Last Updated : 18 Aug, 2014 10:00 AM

 

Published : 18 Aug 2014 10:00 AM
Last Updated : 18 Aug 2014 10:00 AM

ஆங்கிலச் சொற்களின் பல அவதாரங்கள்

​சென்ற வாரத்தில் Affection, Honesty ஆகிய சொற்கள் Nouns என்று குறிப்பிட்டதில் நண்பர் ஒருவருக்குப் பலத்த சந்தேகம்.

அப்படியானால் Love என்பதும் Noun-தானா? ஆமாம் என்றால் I Love You என்பதில் இடம் பெறும் Love Verb-தானே? ஆக Love என்பது Nounஆ? Verbஆ? என அவர் பல கேள்விகளை எழுப்புகிறார்.

சொல்லின் பல அவதாரங்கள்

ஆங்கிலத்தில் பல வார்த்தைகளை விதவிதமாகப் பயன்படுத்த முடியும். Love என்ற ஒரே வார்த்தையை வைத்துக் கொண்டு அது Nounஆ Verbஆ என்று சொல்ல முடியாது. அது பயன்படுத்தப்படும் விதத்தைக் கொண்டுதான் அதைச் சொல்ல முடியும்.

Love Is A Pleasant Feeling என்பதில் Love Noun ஆகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. I Love You அல்லது He Loves Her என்பதில் Love Verbஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கீழே உள்ள வாக்கிய​ங்களில் அடுத்தடுத்து ஒரே வார்த்தை எப்படி Noun ஆகவும் Verb ஆகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

This Is An Act Of Mercy.

Do Not Act Like A Fool.

Write The Address.

You Have To Address The Issue.

Divorce Should Be The Last Step.

I Want To Divorce You.

The Delay Is Not Accepted.

Do Not Delay Sending The Mail.

இப்போது ஒரே வாக்கியத்தில்

ஒரே வா​ர்த்தை Noun, Verb ஆகிய

இரண்டாகவும் பயன்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

Drink The Drink.

Do Not Trick Me With Your Trick.

ஆசிரியரும் மாஸ்டரும்

ஆசிரியருக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஒரு கேள்வி உ​ண்டு. இதற்கான பதில் “A Teacher Trains The Mind. A Station Master Minds The Train” என்பதாகும். இதில் முதல் வாக்கியத்தில் Train என்பது Verbஆகவும், இரண்டாவது வாக்கியத்தில் Train என்பது Noun ஆகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் முதல் வாக்கியத்தில் Mind என்பது Nounஆகவும், இரண்டாவது வாக்கியத்தில் Mind என்பது Verbஆகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Love All என்பது அனைவரையும் நேசி என்ற அழகான வார்த்தை. இதில் Love என்பது Verbஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

டென்னி​ஸ் விளையாட்டில் Love All, Love One என்றெல்லாம் ஸ்கோர்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் உள்ள Love எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது? Nounஆகவா? Verbஆகவா? யோசியுங்கள்.

Pre - Post

​Pre என்றால் முன்னதாக என்ற அர்த்தம். Preplan என்றால் முன்னதாகவே திட்டமிடு என்று பொருள். ​Preview என்றால் மற்றவர்களுக்கு முன்னதாகவே பார்த்தல் என்ற அர்த்தம். Post என்றால் (தபால் என்பதைத் தவிர) பிறகு என்று அர்த்தம். Prepaid Connection, Post Paid Connection ஆகியவை நமக்குத் தெரிந்தவைதானே!

Postpone என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. தள்ளிப் போடுதல் என்று இதற்கு அர்த்தம். ஆனால் சிலர் ​Prepone என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது 18-ம் தேதி நடக்கவிருந்த சந்திப்பை இரு நாட்களுக்கு முன்பாகவே வைத்துக் கொள்ளலாம் (அதாவது 16-ம் தேதியே சந்திக்கலாம்) என மாற்றியமைத்தால் அது Prepone செய்வதாம். இது தப்பு. Prepone என்ற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது.

Check, Cheque

Check என்றால் சரிபார்த்தல் என்று பொருள். Checking Inspector, Ticket Checker என்றெல்லாம் சொல்வது இந்தப் பொருளில்தான்.

Cheque என்பது காசோலை. “செக், கிரடிட் கார்டு ஆகியவற்றைப் பெற முடியாது. ரொக்கம் மட்டும்தான்’’ என்பதில் பயன்படுத்தப்படும் செக், Chequeதான். (இன்னொன்றைக் கவனித் திருக்கிறீர்களா? Q என்ற எழுத்து எங்கே வந்தாலும் அதைத் தொடர்ந்து U என்ற எழுத்து கட்டாயம் வரும்).

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஒரு வழி என்றால் அமெரிக்கர்களுக்குத் தனி வழிதானே? அவர்கள் காசோலையைக்கூட Check என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சினிமா பாடலின் வரி

இன்று Love பற்றி அதிகமாகப் பேசி விட்டதால் நலம் விசாரிக்கும் சில தமிழ்ப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றின் முதல் வரியின் ஆங்கில வடிவம் இவை. எந்தப் பாடல்கள் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்.

1. Are You Well?

2. Are You Well My Dear?

3. Hi Dear, Are You Well?

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x