

மே
மாத தொடக்கத்தில் இங்கிலாந்து பௌர்ன்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆதிமனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு ராட்சசக் கரடியைத் துரத்திக் கொன்ற தடயத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நியூ மெக்சிகோவில் உள்ள அகன்ற உப்புப் படுகையில் அந்தக் காலடித் தடங்கள் கற்படிவுகளாக உள்ளன. 10 முதல் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏரியின் பக்கவாட்டில் இருந்த பாதையில் பதிவாகியிருக்கும் காலடித் தடங்கள் அவை. ஆதிமனிதர்களின் காலடிகளும் கரடியின் காலடியும் முதலில் நேர்கோட்டில் பயணிக்கின்றன.
ஒருகட்டத்தில் அருகிய இனமான ராட்சசக் கரடியின் பெரிய காலடித் தடங்களின் மேல் மனிதர்களின் தடங்கள் பதிந்து ‘முரட்டுச் சுற்றுகளாக’ மாறுகின்றன. இந்தக் காலடித் தடங்களின் போக்கை வைத்து, ஆதிமனிதர்கள் குழுவாகச் சேர்ந்து அந்தக் கரடியை வழிமாற்றி, துரத்தித் தாக்கி இறுதியில் கொன்றிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் ஆதிகாலத்தில் நடந்த வேட்டை குறித்து ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
ஆதிமனிதர்களிடம் கூட்டமாகச் சேர்ந்து பெரிய விலங்குகளை வேட்டையாடும் பழக்கம் இருந்திருக்குமானால், கம்பளி யானைகள் போன்ற பிரம்மாண்டமான விலங்குகள் இல்லாமல் போனதற்கும் இந்த வேட்டையாடும் பழக்கமே காரணமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வருகின்றனர்.
இப்படியான சூழலில் இந்த வேட்டை நிகழ்வுகளில், சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பேருயிரின் கவனத்தை முதலில் ஈர்த்திருக்க வேண்டும்; பின்னர் மற்றவர்கள் அவற்றுக்கு மரணத் தாக்குதலைத் தொடுத்திருக்க வேண்டும். அப்படியென்றால், தனது கூட்டத்தின் நலனுக்காகச் சில மனிதர்களாவது தன்னலமின்றி தங்கள் உயிரைப் பெரிதாகக் கருதாமல் செயலாற்றியிருக்க வேண்டும்.
விலங்குகளிடம் இருக்கும் பொதுநலத் தன்மை அறிவியலில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டது. தேனீக்களும் எறும்புகளும் தங்களுக்கெனக் குழந்தைகளைப் பெறாமல் பிறரின் குழந்தைகளைப் பராமரிப்பதென்பது ஆவணப்படுத்தப்பட்ட உண்மை. தங்கள் கூட்டத்துக்காகவோ தங்கள் உறவுகளுக்காகவோ இந்தத் தியாகத்தை அவை மேற்கொள்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட எறும்பு, தேனீயின் மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்குப் போவதில்லை. ஆனால், எறும்பு அல்லது தேனீக்களின் குடியிருப்பு வளமாகிறது.
பரிணாம உயிரியலாளர்களால் இந்தப் பொதுநலப் பண்பும் உறவுத் தேர்வும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சமூக உயிரியலின் முன்னோடி விஞ்ஞானிகளில் ஒருவரான டபிள்யு. டி. ஹாமில்டன் (1936-2000) இந்த ஆய்வுகளைச் செய்தவர்களில் முக்கியமானவர். இதுபோன்ற பொதுநலப் பண்பு இயல்புகள் மனிதர்களிடம் உண்டா என்பதைப் பார்த்து, அதை நிரூபிப்பதும் அதற்கு மரபணுவில் ஆதாரம் தேடுவதும் எளிமையானது அல்ல.
ஆனால், போட்டி அடிப்படையிலான தனிமனித வாதம் தொடர்ந்து புனிதப்படுத்துவது குறித்து அறிவியல் என்ன சொல்லப் போகிறது? தூய்மையான தனிமனித வாதம் அறிவியலால் ஆதரிக்கப்படுவதற்குக் காரணம் ‘வலுத்தவன் வாழ்வான்’ என்ற கூற்றைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவா?
தனி மனிதனின் வலுவையும் தாண்டி மனிதர்களுக்கிடையிலான உறவு, உறவுத் தேர்வின் முக்கியத்துவம் ஆகியன குறித்து அறிவியல் ஆய்வுகள் எத்தனையோ நிருபணங்களை வைத்திருக்கின்றன. உறவு என்பது குடும்ப உறவுகளையும் தாண்டியது. மரபணு ரீதியான உறவுகளையும் தாண்டியது.
இந்தப் பின்னணியில்தான் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ராட்சச வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து மனிதர்கள் தங்களைப் பாதுகாக்கக் கூட்டாகச் செயல்பட்டிருக்கும் தடயங்களை அறிவியல் நமக்குச் சொல்கிறது. இன்றும் தனிப்பட்ட முயற்சிகளால் தீர்க்க முடியாத பெரும் சவால்களை, மனிதர்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுநடவடிக்கைகளால் தீர்க்க முடியும்.
© தி இந்து ஆங்கிலம் - தமிழில்: ஷங்கர்