Last Updated : 11 May, 2018 10:19 AM

 

Published : 11 May 2018 10:19 AM
Last Updated : 11 May 2018 10:19 AM

சி(ரி)த்ராலயா 17: கட்டப்பட்டது ஒரு திரை ஆலயம்!

தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்த மாமா மகன் சி.வி.ராஜேந்திரனை உரிமையுடன் ஸ்ரீதர் திட்டப்போய், அதைத் தவறாகப் புரிந்துகொண்டார் ‘தேன்நிலவு’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா. நடந்ததைத் தெரிந்துகொண்டு இசைப்பதிவுக் கூடத்திலிருந்து தெறித்து ஓடி எடிட்டிங் அறையில் விழுந்த ஸ்ரீதருக்கு, அங்கே தேடு தேடு என்று தேடியும் அந்தக் க்ளோஸ் - அப் ஷாட் கிடைக்காததில் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்.

“மற்ற எந்த தொழில்நுட்பக் கலைஞரையும்விட சினிமாவில் பொறுப்பும் மன அழுத்தமும் இயக்குநருக்கே அதிகம் என்பதை ஸ்ரீதரின் அருகிலிருந்து கவனித்து உணர்ந்திருக்கிறேன்” என்று கூறும் கோபு, அதன்பிறகு ‘தேன்நிலவு’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா பற்றிய நினைவுகளில் ஆழ்ந்து போனார்.

அலைமோதியக் கூட்டம்

“அவர் ஒரு மெலடி கிங். ‘கல்யாணப் பரிசு’, ‘விடிவெள்ளி’, ‘தேன் நிலவு’ என்று தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்தவர், எளிமையானவர். உரத்த குரலில் கூடப் பேசமாட்டார். மிகச் சிறந்த இசையமைப்பாளர். தனது முந்தைய மெட்டுக்களையும் இசைக்கோர்ப்பையும் தானே முறியடிக்கவேண்டும் என்று நினைப்பவர்” என்ற கோபு, படக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் மத்தியில் நடந்த இதுபோன்ற நிஜ காமெடி ரணகளங்களைத் தாண்டி, சித்ராலயாவின் முதல் தயாரிப்பான ‘தேன் நிலவு’ சூப் ஹிட் ஆனதை மறக்கமுடியாது என்கிறார். இளைஞர் பட்டாளம் திரையரங்குகளில் அலைமோதியது!

வைஜெயந்திமாலாவின் இளமை, பாடல்களின் இனிமை, குறிப்பாக ‘காலையும் நீயே மாலையும் நீயே’ பாடலில் வைஜெயந்தி நிகழ்த்திக் காட்டிய நடன நுணுக்கங்கள், தங்கவேலு - சரோஜா ஜோடியின் நகைச்சுவை அதகளம், காஷ்மீர் லோக்கேஷன் என எல்லம் சரியான கலவையில் அமைந்துபோனதற்குப் பின்னால் ஒவ்வொரு துறையிலும் வேலையை இழைத்து இழைத்து வாங்கிய இயக்குநரின் திறமைதான் ஒளிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

திரை ஆலயம்!

ஸ்ரீதரின் திரைப் பயணத்திலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் கட்டப்பட்ட ஒரு திரை ஆலயம் என்றே ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை வருணிக்கலாம். தேன் நிலவின் வெற்றிக்குப் பிறகு, ஸ்ரீதர் முன்பே விவாதித்திருந்த ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். கல்யான்குமார், தேவிகா, முத்துராமன், குட்டி பத்மினி ஆகியோரை அந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்தது சித்ராலயா நிறுவனம். அப்போது நடிகர் பாலாஜி ஒட்டடைக் குச்சிபோல் காணப்பட்ட ஓர் இளைஞரை கோபுவிடம் அழைத்து வந்தார். ''இவர் டிராமாவுல நடிச்சிட்டு இருக்கார்.

இவருக்கு உங்கப் படங்களில் கொஞ்சம் வாய்ப்பு கொடேன்.'' என்று அவருக்கு பாலாஜி சிபாரிசு கேட்டார். “கொஞ்சம் வாய்ப்புதான் கொடுக்க முடியும். ஆசாமியே கொஞ்சமாகத்தானே இருக்கார்.'' என்று கோபு பகடியாகச் சொல்ல, அந்த ஒல்லி குச்சி ஆசாமி பெரிய குரலில் சிரிக்க ஆரம்பித்தார். “சார்! நான் பார்க்க கொஞ்சமா இருக்கேனே தவிர, என் பெயர் செம புஷ்டியா இருக்கும். என் பெயர் குண்டு ராவ்.சில படங்களில் கொஞ்சம் கொஞ்சம் தலை காட்டியிருக்கேன்” எனச் சட்டென்று பதில் தந்த அவரை ஏற இறங்கப் பார்த்தார் கோபு. குரல் கணீர் என்று இருந்தது, அந்த நபருக்கு முகத்தில் அம்மை வடுக்கள் சிதறிக் கிடந்தன.

எதிர்பாராத அதிர்ஷ்டம்!

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், ஒரு கிராமத்துச் சாமானியன் வேடம் இருந்தது. கதைப்படி மனோரமா பேஷண்ட். அவரைக் காண மருத்துவமனைக்கு வரும் முறைமாப்பிள்ளை வேடம்தான் அது. அதை அந்த நபருக்குக் கொடுக்க நினைத்தார் கோபு. மருத்துவமனையின் வார்டு பாய் கதாபாத்திரம் நகைச்சுவை நடிகர் ராமராவுக்குத் தரப்பட்டிருந்தது. “இந்த நபரை முறைமாப்பிள்ளை வேடத்துக்குப் போடலாம்” என்று ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார் கோபு. “நீ சொன்னால் சரி!” என்று ஸ்ரீதர் சொல்லிவிட, ஒல்லி குச்சி இளைஞர் அந்த ரோலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மருத்துவமனைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கிய குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்புக்கு ராமராவ் வராததால், அந்த வார்டுபாய் கதாபாத்திரம் அந்த ஒல்லி குச்சி இளைஞருக்கே கிடைத்தது. இப்படி எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெற்ற அந்த ஒல்லி குச்சி இளைஞர் வேறு யாருமல்ல; ‘ஓஹோ புரொடக்ஷன்ஸ் செல்லப்பா’, ‘டாக்டர் திருப்பதி’ போன்ற கோபுவின் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் அவரது வசனங்களுக்கும் உயிர் கொடுத்து, பின்னாளில் ‘நகைச்சுவை சக்கரவர்த்தி’என்று புகழப்பட்ட நாகேஷ்!.

தோழமையின் மற்றொரு உருவம்

எதிர்காலத்தில் தனது வசனங்களுக்கு நாகேஷ் உயிர் கொடுக்கப்போகிறார் என்று ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமாகிவந்த நேரத்தில் கோபு நினைக்கவில்லை. முதல் நாளில் இருந்தே இருவருக்கும் இயல்பாய் அமைந்துவிட்ட நகைச்சுவை உணர்வு, நாகேஷையும் கோபுவையும் நெருங்க வைத்துவிட்டது. முதல் முதலாக நாகேஷ் படப்பிடிப்பு அரங்கினுள் நுழைந்தபோது, “சார் !'' என்று கோபுவை அழைத்தார். மதியம், “கோபு சார்!'' என்று அழைத்தவர், மாலை ''கோபு'' என்று கூப்பிடத் தொடங்கினார். இரவு படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது, ''வரேண்டா...கோபு!'' என்று அழைக்கும் அளவுக்கு நெருங்கி விட்டார்.

தோழமையின் மற்றொரு மறுஉருவமாக நாகேஷ் தெரிந்தார். கோபுவின் நகைச்சுவையை நாகேஷ் பெரிதும் ரசிக்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக கோபுவின் பாடி லாங்குவெஜ் நாகேஷைப் பெரிதும் கவர்ந்து விட்டது. ‘காதலிக்க நேரமில்லை’, ‘வீட்டுக்கு வீடு’ போன்ற படங்களில் கோபுவின் தாக்கம் அவரது நடிப்பில் இருக்கும். கோபுவின் மீது உள்ள நெருக்கம், கடைசி வரையில் தொடர்ந்தது. திருவல்லிக்கேணியில் கோபுவின் வீட்டுக்குச் சென்று, அவரை மெரினா பீச் அழைத்துச் சென்று, மணிக் கணக்காக வம்படித்துக் கொண்டிருப்பார் நாகேஷ்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ தொடங்கி, ‘போலீஸ்காரன் மகள்’, ‘சுமைதாங்கி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று அவர் தொடர்ந்து நடித்துவந்தார். கோபு கூட்டணியில் ‘காதலிக்க நேரமில்லை’, ‘சாந்தி நிலையம்’, ‘ஊட்டி வரை உறவு’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘வீட்டுக்கு வீடு’, ‘கலாட்டாக் கல்யாணம்’, ‘அத்தையா, மாமியா’, ‘நில், கவனி, காதலி’, ‘சுமதி என் சுந்தரி’ என்று பல படங்களில் நடித்திருக்கிறார் நாகேஷ்.

‘நெஞ்சில் ஒரு ஆலய’த்தில் ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸ் பாணியில் அங்க சேஷ்டைகளைச் செய்து நாகேஷ் நடிக்க, ஸ்ரீதருக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் தொடக்கத்தில், ஸ்ரீதரை கண்டு சற்றே பயந்தார் நாகேஷ். “அந்தப் பையன் நான் இருந்தால் நர்வஸ் ஆகிறான். நீ அவனை டைரக்ட் பண்ணிக்கோ'' என்று கூறிவிட்டு ஸ்ரீதர் வெளியே சென்று விட, கோபு சொல்லியபடி நாகேஷ் நடித்துக் கொடுத்து விடுவது வழக்கமானது.

கண்ணதாசனின் கோபம்

‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ பாடல் கம்போசிங்கில் அனைவரும் கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த எம்.எஸ்.விஸ்வநாதன், ' “தலைமுடியால் மலையைக் கட்டி இழுக்கிறமாதிரி இவருடன் போராட வேண்டியிருக்கிறது'' என்று கோபித்துக் கொள்ள, அதை யாரோ கண்ணதாசனிடம் வத்தி வைத்து விட்டார்கள். கண்ணதாசன் ஸ்டுடியோவுக்கு விரைந்து வந்தார் ஒரு கவிஞனுக்கே உரிய கோபத்துடன்...

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x