக்கிட வேண்டும்” என்கிறார் மருத்துவ உளவியல் நிபுணர் டி.ரன்தீப் ராஜ்குமார்.

மீட்கும் பாராட்டு

“பெயரளவில் ஆணாதிக்கமாக முன்வைக்கப்படும் ஆளுமைக் குறைபாடு, இருபாலருக்கும் பொதுவானது. சிறு வயதில் பெற்றோரால் கடுமையாக நடத்தப்படுவது, அநாவசியமாகத் தண்டிக்கப்படுவது, போதிய அன்பு கிடைக்காதது, விவரமற்ற வயதில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவது, பிறரது கேலி, கிண்டல் என வளர்ப்பின் போக்கில் அவர்களின் ஆளுமையின் போக்கு அடிக்கடி பாதிப்படைந்திருக்கும். இந்தக் குறைபாட்டால் எதற்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவது, நிதானம் இழப்பது, பிறர் சங்கடப்படும் வகையில் பேசுவது என முதிர்ச்சியற்று நடந்துகொள்வார்கள்.

இவர்களுக்கு ஆரோக்கியமற்ற ஈகோவும் தாழ்வு மனப்பான்மையும் அதிகமிருக்கும். தன்னைப் பற்றி மிகவும் குறைவான மதிப்பு வைத்திருப்பார்கள். அவை வெளியே தெரிந்துவிடுமோ என்ற பதற்றத்தில் எப்போதும் தன்னை உயர்த்திப் பேசியபடி இருப்பார்கள். அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடமோ குடும்பத்தில் கணவன்/மனைவியிடமோ வெளிப்படுத்தி ஆறுதல் அடைவார்கள்.

இவர்களை எடுத்த எடுப்பில் எதிர்ப்பதைவிட, முதலில் ஏற்றுக்கொள்வதாக காட்டிக்கொண்டு பின்னர் எடுத்துச் சொன்னால் திருந்த வாய்ப்புண்டு. மாறாக எதிர்ப்பு வருமெனத் தெரிந்தால் மேலும் எகிறப் பார்ப்பார்கள். எனவே, அவர்கள் போக்கில் விட்டு அப்படியே ஏற்றுக்கொள்வதும் நிதானமாகக் கையாள்வதும் தீர்வு தரக்கூடும். இவர்களிடம் தென்படும் நேர்மறையானவற்றைக் கண்டறிந்து பாராட்டினால் உற்சாகமாவார்கள். பிறரிடம் இவர்களைப் புகழ்ந்தால் உருகிப்போவார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மீட்டெடுக்கலாம். இவற்றையும் மீறி பிரச்சினை தொடர்ந்தால் குடும்ப ஆலோசகரையோ மனநல ஆலோசகரையோ நாடலாம். ஆற்றுப்படுத்தும் சிகிச்சை முறைகள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சிகள் போன்றவை இவர்களை மீட்க உதவும்” என்கிறார் ரன்தீப் ராஜ்குமார்.

(மெல்லிசை ஒலிக்கும்)


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

ஊட்டி சுடும்! :

இன்றைய செய்தி
x