Published : 11 Jun 2018 11:29 AM
Last Updated : 11 Jun 2018 11:29 AM

அலசல்: தலைவர்கள் இல்லாத வங்கிகள்!

 

மோ

சடிகள், வாராக் கடன்கள், ஊதியப் பிரச்சினைகள் என இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. வாராக் கடன் அதிகமுள்ள சில பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் முடிவில் அரசு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய பொதுத்துறை வங்கிகளை இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுக்க அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளான முதலீட்டுத் தொகையை அதிகரித்தல், பிசிஏ போன்றவை எந்த அளவுக்கு பயன்கொடுத்திருக்கின்றன என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்தத் திட்டங்களின் மூலம் அடையவேண்டிய இலக்கை சென்று சேர, இந்திய பொதுத்துறை வங்கிகளின் போக்கை மாற்ற இப்போது இருப்பதை விடவும் சிறப்பான தலைவர்கள் வங்கிகளுக்கு தேவை. ஆனால் இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகளுக்கு தலைவர்களே இல்லை. மேலும் ஒரு வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி வெறும் பெயரளவில் மட்டுமே தலைவராக இருந்து வருகிறார்.

ஆந்திரா வங்கி, தேனா வங்கி மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கிக்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தலைவர்களே இல்லை. டிசம்பர் 31, 2017 அன்று ஆந்திரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சுரேஷ் பட்டேல், தேனா வங்கியின் தலைவராக இருந்த அஸ்வினி குமார், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த ஜதீந்தர் பிர் சிங் போன்றோரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.

இந்த ஆண்டில் ஆறு மாதங்கள் முடிந்துவிட்ட பிறகும் இந்த வங்கிகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த 3 வங்கித் தலைவர்களின் பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைய இருப்பது அரசுக்கோ, வங்கி வாரியக் குழுவுக்கோ தெரியாத விஷயமல்ல. இருப்பினும் இந்த வங்கிகளுக்கு தலைவர்களை இன்னமும் நியமிக்காமல் இருப்பது முற்றிலும் பொறுப்பற்ற செயலே அன்றி வேறல்ல.

இதுதவிர ஐடிபிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த எம்.கே.ஜெயினை, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக கடந்த வாரம் நியமித்திருக்கிறது அரசு. நாட்டிலேயே மிக அதிக அளவு வாராக் கடனுள்ள ஒரு வங்கியின் தலைவரை வேறொரு பதவிக்கு மாற்றுவதற்கு முன்பு, எப்படி எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அரசால் செயல்பட முடிகிறது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்ற பத்திரிகையில் பெயர் இடம்பெற்றிருப்பதன் மூலம் அலகாபாத் வங்கி தலைமைச் செயல் அதிகாரி உஷா அனந்தசுப்ரமணியனின் அதிகாரம் பறிக்கப்பட்டு பெயரளவில் தலைவராக இருக்கிறார். இந்த வங்கிக்கு புதிய தலைவர் எப்போது நியமிக்கப்படுவார் என்பது மற்ற 4 வங்கிகளைப் போலவே விடை தெரியாத கேள்விதான்.

பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, யூகோ வங்கி, இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கியின் தலைவர்களின் பதவிக் காலம் வரும் மார்ச் மாதத்தில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சிக்கல் இன்னும் அதிகமாக இருக்கிறது. புதிய தலைவர், புதிய உறுப்பினர்களோடு மறு சீரமைக்கப்பட்டுள்ள வங்கி வாரியக் குழுவின் முன்னால் இதனை திறம்படக் கையாளவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x