Published : 20 May 2018 09:52 AM
Last Updated : 20 May 2018 09:52 AM

கற்பிதம் அல்ல பெருமிதம் 06: உயரம் ஒரு பிரச்சினையா?

அம்மா இரண்டு நாட்களாக மரப் பலகையைத் தேடிக்கொண்டிருந்தார். அவரது உயரம் சிறிது குறைவுதான். ஆனால், அதைச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார். சராசரி இந்தியப் பெண்ணின் உயரமான 5 அடியில்தான் இருப்பதாகச் சொல்வார்.

வீட்டில் மற்றவர்கள் ஓரளவு உயரம். கமலாதான் அம்மாவுக்கு அடுத்தபடியாக வீட்டில் உள்ளவர்களில் குள்ளம். ஆனால், அவளும் 5 அடி 4 அங்குலம்.

முகம் பார்க்கும் கண்ணாடியை அவரவர் உயரத்துக்குச் சாய்த்துக்கொள்ளும்படி கயிறு கட்டியாகிவிட்டது. பிரச்சினை சமையலறை மேடையில்தான். கேஸ் அடுப்பு ஸ்டாண்டு, அதற்கு மேல் அடுப்பு, அதற்கு மேல் குக்கர், பெரிய பாத்திரங்கள் வைக்கும்போது அம்மாவுக்குச் சிக்கலாகிவிடும். அதற்காக அரையடி உயரத்தில் ஒரு அகலமான மரப்பலகையை அவர் வைத்திருந்தார். அதைத்தான் காணோம்.

சமைக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் குழப்பம்தான். வீடு முழுவதும் தேடியாகிவிட்டது. அந்த மரப் பலகையைக் காணோம். மாலை அனைவரும் சேர்ந்து மரப் பலகையைத் தேடிக் கண்டுபிடிக்காவிட்டால் நாளை சாப்பாடு கிடையாது என்று அம்மா கறாராகச் சொல்லிவிட்டார்.

இரண்டு நாட்களாக வராத வீட்டுப் பணியாளர் செல்வி வந்தபோது, அம்மா செல்வியிடம் மரப் பலகை பற்றிக் கேட்டார்.

மாடிப்படி வளைவிலிருந்து செல்வி உடனே கொண்டு வந்து கொடுத்துவிட்டார். பெட்ஷீட் காயப்போட கொடியின் உயரம் எட்டாததால், மாடிக்குக் கொண்டுபோய்விட்டு, அங்கேயே மாடிப்படி வளைவில் வைத்துவிட்டதாக செல்வி சொன்னார்.

கம்பியைப் பிடிக்கப் போட்டி

பஸ்ஸில் பயணம் செய்யும்போதெல்லாம் சீதாவுக்கும் இதே பிரச்சினைதான். மேலே உள்ள கம்பி அவளுக்கு எட்டாது. சீட்டுக்கு அருகில் உள்ள கம்பியைப் பிடிக்க அவளும் அவளைப் போல உயரம் குறைந்த சிலரும் போட்டி போடுவார்கள். பெரும்பாலான பஸ்களில் பேலன்ஸுக்குப் பிடிப்பதற்கான வார்ப்பட்டைகள் அதிக அளவில் இருப்பதில்லை. இருந்தாலும், அவற்றைப் பிடிப்பதற்கும் போட்டிதான்.

ஷீலா, அவள் அலுவலகத்தில் டேபிளுக்கு அடியில் ஒரு சின்ன மர ஸ்டூலை வைத்து அதன் மேல்தான் கால்களை வைத்துக்கொள்கிறாள். அந்த மர ஸ்டூல் இல்லையென்றால், நாள் முழுவதும் காலைத் தரையில் ஊன்றாமல் அந்தரத்தில் தொங்கவிட வேண்டும்.

இது யாருடைய பிரச்சினை?

வீடுகளிலும் சரி, வெளியிடங்களிலும் சரி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எத்தனைப் பொருட்கள் பெண்களுக்குத் தோதானவையாக உள்ளன? சமையலறை மேடையை மேஸ்திரி தன் உயரத்துக்குக் கட்டிவிடுகிறார். வீட்டில் கண்ணாடி மாட்டுவது, ஷெல்ப் மாட்டுவது போன்ற வேலைகள் ஆண்களுக்கு உரித்தானதாகக் கருதப்படுகின்றன. அவர்கள் தங்கள் உயரக் கணக்குப்படி ஆணியை அடித்துவிடுகிறார்கள். ரயில்களில் இருக்கக்கூடிய முகம் பார்க்கும் கண்ணாடியைப் பெரும்பாலான பெண்களால் பார்க்க முடிவதில்லை.

கேட்டால் பெண்களது உயரக் குறைவு அவர்களது பிரச்சினை என்கிறார்கள். சராசரி இந்தியப் பெண்ணின் உயரம் 5 அடி. நாற்காலியின் உயரத்தை, ரயிலில் மாட்டப்படும் கண்ணாடியின் உயரத்தை, பேருந்தில் வார்ப்பட்டையின் தொங்கும் நீளத்தை நிர்ணயிக்கும்போது பெண்களின் உயரத்தை ஏன் யாரும் கணக்கில் எடுப்பதில்லை?

காரணம் இவ்வளவு காலம் ஆன பிறகும் பெண்கள் பொதுவெளியில், வீட்டுக்கு அப்பாலும் இயங்குவதைச் சமூகம் கணக்கில் எடுக்கவில்லை. கணக்கில் எடுக்கவில்லையா, அங்கீகரிக்க மறுக்கிறதா?

குழந்தைகள் மேல் உள்ள பரிவோ மார்கெட்டிங் அணுகுமுறையோ தெரியாது. இன்றைக்குக் குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் நாற்காலி, கை கழுவும் இடம் இவற்றைப் பல ஓட்டல்களில் காணமுடிகிறது.

பொது இடங்கள் மட்டுமல்லாமல், வீட்டிலும்கூடப் பிரச்சினை தெரிகிறது. வீடு கட்டும்போது கவனமாக இருக்கும் மேஸ்திரி அந்த வீட்டுப் பெண்மணியின் உயரத்துக்கு ஏற்ற வகையில் மேடை அமைக்கிறார்.

உயரம் எப்படிப் பிரச்சினையோ அதேபோல் குனிந்து பொருட்களை எடுப்பதும் பல பெண்களுக்குப் பிரச்சினைதான். மாதவிடாய், குழந்தைப்பேறு போன்றவற்றை எதிர்கொள்ளும் பெண்களில் பெரும்பாலானோர் முதுகு வலி தொந்தரவால் அவதிப்படுகிறார்கள். முதுகை வளைத்துப் பொருட்களை எடுப்பது வலியை இன்னும் தீவிரப்படுத்தும்.

உயரத்தில் இருந்தாலும் பிரச்சினை, குனிந்து எடுப்பதும் பிரச்சினை; என்னதான் செய்யச் சொல்கிறீர்கள் என்கிறீர்களா? சிந்தியுங்கள், தீர்வு வரும்.

பெண்ணுக்கு எதிரான தொழில்நுட்பம்

நாற்காலி, கண்ணாடியின் உயரம் மட்டுமல்ல பிரச்சினை. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் பெண்களுக்கு ஆதரவாக இல்லை.

மாத்திரைகள், காப்பர்-டி, நார்பிளான்ட், அறுவைசிகிச்சை முறை எனப் பல்வேறு கருத்தடை வழிமுறைகள் பெண்களுக்கு உள்ளன. ஆனால், ஆண்களுக்கு ஆணுறையும் கருத்தடை அறுவைசிகிச்சையும் மட்டும்தான்.

பெண்களுக்கென்று விதவிதமான கருத்தடை முறைகளைக் கண்டுபிடிக்கும் அறிவியல் அறிவு, ஆண்களுக்கு இன்னமும் சில முறைகளைக் கண்டுபிடிக்க ஏன் பயன்படுவதில்லை?

கலாச்சாரம் பெண்களை வீட்டுக்குள் இருப்பவர்களாக மட்டுமே பார்ப்பதுபோல், அறிவியலும் குழந்தையைப் பெற்றெடுப்பதும் பெறாமல் தவிர்ப்பதும் பெண்களின் வேலையாக மட்டுமே பார்க்கிறது.

பாகுபாட்டு அணுகுமுறை

இதேபோல் தொழில்நுட்ப சாதனங்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி சிறு வயதிலிருந்தே உருவாக்கப்படுகிறது. ஆண் குழந்தை கார் பொம்மையை உடைத்தாலோ விளையாட்டுப் பொருட்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டாலோ அவன் பின்னாளில் பெரிய இன்ஜினீயராக வருவான் என்று சொல்வார்கள்.

ஒரு பெண் குழந்தை பொம்மையை உடைத்தால் எதையும் ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியாது என்பார்கள்.

செயல்பாடுகளிலும் இதே பாணிதான் தொடர்கிறது. டிராக்டர் ஓட்டுவதற்கு உடல் பலம் தேவையில்லை. ஆனால், நாற்று நட, கதிர் அறுக்க, கதிர் அடிக்க பெண்களைப் பயன்படுத்தும் சமூகம், ஆண்களால்தான் டிராக்டர் ஓட்ட முடியும் என நினைக்கிறது. கட்டிட வேலையில் சாரத்தில் ஏறுவது போன்ற கடினமான வேலைகளைச் செய்யும் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தால் மேஸ்திரி வேலையைச் செய்ய முடியாதா என்ன?

உண்மையில் தொழில்நுட்பத்தில் பிரச்சினை இல்லை. பெண்களுக்கு அது ஏற்றதல்ல என்ற மனோபாவத்தில்மட்டுமே அது இருக்கிறது. இதைச் சுலபமாகக் களைந்துவிட முடியும்.

நாம் என்ன செய்யலாம்?

வீடுகளில் தொடங்கிப் பொது இடங்கள்வரை பெண்கள் புழங்கும் இடங்களில் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை வடிவமைக்க வேண்டும். உயரத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். கீழே குனிந்து எடுக்கப்பட வேண்டியது குறித்தும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பஸ்களிலும் மின்சார ரயில்களிலும் தொங்கும் வார்ப்பட்டைகள் பெண்கள் பயன்படுத்தும்படியான எண்ணிக்கையிலும் உயரத்திலும் இருக்க வேண்டும்.

வீடுகளில் பெண்கள் அதிகம் புழங்கும் பொருட்களையும் இடங்களையும் பெண்களின் உயரத்துக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்,செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x