Last Updated : 05 Jun, 2018 11:32 AM

 

Published : 05 Jun 2018 11:32 AM
Last Updated : 05 Jun 2018 11:32 AM

பிளஸ் 2-வுக்குப் பிறகு: ஊர் சுற்றப் படிப்போமா!

 

லகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10-ல் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத்துறைத் தொடர்பான சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை, எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.

சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சுற்றுலா படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.

கற்றுக்கொள்ள ஏராளம்

பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட், பி.பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட், பி.காம். டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் எனப் பல பெயர்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கோவை அரசு கலைக் கல்லூரி உட்படப் பல அரசு, தனியார் கல்லூரிகளில் பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் என்ற மூன்று ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் டூ வகுப்பில் எந்த பிரிவில் படித்த மாணவர்களும் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிக்கலாம். தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவனம் மேலாண்மை, உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு , சுற்றுலா தொகுப்பு வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் மேலாண்மை, சுற்றுலா பொருளாதாரம், விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை ஆகியவை சுற்றுலா பாடத்திட்டத்தில் உள்ள மிக முக்கியமான பாடங்கள். இந்தப் பாடப் பிரிவில் கற்றுத்தேர்ந்து சிறந்த அறிவும் ஆங்கில மொழிப் புலமையும் பேச்சுத் திறனும் வளர்த்துக்கொண்டால் சுற்றுலாத் துறையில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

அதுக்கும் மேலே

ஏதாவது ஓர் இளைநிலை பட்டம் பெற்ற பிறகும்கூட, முதுநிலை பட்டமாக சுற்றுலா படிப்புகளைப் படிக்கலாம். MTTM (Master of Tourism & Travel Management), MBA (Tourism), MA (Tourism) எனப் பல பெயர்களில் பல்கலைக்கழகம் சார்ந்து முதுநிலையில் சுற்றுலா படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கல்வி நிறுவனம் (IITTM) குவாலியர், நொய்டா, புவனேஸ்வர், கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் சுற்றுலா சார்ந்த உயர் கல்வியை வழங்குகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுடெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், HNB கர்வால் பல்கலைக்கழகம், ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகம், ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக்கழகங்களில் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை அரசு கலைக் கல்லூரியிலும் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

புத்தகப் படிப்பைத் தாண்டி செயல்வழி கல்விக்காகச் சுற்றுலா சார்ந்த பாடத்திட்டத்தில் இரண்டு மாத நிறுவனப் பணிப்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் படிக்கும்போதே பணிக்குத் தயாராகிவிடுவார்கள்.

வெற்றி நிச்சயம்

சுற்றுலாத் துறையில் உள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கு, அபரிமிதமான மனிதவளம் தேவைப்படுகிறது. முதுநிலை சுற்றுலா பயின்ற மாணவர்கள், இந்தத்துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களால் மேலாண்மைப் பயிற்சியாளராகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

உலகின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களான தாமஸ் குக், காக்ஸ்&கிங்ஸ், TUI பசிபிக் வேர்ல்ட், GOOMO, KUONI SOTC, FCM, MCI ஆகியவை இந்தியாவில் பல நகரங்களில் உள்ள கிளைகளில் பல வேலைவாய்ப்புகளை வழங்குகிறார்கள்.

பயண முகவர் (Travel agency and tour operation companies), சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் (Destination management companies), ஆன்லைன் பயண நிறுவனங்கள் (Online Travel Agents), நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் (Event management companies), விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் சுற்றுலா முடித்த மாணவர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

சுற்றுலாவில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களான IRCTC, ITDC, TTDC ஆகியவற்றில் வாய்ப்புகள் உள்ளன.

மத்திய, மாநிலச் சுற்றுலாத் துறையில் சுற்றுலா அலுவலர்கள், உதவி சுற்றுலா அலுவலர்கள், தகவல் உதவியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன.

புதுமையாக யோசிக்கும் திறன், ஆர்வம், விரல் நுனியில் உலக வரைபடம், உலகச் சுற்றுலாத் தலங்கள் பற்றிய அறிவு, ஆங்கில மொழி புலமை, அதனுடன் வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்றுத் தேர்ந்து இருந்தால் இந்தத்துறையில் பிரகாசிக்கலாம்.

கட்டுரையாளர்: முனைவர் அ. சரவணன், துறைத்தலைவர், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோவை.
தொடர்புக்கு: tourismgac.cbe@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x