Last Updated : 27 Jun, 2018 09:48 AM

 

Published : 27 Jun 2018 09:48 AM
Last Updated : 27 Jun 2018 09:48 AM

கதை: குதிரைக்கால் சூப்

பசியோடு அலைந்த நரிக்கு ஒரு பெரிய மாமிசத் துண்டு கிடைத்தது. உடனே அதை எடுத்துக்கொண்டு குகைக்கு ஓடிவந்தது. குளித்துவிட்டுச் சாப்பிடலாம் என்று நீரோடைக்குச் சென்றது. எண்ணமெல்லாம் அந்த மாமிசத் துண்டிலேயே இருந்ததால், அவசரமாக ஓடிவந்தது.

குகை வாசலில் ஓநாய் மாமிசத் துண்டோடு நின்றிருந்ததைக் கண்டதும் நரிக்கு ஏமாற்றமாகிவிட்டது.

“என் குகைக்குள் வந்து அனுமதியின்றி இறைச்சியை எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு” என்று கோபமாகக் கூறியது நரி.

ஓநாய் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றது.

“இது மிகவும் மோசமான குணம். என்னிடம் கேட்டிருந்தால், நானே கொடுத்திருப்பேன். எப்போதுமே இரையைப் பிடித்தால் பலருக்கும் கொடுத்துவிட்டே உண்பது என் வழக்கம். இன்று இரை குறைவாகக் கிடைத்ததாலும் எனக்குப் பசி அதிகமாக இருந்ததாலும் நானே சாப்பிட முடிவெடுத்து, குகைக்குக் கொண்டுவந்துவிட்டேன். எவ்வளவு சுயநலமாக நினைத்துவிட்டேன். நல்லவேளை நீ வந்து உணவை எடுத்துக்கொண்டாய். சாப்பிட்டு விட்டுச் செல்” என்றது நரி, தன்னுடைய ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு.

ஓநாயும் மகிழ்ச்சியாக இறைச்சி முழுவதையும் தின்றுவிட்டு, “மிகவும் நன்றி நரி. உன்னைப்போல் ஒருவனை நான் பார்த்ததில்லை” என்று சிரித்தது.

“நல்ல உணவு கிடைத்தால் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன். கண்டிப்பாக வர வேண்டும்” என்று நரி சொன்னதும் ஓநாயின் முகம் மலர்ந்தது.

“அன்பாகக் கூப்பிடும்போது வராமல் இருப்பேனா? நிச்சயம் வருகிறேன்” என்று ஓடிச் சென்றது ஓநாய்.

ஒரு மரத்தடியில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தது நரி.

“நரியே, அப்படி என்ன யோசனை? நான் வந்ததைக் கூட நீ அறியவில்லை” என்று குதிரை சொன்னவுடன் நிமிர்ந்து பார்த்தது நரி.

“உன்னைப் பார்த்தவுடன் ஒரு யோசனை தோன்றுகிறது. இந்தப் பொல்லாத ஓநாய் எல்லோரின் உணவையும் திருடிச் சாப்பிடுகிறான். என்னை விடப் பலம் வாய்ந்தவன் என்பதால் அவனை எதிர்க்க முடியவில்லை. உன் உதவி இருந்தால் அவனுக்கு ஒரு முடிவு கட்டலாம்” என்றது நரி.

“உனக்குச் செய்யாமலா? என்ன உதவி?”

நரி தன் திட்டத்தை விவரித்தது. குதிரையும் அதற்கு ஒப்புக்கொண்டது.

மறுநாள் ஓநாயை அழைத்தது நரி.

“உணவு ஏதாவது கிடைத்துவிட்டதா?”

“ஆமாம். அதற்காகத்தான் உன்னை அழைத்தேன். குதிரையின் காலில் இருந்து மிகச் சுவையான சூப்பைப் பருகிவிட்டு இப்போதுதான் வருகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது நரி.

“என்னது? குதிரையின் காலில் இருந்து சூப்பா? குதிரைக்கால் சூப் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் நீ சொல்லும்போது என்னால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சரி, வா போகலாம். நானும் அந்தக் குதிரைக்கால் சூப்பைப் பருகிப் பார்க்கிறேன்” என்றது ஓநாய்.

இருவரும் பேசிக்கொண்டே குதிரை இருக்கும் இடத்துக்குச் சென்றனர்.

“குதிரையே, நீ கொடுத்த குதிரைக்கால் சூப் பிரமாதம் என்று என் நண்பனிடம் சொன்னேன். அவனுக்கும் அதைப் பருக வேண்டும் என்று ஆர்வம் வந்துவிட்டது. எனக்குக் கொடுத்ததுபோல் என் நண்பன் ஓநாய்க்கும் சூப் கொடுக்க முடியுமா?” என்று கேட்டது நரி.

“எனக்கும் இந்த ஓநாய்க்கும் எப்போதும் ஒத்து வராது. ஆனால் நீ என் நண்பன் என்பதால், இவனுக்கும் சூப் கொடுக்கச் சம்மதிக்கிறேன். இப்போதுதான் சிறுத்தை சூப் சாப்பிட்டுவிட்டுச் சென்றது. சற்று நேரம் காத்திருந்தால் சூடான சூப்பைத் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய மரத்துக்குப் பின்னால் சென்றது குதிரை.

“சுவையான சூப் என்றால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார்” என்று நாவில் நீர் வடியக் காத்திருந்தது ஓநாய்.

மரத்துக்குப் பின்னால் சென்ற குதிரை கால்களை நன்றாக உதறி, உடற்பயிற்சி செய்தது. பிறகு ஓநாய் அருகில் வந்தது.

“என் கால் குளம்பில் உன் வாயை வைத்து உறிஞ்சினால்தான் சூப் கிடைக்கும். நான் சொல்லும்வரை வாயை எடுக்கக் கூடாது. புரிகிறதா?” என்று கேட்டது குதிரை.

”சுவையான சூப் கிடைக்கும் என்றால் என்ன சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே குதிரையின் பின்னங்காலுக்கு அருகில் வந்தது ஓநாய்.

குதிரை காலைத் தூக்கிக் காட்டியது. ஓநாய் வாயை வைத்தது. அடுத்த நொடி நரி தலையாட்ட, குதிரை ஓங்கி ஓர் உதை விட்டது. தொலைவில் போய் விழுந்தது ஓநாய். பல் உடைந்து, வாய் வீங்கிவிட்டது.

“திருடித் தின்ற வாய்க்குத் தக்க தண்டனை. இப்படி ஒரு தண்டனை வழங்குவதில் எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆனால் நீ பலரின் உழைப்பையும் திருடியிருக்கிறாய். எவ்வளவு சொல்லியும் திருந்தாததால்தான் நான் இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டினேன். இனியாவது உழைத்துச் சாப்பிடு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது நரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x