Last Updated : 05 Jun, 2018 11:33 AM

 

Published : 05 Jun 2018 11:33 AM
Last Updated : 05 Jun 2018 11:33 AM

அக்கினிக்குஞ்சு 05: நிமிர்ந்தெழுங்கள், நடைபோடுங்கள்!

ங்களுடைய கிராமங்களில் சுத்தமான குடிநீர் இல்லையே, குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்கவில்லையே, தினந்தோறும் சமைக்க விறகுக் கட்டைகள் போதவில்லையே…இதற்கெல்லாம் என்ன செய்வதென்றே தெரியவில்லையே... என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருந்திக்கொண்டிருந்தார்கள் ஆப்பிரிக்கப் பெண்கள். கென்ய விவசாயிகளோ, காபி, தேயிலை போன்ற பணப் பயிர்களை விளைவித்ததால் தங்களுடைய நிலங்களின் வளம் குன்றிப்போனதைப் பார்த்து வாடிப்போய் இருந்தார்கள். இத்தனை பிரச்சினைகளுக்கும் வங்காரி மாத்தாய் முன்வைத்த எளிய தீர்வு, “மரம் நடுவோம் வாருங்கள்!”.

சூழல் முன்னோடி

உலக அளவில் சூழலியலுக்கு வளம் சேர்க்க உள்ளூரில் மரம் நடப் பெண்களை உந்தித்தள்ளி அதன் மூலமாகப் பெண்ணுரிமைக்கும் வழிகோலியவர் வங்காரி மாத்தாய். 1977-ல் அவர் தொடங்கிய பசுமைப் பட்டை இயக்கத்தின் மூலமாக இன்றுவரை ஐந்து கோடியே பத்து லட்சம் மரக் கன்றுகள் 20-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் நடப்பட்டிருக்கின்றன.

5CH_Wangari_Maathai

கிழக்கு, மத்திய ஆப்பிரிக்காவின் முதல் பெண் முனைவர் பட்டதாரி (உயிரியல் பாடம்), கென்யாவின் முதல் பெண் பேராசிரியர் உள்ளிட்ட பெருமைகளுக்கு உரியவர். கென்யாவில் மக்களாட்சியை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று அதனால் பல முறை அடித்துத் துன்புறுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்.

‘வளங்குன்றாத வளர்ச்சி, ஜனநாயகம், அமைதி’ ஆகியவற்றுக்குப் பங்களித்ததற்காக 2004-ல் வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசைப் பெற்றுக்கொண்டதன் மூலம் நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற புகழுக்குச் சொந்தக்காரர். சூழலியலாளராக மட்டுமல்லாமல் கல்வியாளராகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் சமூக ஆர்வலராகவும் 2005-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ‘மூன்றாம் ஆண்டு நெல்சன் மண்டேலா’ கருத்தரங்கத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று வங்காரி மாத்தாய் ஆற்றிய உரை, ‘Rise Up and Walk!’. அதன் சுருக்கம் இதோ:

செய்ய வேண்டியது என்ன?

பூமியின் செழிப்பான கண்டங்களில் ஒன்று ஆப்பிரிக்கா. நிறைய சூரிய ஒளி, எண்ணெய், விலையுயர்ந்த கற்கள், காடுகள், நீர், காட்டுயிர், மண், நிலம், வேளாண்மைப் பொருட்கள், அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் என இது ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க ஏன் ஆப்பிரிக்கத் தாயின் குழந்தைகள் வறுமையில் வாடுகிறார்கள்?

தங்களுடைய வளங்களைப் பயன்படுத்திச் செழிப்படையத் தேவையான அறிவோ, திறனோ, கருவியோ பல ஆப்பிரிக்கர்களிடம் இல்லை என்பதுதான் பிரச்சினைக்கான அடிப்படை.

தன் வளத்தால் பலனடைய ஆப்பிரிக்க தேசம் செய்ய வேண்டியது என்ன?

முதலாவதாக, மக்களுக்குச் சில அறநெறிகளைப் போதிக்க வேண்டியுள்ளது என்பதைக் கடந்த முப்பது ஆண்டுகாலப் பசுமை பட்டை இயக்கச் செயல்பாட்டின் மூலமாகப் புரிந்துகொண்டேன். உதாரணத்துக்கு, பொது நலனுக்காகத் தன்னார்வத்தோடு செயல்படுபவர்களை ஊக்கப்படுத்துதல். அதன் மூலமாக மற்றவர்களையும் பொதுச் சேவையை நோக்கி உந்தித்தள்ளுதல். இந்த இலக்கை அடையும்வரை அர்ப்பணிப்போடும் உறுதியான நிலைப்பாட்டோடும் பொறுமை காத்தும் செயல்பட வேண்டும் என்கிற நெறியை மக்களுக்கு ஊட்ட வேண்டும்.

அறியாமையிலும் ஏழ்மையிலும் ஆப்பிரிக்க மக்கள் சிக்குண்டு கிடப்பதால்தான் தங்களுடைய வளங்கள் சுரண்டப்படுவதையும் காடுகள் அழிக்கப்படுவதையும் தடுக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள். மறுபுறம் தங்களுடைய தேசத்தை நேசிக்கும் உணர்வை அவர்களுக்கு ஊட்டவேண்டிய தேவையும் உள்ளது.

இந்த இரண்டு பண்புகளையும் வரிந்துகொண்டவர்களாக ஆப்பிரிக்கத் தலைவர்கள் இருக்க வேண்டியது அத்தியாவசியம். அப்போதுதான் சுயநலமின்றிப் பொது நலனுக்காக அவர்கள் ஆட்சி நடத்தக்கூடியவர்களாக இருப்பார்கள்.

கல்வியில் அறமும் திறனும்

இளைஞர்களை அக்கறையோடு அரவணைக்கும் பண்பையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களோடு மக்களாகக் கலந்து செயல்பட்டபோதுதான் இங்குப் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி மேற்கொண்ட இளைஞர்கள்கூட வேலையின்றி திரிகிறார்கள் என்பது புரிந்தது. அத்தகைய இளைஞர்களின் ஆரோக்கியத்துக்காக அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்விக்கான முதலீடு, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தடுப்பு, சிகிச்சை, பாதுகாப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

wangari-foto-artright

குறிப்பாகக் கல்விக்கு அதிலும் தொழிற்கல்விக்குப் போதுமான முதலீடு செய்யப்படுவதில்லை என்கிற நிதர்சனத்தை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும். அறிவை, திறனை, அனுபவத்தை ஊட்டித் தகுதிவாய்ந்த, தன்னம்பிக்கை நிறைந்த, போட்டிபோடும் ஆற்றல்வாய்ந்த குடிமக்களை உருவாக்க வல்லது தொழிற்கல்வி. இவ்வாறு பயிற்சி பெற்றுத் தயாராகிறவர்களால்தான் புதுத் தொழில் தொடங்கும் சூழலை உருவாக்கி வளங்கொழிக்கச் செய்ய முடியும். இப்படியான தொழிற்கல்வியை முன்னிலைப்படுத்தும் முதலீடுகள்தான் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் வறுமை ஒழிப்பிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றன.

திறன் இன்றி மக்களால் தேச வளத்தில் பெரும் பங்காற்ற முடியாது. அத்தகைய மக்கள் வேலையின்றியோ, தகுதிக்குக் குறைவான வேலையிலோ அல்லாடிக்கொண்டிருப்பார்கள். பணி உத்தரவாதமும் கை நிறைய சம்பளம்தரும் பணியில் சேர அவர்கள் விருப்பப்பட்டாலும் திறன் இல்லாததால் யாரும் அவர்களைப் பணியமர்த்தமாட்டார்களே! இதனால் தங்களுக்குத் தேவையான வீட்டு வசதி, சுகாதாரம், ஊட்டச்சத்து, குடும்ப மற்றும் தனிப்பட்ட தேவைகள் ஆகியவை பூர்த்தியடையாமல் தவிப்பார்கள். வறுமையின் பிடியில் சிக்கிக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

நம்முடைய தலைவிதியையும் பரிதாப நிலையையும் மாற்றுவதற்கான சிறந்த கருவி கல்வி மட்டுமே. பிரச்சினைகளையும் அவற்றின் ஊற்றுக்கண்ணையும் அவற்றுக்கான தீர்வையும் எங்களுடைய பசுமைப் பட்டை இயக்கத்தின் கல்வி கருத்தரங்குகளின் மூலமாகத்தான் கண்டறிந்தோம். சுயக் கண்டுபிடிப்புக்கும் சுய முன்னேற்றத்துக்கும் கல்வியே சிறந்த வழி.

தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளின் வழியாக ஆப்பிரிக்கா பலனடையத் தன்னுடைய மக்களைத் தற்சார்புடையவர்களாக மாற்ற வேண்டும். அதற்குக் கல்வி கைகொடுக்கும்.

அதற்கு அடுத்தபடியாக அமைதியும் பாதுகாப்பும் முக்கியம், வளங்களின் நிலையான மேலாண்மை என்பது அத்தியாவசியம். ஆகையால் என் சக ஆப்பிரிக்கர்களே, ‘நிமிர்ந்தெழுங்கள், நடைபோடுங்கள்!’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x