

செம்மொழி அந்தஸ்து கொண்ட தமிழ் மொழியின் அடையாளமாக மட்டுமின்றி உலக அளவில் இணையாக வைக்கக் கூடிய செவ்வியல் படைப்புகளாகவும் சங்கக் கவிதைகள் இன்றும் திகழ்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்ட சங்கக் கவிதைகளின் மொழி நுட்பங்களையும் அதற்கு நவீன வாழ்க்கையில் இருக்கும் பொருத்தப்பாட்டையும் உணர்ந்து செய்யப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் அண்மைக் காலம் வரை இல்லை. ‘love stands alone’ என்ற பெயரில் பல ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு 2013-ல் அந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் ம. இலெ. தங்கப்பா மொழிபெயர்த்த போதுதான் தமிழ் சங்கக் கவிதைகளுக்கு உரிய கவனம் கிடைத்தது. அந்தளவில் தங்கப்பாவின் பங்களிப்பு இணையற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் குரும்பலாப்பேரி என்னும் சிறிய கிராமத்தில் 1934-ல் பிறந்த தங்கப்பாவின் தந்தையாரும் மாமாவும் தமிழாசிரியர்கள். ஆறு வயதிலேயே கம்ப ராமாயணத்தை அட்சர சுத்தமாகப் பாடும் திறன் தங்கப்பாவுக்கு இருந்துள்ளது. சிறுவயதிலேயே பாடல்களையும் எழுதத் தொடங்கி விட்டார்.
பாரதிதாசனின் வழிவந்த மரபுக் கவிஞரான ம. இலெ. தங்கப்பா, புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுவதற்காக இடம்பெயர்ந்தார். புதுச்சேரி அரசின் கீழ் வெவ்வேறு கல்லூரிகளில் தமிழ் கற்றுக்கொடுத்த அனுபவம் உண்டு. பல தலைமுறை மாணவர்களுக்கு சங்க இலக்கியத்தையும் கவிதைகளையும் கற்பித்த, அந்த அனுபவமும் கவித்துவ உள்ளுணர்வும் சேர்ந்துதான் ‘லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்’ (பெங்குயின் வெளியீடு) சங்க கவிதை மொழிபெயர்ப்பை அழகாக மாற்றுகிறது என்று வரலாற்றாய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலின் மொழிபெயர்ப்புக்காக 2012-ல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 2010-ம் ஆண்டு குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருதையும் பெற்றவர்.
படிக்கக் கூடிய ஆங்கிலம், மரபு சார்ந்த ஆங்கிலம் என மொழிபெயர்ப்புகளில் இரண்டு பிரிவுகள் நிலவும் நிலையில் தன்னுடைய மொழிபெயர்ப்பு படிக்கக் கூடியது என்று அவரே கூறியுள்ளார். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு முன்னர் பள்ளிகளில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் மொழிபெயர்த்த முத்தொள்ளாயிரம் கவிதைகளும் ‘ரெட் லில்லிஸ் அண்ட் ஃபிரைட்டென்ட் பேர்ட்ஸ்’(Red lillies frightened birds) நூலும் உலகளவில் தமிழின் செம்மொழி அந்தஸ்தை கவிதை வாசகர்களிடம் நிறுவின. வள்ளலாரின் திருவருட்பாவை ‘சாங்ஸ் ஆஃப் கிரேஸ்’ (Songs of Grace) என்ற பெயரில் மொழிபெயர்த்தார் தங்கப்பா. குழந்தை இலக்கியம், இயற்கையியல் ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவர்.
84 வயதில் கடந்த வாரம் மறைந்த ம. இலெ. தங்கப்பா, புதுவையில் வசித்து வந்தார். இவர் எழுதிய “இயற்கை ஆற்றுப்படை எது வாழ்க்கை” போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.