Published : 11 Jun 2018 11:28 AM
Last Updated : 11 Jun 2018 11:28 AM

சுஸுகி - டொயோடா கூட்டுத் தயாரிப்பில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்

20

20-ம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடத் திட்டமிட்டுள்ளது மாருதி சுஸுகி. வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் மாடலாக இது இருக்கும். குஜராத்தில் உள்ள சுஸுகி தொழிற்சாலையில் இந்த கார் தயாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. சுஸுகி, தோஷிபா மற்றும் டென்சோ (டொயோடா குழும நிறுவனம்) போன்றவை இணைந்து இந்த காரை தயாரிக்க இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தைத் தவிர்த்தும் எங்களுக்கு வேறு பல வாய்ப்புகள் உள்ளன, பேட்டரி தொழிற்சாலை குஜராத்தில் இருப்பதால் வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் அங்கு தயாரிக்கப்படும் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாக மாருதி சுஸுகி அதிகாரிகளில் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். மானேசர் அல்லது குருகிராம் தொழிற்சாலையில்கூட இந்தக கார் தயாரிக்கப்படலாம். தற்பொழுது வேகன் ஆர் கார்கள் சுஸுகியின் குருகிராம் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. குஜராத்திலிருந்து பேட்டரி மற்றும் அதுசார்ந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டு குருகிராம் தொழிற்சாலையிலேயே வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்படலாம்.

1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வேகன் ஆர் கார்கள் பரவலான கவனம் பெற்றவை. மேனுவல் மற்றும் ஆட்டோ-கியர் மாடல்களில் கிடைக்கிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான வேகன் ஆர் கார்களை சுஸுகி விற்றுள்ளது. ஐந்து பேர் அமரும் வகையிலானது மற்றும் ஆல்டோவை விட சிறப்பாக பேட்டரியின் எடையைத் தாங்கக்கூடியது என்பதால் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு இது ஒரு சிறந்த தேர்வு என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

பேட்டரி, கண்ட்ரோலர், மோட்டார் போன்றவை வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்படும். மற்ற பாகங்களில் மாற்றம் எதுவும் இருக்காது. இருப்பினும் இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் (எம்எஸ்ஐஎல்) மற்றும் டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

சுஸுகி- டொயோடா கூட்டுறவின் மூலம், வாங்கக்கூடிய விலையில், எதிர்கால தொழில்நுட்பங்கள் நிரம்பிய கார்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்திய சந்தையில் விற்க உள்ள பொருட்களை சேர்ந்து தயாரிப்பது என 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சுஸுகி- டொயோடா நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. பிற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உற்பத்தியகமாக இந்தியாவை உருவாக்கவும் இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

சுஸுகி தயாரிக்கவுள்ள பவர் ட்ரெயின் வகை வாகனங்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் அளிக்க டென்சோ கார்ப்பரேஷன் மற்றும் டொயாடோ நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தனது விற்பனையகங்கள் வழியாக மாருதியின் பலெனோ மற்றும் விட்டாரா பிரீஸா கார்களை விற்க டொயோடா கிர்லோஸ்கர் முடிவு செய்துள்ளது. இதேபோல டொயோடாவின் கொரோலா ஆல்டிஸ் காரை தனது விற்பனையகங்கள் வழியாக மாருதி விற்றுத் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x