Last Updated : 20 May, 2018 09:51 AM

 

Published : 20 May 2018 09:51 AM
Last Updated : 20 May 2018 09:51 AM

இல்லம் சங்கீதம் 36: உறவை வலுவாக்கும் ஊடல்!

இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி

-பிரமிள்

சித்ரா - வினோத் ஜோடி மீது அவர்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தீராத ஆச்சரியம் உண்டு. எப்படி இவர்களால் மட்டும் குடும்பச் சண்டைகளை எளிதாகக் கடந்து, சண்டைக்குப் பிறகும் இயல்பாக இருக்க முடிகிறது என வியந்துபோவார்கள். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் எழுவதுண்டு. ஆனால், அந்தப் பிரச்சினைகள் மூன்றாம் நபருக்குத் தெரியவரும் முன்னரே தங்களுக்குள் தீர்த்துக்கொண்டு சுமுக வாழ்க்கைக்குத் திரும்பி விடுவார்கள். இந்த ஆச்சரிய ஜோடி, திடீரெனத் தங்கள் உறவை முறித்துக்கொள்வதாக நீதிமன்றத்தை அணுகியபோது அனைவரும் அதிர்ந்துபோனார்கள்.

கசப்பும் ருசிக்கும்

அறுசுவைகளில் இனிப்பைப் போலவே கசப்பும் உடலுக்கு மிகவும் அவசியம். அதைப் போலத்தான் இந்தச் சண்டை களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் கண்ணை மூடிக்கொண்டு கசப்பைத் தாண்டிவிடத் துடிக்கிறோம். கசப்பும் இனிப்புக்கு நிகரான ருசி என்பது அதை அர்த்தமுடன் ருசித்தவர்களுக்கே தெரியும். இல்லறத்தில் இனிமையான தருணங்களை எதிர்பார்த்து அனுபவிக்கும் பலரும் கசப்பான தருணங்களை முன்கூட்டியே கணித்து அவற்றிலிருந்து உறவைச் சேதமின்றிக் காப்பாற்றுவதில்லை.

பிரிந்துவிடுவது என சித்ரா-வினோத் ஜோடி முடிவெடுத்தாலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வெற்றிகரமானது. அவர்கள் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்ததற்கு மதிப்பளித்து, பிரிவையும் அதே மரியாதையுடன் அணுகினார்கள். பலருக்கும் உறவைப் பாராட்டுவதில் இருக்கும் கண்ணியம் கசப்பான சம்பவங்களின்போது இருப்பதில்லை. பலரும் சறுக்குவது இங்கேதான். சின்னச் சண்டை வந்தாலும் அது வரையிலான ஆத்மார்த்த வாழ்க்கையைத் தூக்கிப்போட்டு உடைத்துவிடுவார்கள். இது புதிது புதிதாகப் பிரச்சினைகளைக் கிளப்பி, மறக்க வேண்டிய சின்ன சண்டையை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக மாற்றிவிடும்.

இந்தச் சங்கடங்களைத் தவிர்க்க, தம்பதியர் இணக்கமாக இருக்கும்போது தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் அடுத்தவர் சுயத்தைப் பாதிக்கும் வகையில் பேசக் கூடாது, ஒருவர் உணர்ச்சி வசப்பட்டிருக்கும்போது மற்றவர் அமைதியிழக்கக் கூடாது எனப் பேசிவைத்துக்கொள்ளலாம். திருமணமாகி ஓரிரு பிணக்குகள் வந்துசென்றதும் சண்டையின் உள்ளார்ந்த அம்சங்கள் இயல்பாகவே புரிந்துவிடும். அப்போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொள்வது சண்டையை மகிழ்வுடன் கையாள உதவும்.

சாரம் சேர்க்கும் பிணக்குகள்

பிணக்குகள், சண்டைகள், சச்சரவுகள் போன்றவை இல்லாத இல்லறம் சாத்தியமில்லை. அதனால் அவற்றைத் தவிர்க்கவும் அவசியமில்லை. கசப்பை மனதுக்குள் வைத்துக்கொண்டு வெளியே உறவாடு பவர்களைவிட அந்நேரத்துக் கோபமாகவோ ஆற்றாமையாகவோ வெளிப்படுத்துபவர்களின் உறவில் உண்மையும் ஆழமும் அதிகம் இருக்கும். சின்னச் சின்ன சண்டைகளே கணவன் –மனைவி உறவைப் பலப் படுத்தவும் செய்யும் என்கின்றன ஆய்வுகள். அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் ஜோடிகளின் அந்தரங்க உறவு அலுப்புத் தட்டுவதில்லை என்கிறது மற்றோர் ஆய்வு. மணவாழ்வில் செக்குமாடாகச் சிக்கி உழலும் அந்தரங்க உறவு ஒரு கட்டத்தில் அலுத்துப்போவது இயற்கை. அப்படிச் சோபையிழக்கும் உறவில் கணவன் - மனைவி பூசல்களே சுவை சேர்க்கும். இதற்காகவே அனுபவசாலிகள் ஒன்றுமில்லாத சச்சரவுகளை இரண்டொரு நாளோ ஒரு வாரம் வரையோ தொடர்வார்கள். அந்த ஊடலை உடைப்பது நீயா நானா என்றொரு செல்லச் சண்டை தனியாக இன்னொரு தடத்தில் நடைபோடும். ஒருவழியாக இருவரில் ஒருவர் விட்டுக்கொடுப்பதன் மூலமோ நாடக நடவடிக்கைகள் மூலமோ ஊடல் முடிவுக்கு வரும். அந்த ஊடலை உரமாக்கி அவர்கள் மத்தியில் காய்ந்துகிடந்த உறவுப் பயிர் மீண்டும் துளிர்க்கும். அதுவரை அலுத்துப்போயிருந்த முயங்கல் புதுவேகத்தில் சுவாரசிய வடிவெடுக்கும்.

கண்ணியம் காப்போம்

தம்பதியருக்குள் எழுந்து மறையும் சண்டை சச்சரவுகள் நல்லவைதாம். ஆனால், அதற்கும் குறிப்பிட்ட எல்லை உண்டு. சண்டை குறிப்பிட்ட கொதி நிலையை அடையும்போது இருவரில் ஒருவரேனும் சுதாரித்துக்கொள்வது நல்லது. சுயமரியாதைக்கு இழுக்குவராமல் விட்டுக்கொடுப்பதோ தவறை ஒப்புக்கொள்வதோ மன்னிப்பு கேட்பதோ குடிமூழ்கச் செய்யாது. முக்கியமாகச் சண்டையின் எந்தக் கட்டத்திலும் அடுத்தவரின் பலவீனங்களைக் குத்திக்கிளறுவதைத் தவிர்ப்பது உறவின் கண்ணியத்தைக் காப்பாற்றும். அந்தரங்கத் தவறுகள், ஆட்டோகிராப் சமாச்சாரங்கள், பிறந்தவீட்டாரின் பிழைகள் போன்றவற்றைக் கவனமாகத் தவிர்ப்பது, பிற்பாடு இணை மீதான மதிப்பையும் நேசத்தையும் அதிகரிக்கும்.

அணைப்பும் அரவணைப்பும்

சண்டையின் முடிவில் சமரசமாவதும் சமாதானமாவதும் தனி. பொங்கும் பாலில் தண்ணீர் தெளிப்பதுபோல, சண்டைகள் முற்றும்போது அதன் கொதிப்பை அடக்குவது தனி கலை. அவ்வப்போது அரவணைத்துக்கொள்வதும் அணைத்துக்கொள்வதுமான கட்டிப்பிடி வைத்தியங்கள் இதற்கு உதவும். மோகம் வந்தால்தான் இணையை அணைப்பதென்று சிலர் கங்கணம் கட்டியிருப்பார்கள். ஆனால், அவ்வப்போது அணைத்திருப்பதும் அரவணைப்பை உணர்த்துவதும் உறவுக்கு இனிமை சேர்க்கும். புதுச் சேலையோ புது மாடல் கம்மலோ அணிந்து குறுக்கும் நெடுக்குமாகக் கடக்கும் மனைவியை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் செல்போனை நோண்டும் கணவன் பரிதாபத்துக்குரியவன். அதுபோன்ற தருணங்களில் சின்னதொரு பார்வையில் ஆமோதிப்பையோ பாராட்டையோ கடத்திவிட முடியும். வெளியாட்கள் இல்லாத நேரமாக இருந்தால் மென்மையான அணைப்பு போதும் அன்பைச் சொல்ல.

ஆளுமையைப் புரிந்துகொள்வோம்

“கணவன், மனைவி மட்டுமல்ல எந்தவொரு உறவானாலும் அவற்றைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள பரஸ்பரம் ஆளுமையைப் புரிந்துகொள்வது அவசியம். இதன் முதல்படியாகத் தன்னுடைய ஆளுமையை ஒருவர் புரிந்து வைத்திருப்பதும் முக்கியம்” என்கிறார் மனநல மருத்துவர் கே.ராதாகிருஷ்ணன்.

“தனது குறை நிறைகள், திறமைகள், பலவீனங்கள் போன்றவை குறித்து ஒருவர் சரியாக அறிந்துவைத்திருப்பது, பிறரது ஆளுமை குணாதிசயங்களை எடைபோட்டு அணுக உதவும். பெரும்பாலான ஆளுமைத் திறன்கள் பிறவி சார்ந்தவை. மிகச் சிலவே வளர்ப்பு, சூழல் எனப் புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படும். அதேபோல தம்பதியர் இடையிலான குடும்பச் சச்சரவில் மனைவி சிறிய பிரச்சினையாகக் கடந்துசெல்லும் ஒன்றைக் கணவன் பூதாகரமாக உணர நேரிடலாம். அதேபோல கணவன் சிறியதாக உணர்வது மனைவிக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கலாம். இருவரும் தங்களது ஆளுமையோடு அடுத்தவர் ஆளுமையை உணர்வது இந்தத் தடுமாற்றங்களைக் களையும்.

உறவை அதன் நிறைகளால் சிலாகிப்பது் மட்டுமன்றிக் குறைகளுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது ஈகோவால் எழும் உப்புசப்பில்லாத பிரச்சினைகளை ஊதித் தள்ளலாம். அவ்வப்போது மனம்விட்டுப் பேசி ஒருவரையொருவர் புரிந்துகொள்வதை ஆழமாக்கினால் சச்சரவுகள் எதுவானாலும் எழுந்த வேகத்தில் காணாமல் போகும்” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x