Published : 30 Jun 2018 11:17 AM
Last Updated : 30 Jun 2018 11:17 AM

கலைடாஸ்கோப் 08: சக்தியின் கொண்டாட்டம்

‘பிரிலூட்' எனப்படும் பாடலின் தொடக்க இசையிலேயே பல பாடல்கள் சட்டென்று வசீகரித்துவிடும். ‘மாதே - பெண்மையின் கொண்டாட்டம்’ (Maathey - The Celebration of Womanhood) என்ற பெயரில் அமைந்துள்ள பாடலும் இத்தன்மையதே.

அலையோசையின் பின்னணியில் பியானோவின் மென் அதிர்வுகள், வீணையின் தந்தி மீட்டல்களுடன் ஒரு மலரைப் போல் பாடல் முகிழத் தொடங்கும்போதே மனதுக்குள் வந்து அமர்ந்துகொள்கிறது.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் எழுதிய ‘மாதே மலையத்வஜ பாண்ட்ய சம்ஜாதே’ என்ற இந்த கர்னாடக இசைப் பாடல் எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் ஏற்கெனவே பிரசித்தம். மதுரை மீனாட்சியம்மன்மீது பாடப்பட்ட பாடல் இது.

சூப்பர் சிங்கர் மூலம் அறியப்பட்ட நிரஞ்சனா ரமணன், கர்னாடக இசைப் பின்னணி கொண்டவர். சில திரைப்பாடல்களையும் பாடியுள்ள அவர் ‘மாதே’ பாடலுக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளார்.

இலக்கணம் தடையில்லை

பெண்மையின் அழகையும் அமைதியையும் ஒருங்கே கொண்டாடும் வகையில் நடனத்துடன் இணைக்கப்பட்டு இந்தப் பாடல் நவீன வடிவத்தில் பாடப்பட்டுள்ளது. நிரஞ்சனாவே தயாரித்த இந்த வீடியோவைத் தற்கால-செவ்வியல் பேண்ட் ‘ஸ்டாக்டோ’ கடந்த ஆண்டு மகளிர் தினத்தை ஒட்டி வெளியிட்டது.

பாடல் எழுதப்பட்ட மொழி நாம் அறியாதது. ஒரு படைப்பை ரசிக்க மொழியோ இசை அறிவோ அவசியமில்லை. அந்த அளவுக்குப் பாடப்பட்டுள்ள விதமும் பின்னணி இசையும் வசீகரிக்கின்றன.

இலக்கணம் அறிந்தே ஒரு கலையை ரசிக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதற்கு, இந்தப் பாடலில் வரும் பரதமும் ஓர் உதாரணம். பெண்மையின் அழகும் கம்பீரமும் வீரமும் நடன அசைவுகளின் வழியாகக் கடத்தப்பட்டுள்ளன. நடனம் ஆடியுள்ளவர் சென்னையைச் சேர்ந்த சுதர்மா வைத்தியநாதன்.

30CHVANNIRANJANA நிரஞ்சனா ரமணன் ஒத்திசைவு

மேற்கத்திய, இந்திய இசைக் கருவிகளின் அற்புதமான சங்கமமாகத் திகழும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஆர்.ஹெச். விக்ரம். அதிலும் பாடலின் நிறைவைச் சிறப்பாக்கிவிடுகிறது நாகஸ்வரத்தின் நிரவல்.

படமாக்கப்பட்ட கடற்கரை எதுவென்று தெரியவில்லை. அந்தக் கடற்கரையும் பாடலில் ஒரு கதாபாத்திரமாக மாறியிருக்கிறது.

இப்படி இசை, நடனத்தைத் தாண்டி பாடல் எடுக்கப்பட்ட இடம், படமாக்கப்பட்ட விதம், படத்தொகுப்பு எனப் பல அம்சங்கள் ரசவாதம்போல் முயங்கி இந்தப் பாடலை ரசிக்கவைத்துள்ளன.

பெருமித உணர்வு

பாடலின் ஓரிடத்தில் நளினத்துடன் நடனமாடும் சுதர்மாவை நிரஞ்சனா பெருமித உணர்வுடன் பார்ப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருக்கும். பெண்மையின் பெருமித, கொண்டாட்ட உணர்வுக்கு இந்தக் காட்சி ஒரு துளி. இதுபோன்ற காட்சிகள் ஒரு பாடலை மேலும் அழகாக்கி, அர்த்தத்தைக் கூட்டிவிடுகின்றன.

கர்னாடக இசையோ பரதமோ இதுபோன்ற புதிய பரிசோதனைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தும்போது, அந்தக் கலைகளின் எல்லை சந்தேகமின்றி விரிவுகொள்கிறது. நம் மனதில் பதிந்துபோயுள்ள தடைகள் உடைந்து, புதியதொரு அனுபவம் சாத்தியப்படுகிறது.
 

 

நிரஞ்சனா ரமணன், ‘மருது’ படம் மூலம் சினிமாப் பாடகராகவும் ஆகியுள்ளார்.

டி. இமான் இசையில் ‘அக்கா பெத்த ஜக்கா வண்டி’ என்ற பாடலை, இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பாடியுள்ளார். கோரஸ் பாடுவதற்காக நிரஞ்சனா முதலில் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்ப அதிர்ச்சியாக இமான் அவருக்கே இந்தப் பாடலை பாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். தமிழைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு சினிமாவிலும் பாடத் தொடங்கியுள்ளார் நிரஞ்சனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x