Published : 08 Jun 2018 11:54 am

Updated : 08 Jun 2018 12:47 pm

 

Published : 08 Jun 2018 11:54 AM
Last Updated : 08 Jun 2018 12:47 PM

ராக யாத்திரை 08: முத்துக்களோ ராகம்; தித்திப்பதோ பாடல்!

08

இரட்டை வேடக் கதாப்பாத்திரங்களுக்கு பெருமை செய்தவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன். 1978-ல் வெளிவந்த ‘என்னைப் போல் ஒருவன்’ படத்தில் ஒரு சிவாஜிக்கான அறிமுகப் பாடல்தான் ‘வேலாலே விழிகள்’. உஷா நந்தினியுடன் சிவாஜி படகில் ஆடிப்பாடும் அந்தப் பாடலைப் பாடியவர்கள் டி.எம்.எஸ் – சுசீலா. ‘பட்டுச் சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆட’ என்னும் வாலியின் (கண்ணதாசன் அல்ல) வரிகளுக்குத் துள்ளலான மெட்டை அமைத்திருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்த ராகம் ‘மத்தியமாவதி’. முதல் ஆளாகச் சரியான விடை சொன்ன சேலம் தேவிகா மற்றும் நெல்லை பா. மணிகண்டன் இருவருக்கும் பாராட்டுக்கள்.

தாய் ராகமும் சேய் ராகமும்


அடுத்து நாம் பார்க்கப் போவது மத்தியமாவதியைத்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் ராகங்கள் உருவாகும் விதங்கள் பற்றிப் பார்த்தோம். மறந்துவிட்ட கஜினிகளுக்காக சுருக்கமாக மீண்டும். ரி,க,ம,த மற்றும் நி ஆகிய ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு உண்டு ( உதா :ரி1,ரி2 அல்லது சின்ன ரி பெரிய ரி). இவற்றில் தாய் ராகம் எனப்படுவதில் ஒரு ராகத்தில் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் வரும். இப்படி வித விதமான சேர்க்கைகளால் 72 தாய் ராகங்கள் (மேள கர்த்தா ராகங்கள்) பிறக்கின்றன எனப் பார்த்தோம்.

உதாரணம்: கல்யாணி 65-வது ராகம் - ஸ ரி2 க2 ம2 ப த 2 நி2. கரஹரப்ரியா 22-வது ராகம் - ஸ ரி2 க1 ம1 ப த2 நி1. தாய் ராகத்தில் குறிப்பிட்ட ஸ்வரங்கள் இல்லாமல் வருவது சேய் (ஜன்ய) ராகமாகும். உதாரணம்: சங்கராபரணம் 29-வது தாய் ராகம் - ஸ ரி2 க2 ம1 ப த2 நி2. இதில் ம வும் நி யும் இல்லாமல் பாடினால் அது மோகனம். மோகனத்தின் ஆரோகணம் - ஸ ரி2 க2 ப த2 ஸ். அவுரோகணம் - ஸ் த2 ப க2 ரி2 ஸ. அப்படி மத்தியமாவதியானது மேலே சொன்ன கரஹரப்பிரியாவின் குழந்தையாகும். இதில் க வும் த வும் வராது. ஸ ரி2 ம1 ப நி1 ஸ், ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இந்த ராகம்.

குறிஞ்சிப் பண்ணிலிருந்து…

பழந்தமிழ்ப் பண்களில் ‘குறிஞ்சிப் பண்’ என வழங்கப்படும் இந்த ராகம், மிகவும் மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது. ‘கற்பகமே கருணை கண்பாராய்’ என்ற பாபநாசம் சிவனின் பாடல், மதுரை மணி அவர்களால் பெரிதும் புகழ் பெற்றது. ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்ற பாடலும் பிரபலம். பித்துக்குளி முருகதாஸ் இப்பாடலைப் பாடினால் பித்துப் பிடித்து அலையும் மனம்.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். தங்கத் தட்டில் சாப்பிட்ட அவர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கால் சிறை சென்று நிலைகுலைந்தார். அவரது இறுதிக்காலம் காவிய சோகமாக அமைந்தது. அவரது திரைப்பயணத்தின் இறுதிக் காலத்தில் வெளிவந்த படம் ‘சிவகாமி’(1960). நிலை குலைந்தாலும் குன்றாத மலையான அவரது கணீர்க் குரலில் ஒரு அருமையான மத்தியமாவதி ராகப் பாடல் ‘அற்புத லீலைகளை’ என அப்படத்தில் இருக்கும். ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.

இரவுக்கும் நிலவுக்கும் ஏற்ற ராகம்

‘மஞ்சள் மகிமை’ என்றொரு படம்(1959). ‘ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா’ என்றொரு மனம் மயக்கும் மத்தியமாவதி ராகப் பாடல். கண்டசாலாவும் சுசீலாவும். இசை மாஸ்டர் வேணு. ஒருமுறையேனும் கேட்டுப் பாருங்கள். அதே கண்டசாலா பி.லீலாவுடன் பாடிய இன்னொரு பாடல் மாயாபஜார் (1957) படத்தில் வரும் ‘கண்ணுடன் கலந்திடும் சுபதினமே’. அதே ராகம். இரவுக்கும் நிலவுக்கும் ஏற்ற ராகம் மத்தியமாவதி.

கே.வி. மகாதேவன் மத்தியமாவதியைப் பல ராகமாலிகைப் பாடல்களில் இறுதியாகவும் துக்கடாவாகவும் பயன்படுத்தியிருப்பார். திருமால் பெருமை (1968) திரைப்படத்தில் வரும் ‘திருமால் பெருமைக்கு நிகரேது’ என்ற பாடல் தொடங்குவது இந்த ராகமே. அவர் இந்த ராகத்தை ஜாலியாகப் பயன்படுத்தியிருப்பது ‘வியட்நாம் வீடு’ (1970) படத்தில் இடம்பெற்ற ‘பாலக்காட்டு பக்கத்திலே’ என்ற பாடல். ஆரம்பத்தில் ராகத்தை விட்டு விலகினாலும் ‘ராஜா பத்மநாபன் ராணியைத்தன் நெஞ்சினில் வைத்தார்’ என்னும் இடத்தில் மத்யமாவதியைப் பிடித்து உச்சாணியில் வைத்திருப்பார். அவரே ‘படிக்காத மேதை’யில் (1960) ‘எங்கிருந்தோ வந்தான்’ என இந்த ராகத்தில் சோக ரசத்தைப் பிழிந்திருப்பார். அசரீரிக் குரல் அரசன், சீர்காழியின் குரலில். வாழ்ந்து கெட்ட சோகமும் விசுவாசமுள்ள ஊழியனின் பிரிவும் பாரதியின் வரிகளும் சேர்ந்து கொள்கின்றன.

முத்துக்களோ கண்கள்

கே.வி.மகாதேவன் தனது மேதமையை வெளிக்காட்டியிருக்கும் ஒரு படம் ‘சங்கராபரணம்’ (1980). இசைக்குத் தேசிய விருது வாங்கிய அப்படத்தில் மத்தியமாவதியில் ஒருபாடல். எஸ்.பி.பி பிரமாதப்படுத்திய அந்தப் பாடல் இன்றளவும் இந்த ராகத்தில் ஒரு மைல்கல். அதுதான் ‘சங்கரா நாத சரீரா பரா’ என்னும் பாடல். கம்பீரமும் இனிமையும் கலந்து புல்லரிக்க வைக்கும் பாடல் இது.

தலைப்பிலேயே சொன்னது போல் எம்.எஸ்.வி இந்த ராகத்தில் ‘நெஞ்சிருக்கும் வரை’ (1967) திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த பாடலைக் கொடுத்திருப்பார். ‘முத்துக்களோ கண்கள்’ என்று டி.எம்.எஸ்ஸும். சுசீலாவும் பாடும் இந்தப் பாடலில் தொல்லிசை ராகத்தை மெல்லிசையாகத் தந்திருப்பார். தொடக்கத்தில் வரும் சிதார், வயலின் என எல்லாமே ஒரு இனிய அனுபவத்தைத் தருபவை. அதே போன்றே ‘பிராப்தம்’ (1971) படத்தில் வரும் ‘சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து’ என்ற பாடலிலும் பெரும்பாலும் மத்தியமாவதியேதான் வருகிறது.

தமிழ்த்திரை உலகில் மத்தியமாவதி ராகத்தில் பின்னிப் பெடலெடுத்திருப்பது இசைஞானிதான். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இந்த ராகத்தில் போட்டிருப்பார். சோகம், சந்தோஷம், காதல், தத்துவம் என எல்லாவித உணர்வுகளுக்கும் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். ஆரம்பகட்டத்தில் 1978-ல் வந்த திரைப்படத்தில் ‘தாலாட்டு’ என்றே தொடங்கும் ஒரு தாலாட்டுப் பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். படம்? பாடல்? பாடியோர்?

தொடர்புக்கு:ramsych2@gmail.com

தவறவிடாதீர்!


    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author