Published : 29 Apr 2018 11:44 AM
Last Updated : 29 Apr 2018 11:44 AM

கற்பிதம் அல்ல பெருமிதம் 03: குழந்தை உருவம் குமரி உள்ளம்

வீடே ஏகக் களேபரத்தில் இருந்தது. ஒன்பது வயது ஜானகி என்ற ஜானுக்குட்டி நடனப் போட்டியில் கலந்துகொள்கிறாள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்து டி.வி. சேனலில் வாய்ப்பு கிடைக்கும். அப்பா, அம்மா, அத்தை, சித்தப்பா என ஆளாளுக்கு ஜானகிக்கு அறிவுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

ஆடும்போது கவனமா ஆடு, எந்த ‘மூவ்மெண்டையும்’ மறக்காதே.

ஆமா, அந்த வரிக்கு அப்படியே கண்ணைச் சொருகி ஆடணும். கையையும் காலையும் சரியா பயன்படுத்திட்டு, கண்ணை என்ன பண்ணும்ங்கிறதுல கோட்டை விட்டுடாதே.

ஆமா, உனக்குச் சரியான எமோஷன் இருக்கான்னு பார்ப்பாங்க.

ஏங்க கடைக்குப் போகணும் வர்றீங்களா?

என்னம்மா வாங்கணும்?

தொப்புள்ள ஒட்டறதுக்கு ஜிகினாப் பொடி வேணும். கைக்கும் காலுக்கும் மருதாணி போடற மாதிரி சிவப்பு சாயம் விக்கிறாங்களாம். ஏதோ பேர் சொன்னாங்க.

அண்ணி, டிரெஸ் சரியா இருக்கா?

உடனே டிரெஸ் அனைவர் எதிரிலும் போட்டுக் காண்பிக்கப்பட்டது. தொப்புளுக்கு மேலே வரும்படியான சட்டை. முட்டிக்கு மேலே வரும்படியான குட்டைப் பாவாடை. அதைப் போட்டவுடன் சின்ன உருவிலான ஜானகி பெரிய பெண் போலத் தோற்றமளித்தாள்.

வீட்டின் மொத்தப் பரபரப்பில் கலந்துகொள்ளாமல் பிரியா வெளியே கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தாள். அவள் தோழி ஸ்வேதாவுக்குப் பிறந்தநாள். ஸ்வேதாவோட பாய் ஃபிரெண்டு ராம் உட்பட 10 பேர் சினிமாவுக்கும் ஓட்டலுக்கும் போவதாகத் திட்டம். ராமோட ஃபிரெண்ட் ரவியும் வரக்கூடும் என்று ஸ்வேதா சொல்லியிருந்தாள். பிரியா அதனால் கொஞ்சம் திரில்லாக இருந்தாள். ரவியைப் பார்ப்பதும் பேசுவதும் அவளுக்குள் ஒருவித கிளர்ச்சியைத் தந்தன. அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கவனமாக உடையைத் தேர்தெடுத்து அணிந்துகொண்டாள்.

பிரியா நீ ஜானகியோட டான்ஸ் நிகழ்ச்சிக்கு வரலையா?

இல்லேம்மா, நான் ஸ்வேதாகூட வெளியில போறேன். அவளுக்கு இன்னிக்கு பர்த்டே. பிரெண்ட்ஸ் எல்லாம் சினிமாவுக்குப் போயிட்டு, வெளியில சாப்பிடப்போறோம்.

யாரெல்லாம் போறீங்க?

பிரியா கவனமாகப் பெண்களின் பெயர்களை மட்டும் சொன்னாள். முதல் தடவை அம்மா, அப்பா கிட்ட அத்தனை பேரையும் சொன்னபோது வீட்டில் பெரிய ரகளை. ஆம்பள பசங்ககூட வெளியே போகக் கூடாது, அதிகம் பேசக் கூடாது, கண்ணை உறுத்துற மாதிரி டிரெஸ் போடக் கூடாது என ஏகப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அத்தை, பிரியாவின் டிரெஸ்ஸைப் பார்த்து கமெண்ட் அடித்தார்.

எதுக்குப் பிரியா ஸ்லீவ்லெஸ் சுரிதாரைப் போடறே.

அம்மா உஷாரானாள். அடுத்து, தன்னிடம் அண்ணன் கறாராக இருந்த மாதிரி தன் பிள்ளைகளிடம் இல்லை என்று அத்தை ஆரம்பிப்பாள்.

பிரியா, புதுசா வாங்கிய கலம்காரி துப்பட்டாவைப் போட்டுக்கோயேன். இந்த டிரஸ்ஸுக்கு மேட்சாக இருக்கும் என்றாள் அம்மா.

உடைக்காகப் பிடிவாதம் பிடித்தால் வெளியே போவதே தடை படும். அத்தையை முறைத்தபடி வேறு உடை மாற்றப் போனாள் பிரியா.

ஒன்பது வயது குழந்தைக்குக் குட்டைப் பாவாடை போட்டு அழகு பார்க்கிறது குடும்பம். நடு ஹாலில் அனைவரும் உட்கார்ந்துகொண்டு, மோகித்து ஆடுவதற்கும் ஆபாசமான அங்க அசைவுகளைச் சரியானபடி ஆடவும் வகுப்பெடுக்டுகிறது. தொப்புளில் ஜிகினா ஒட்டுவதைப் பற்றி வீட்டு ஆண்களும் பெண்களும் கூடிப் பேசுகிறார்கள்.

இருபது வயதுப் பெண்ணின் உடை பற்றி, யாரோடு போக வேண்டும், போகக் கூடாது என்பது பற்றிக் குடும்பம் கருத்து சொல்கிறது.

ஏனிந்த நகைமுரண்? இந்த முரணைக் குடும்பங்கள் ஏன்

உணரவில்லை?

பெரியவர்களாக்கப்படும் குழந்தைகள்

முன்பெல்லாம் குழந்தைகளுக்கான உடைகள் என்பவை கவுன், அரை டிராயர் என குழந்தைகளுக்கான உடைகளாகவே இருந்தன. பெரியவர்களுக்கான உடைகள் வேறுவிதமாக இருந்தன.

ஆனால், இன்றைக்கு மூன்று வயது குழந்தை பேண்ட், சுரிதார் வேண்டுமென்கிறது. பெரியவர்கள் அரை டிராயர், குட்டைப் பாவாடை அணிகிறார்கள். உணவு, உடை, பாவனைகள், பேச்சு என அனைத்திலும் அறியாத்தனம் போய் குழந்தைகள் ‘சிறிய பெரியவர்களாக’ வளர்க்கப்படுகிறார்கள்.

29chbri_illustrationright

உளவியல் ஆராய்ச்சிகள் குழந்தைகளைப் பெரியவர்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கச் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் அப்படியில்லை. இதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. இன்று உலகம் வரவேற்பறைக்கு வந்துவிட்டது. எல்லாவிதமான தகவல்களையும் பெரியவர்களும் சிறியவர்களும் எதிர்கொள்கிறார்கள். எது சரி, எது தவறு, எது நடைமுறைக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் நல்லது என்பதைவிட டி.வி. பெட்டிக்குள் வரும் உருவங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் காப்பி அடிக்கிறார்கள். ஆனால், மனதளவில் பாரம்பரியத்தின் கூறுகள் ஊறிக் கிடக்கின்றன.

இதில் அனைவரும் சிக்கிக்கொள்கிறார்கள். பெரியவர் களுக்கும் குழப்பம், சிறியவர்களுக்கும் குழப்பம். ஒன்பது வயதில் கிளர்ச்சியான பாடல்களுக்கும் உடல் அசைவுகளுக்கும் உடைகளுக்கும் அறிமுகமாகும்/ அறிமுகப்படுத்தப்படும் குழந்தைகளிடம், வளரிளம் பருவத்தில் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே, இப்படி உடை அணியாதே, உடலைக் காட்டாதே என்று அதிகாரம் செலுத்த முடியுமா?

கெமிஸ்ட்ரி சரியில்லையா?

‘ரியாலிட்டி நிகழ்ச்சி’களில் ‘கெமிஸ்ட்ரி சரியில்லை’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்கிறார்கள். பெரியவர்களும் குழந்தைகளிடம் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ஆடச்சொல்லி ஊக்குவிக்கிறார்கள். பிறகு அந்த ‘கெமிஸ்ட்ரி’ நடனத்தோடு மட்டும் நிற்க வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியுமா?

மனிதர்கள் உடலாலும் மனதாலும் ஆனவர்கள். மனம் பக்குவம் அடைவதற்குள் உடல்ரீதியாகக் குழந்தைகளின் உடைகளில், அங்க அளவுகளில் பெரியவர்களின் உலகத்தைத் திணிப்பது பற்றி நாம் அனைவருமே யோசிக்க வேண்டும்.

உடல் பூஜிக்கப்பட வேண்டியது என்ற பாரம்பரியப் பார்வையில் வருவதல்ல இந்த வாதம். பாலுணர்வு தூண்டுதல் களுக்குச் சிறிய வயதிலேயே குழந்தைகள் ஆட்படுவதுகூட சிறு வயதில் மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று என்கிறார்கள். மனதளவில் முதிர்ச்சி வராதபோது, ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ உடல் சார்ந்த உணர்வுகளை எப்படிக் கையாள முடியும்? காதல், பாலுணர்வு போன்றவை புரியாத மிகச் சிறு வயதிலேயே ஊடக பிம்பங்களால் குழந்தைகள் தாக்கப்படும்போது, அதை எதிர்கொள்ள அவர்களுக்கு யார் கற்றுக்கொடுக்கப் போகிறார்கள்?

கற்றுக்கொடுக்க வேண்டிய பெரியவர்கள், வீடுகளிலும் பள்ளிகளிலும் ஊடகங்களுக்குள்ளும் அமர்ந்தபடி ஜிகினா, கெமிஸ்ட்ரி எனப் பேசும்போது குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதைவிடப் பெரிய கவலை எதையும் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள மறுக்கும் பெரியவர்களைப் பற்றியது.

குழந்தைகளுக்கு அவர்கள் பருவத்துக்கே உரிய செயல்பாடுகளை அறிமுகப்படுத்துங்கள். உட்காரும் பருவம் வருவதற்கு முன்பே தலையணைகளை அடுக்கி அவர்களை உட்காரப் பழக்குவதுபோல் உங்கள் எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் திணிக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பின்விளைவுகளை யோசித்து, காரண காரியங்களை அலசுங்கள். எந்தவிதமான வளர்ப்பு ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பதைப் பற்றியும் யோசியுங்கள்.

(தேடல் தொடரும்) 
கட்டுரையாளர்: எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x