

சமீபத்தில் என் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவருடைய இரண்டு குழந்தைகளும் ஆளுக்கோர் உண்டியலை எடுத்துக்கொண்டுவந்து, மகிழ்ச்சியாகக் காட்டினார்கள். இதை வைத்து என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.
“எங்கள் அம்மாவும் அப்பாவும் உறவினர்களும் தரும் பணத்தை எல்லாம் இதில் போட்டு வைத்துவிடுவோம். உண்டியல் நிறைந்தவுடன் திறந்து, பணத்தை எடுத்து எங்களுக்குத் தேவையான நோட்டு, பேனா, பென்சில், பொம்மை, விளையாட்டுப் பொருள் எல்லாம் வாங்கிக்கொள்வோம்.
மீதி இருக்கும் பணத்தில் நோட்டு, பேனா வாங்க முடியாமல் கஷ்டப்படும் எங்கள் நண்பர்களுக்கு வாங்கிக் கொடுப்போம். இந்த உண்டியலில் போடும் பணம் எங்களுக்கானது மட்டுமல்ல, தேவைப்படுகிறவர்களுக்கானது” என்றார்கள் இருவரும்.
எனக்கு ஆச்சரியமாகிவிட்டது.
“பணத்தைச் சேமித்து வைக்கும் பழக்கத்தை உருவாக்குவதற் காகவே குழந்தைகளுக்கு உண்டியல்களை வாங்கிக் கொடுத்தேன். யார் பணம் கொடுத்தாலும் ஏதாவது வாங்க வேண்டுமா என்று இரண்டு பேரும் யோசிப்பார்கள். தேவை இருந்தால் அதற்கான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை உண்டியலில் போட்டு விடுவார்கள். இல்லையென்றால் முழுவதும் உண்டியலுக்குள் சென்றுவிடும்.
ஒரு வருடத்தில் உண்டியலைத் தூக்குவதற்குச் சிரமப்படும் அளவுக்குச் சேர்த்துவிடுவார்கள். அடிக்கடி தூக்கித் தூக்கிப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். சிக்கனமாக இருங்கள் என்று நான் சொன்னதே இல்லை. உண்டியலை வாங்கிக் கொடுத்தவுடன் அவர்களே சிக்கனமாகச் செலவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்களின் தேவையைவிட அதிகமான பணம் இருந்தபோதுதான், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டானது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு உண்டியல் குழந்தைகளுக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டது. அவர்கள் சேமித்த பணத்தில் பொருள்களை வாங்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார் நண்பர்.
நானும் என் சகோதரியும் மண் உண்டியலில் காசு சேர்த்த நாள்கள் நினைவுக்கு வந்தன. எங்களுக்கும் உண்டியல் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்துதான் இருக்கிறது.