Last Updated : 22 Aug, 2014 01:19 PM

 

Published : 22 Aug 2014 01:19 PM
Last Updated : 22 Aug 2014 01:19 PM

அஞ்சலி: பால கைலாசம் - புகழ் வெளிச்சத்துக்கு அப்பால்

தமிழகத்தில் சக்திவாய்ந்த ஊடகமாகத் திகழும் தொலைக்காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை விஸ்தரித்தவர் பால கைலாசம். அவரது அகால மரணத்தை முன்னிட்டு அவருடைய பங்களிப்புகளையும் நினைவுகளையும் தொகுப்பது துரதிர்ஷ்டவசமானது. இயக்குநர் பாலச்சந்தரின் மகனான கைலாசத்தின் ஆளுமையில், அவரது பிரபல பின்னணி எந்தத் தாக்கத்தையும் செலுத்தியதில்லை. மிக எளிமையாகத் திரைக்குப் பின்னே மதிப்பு வாய்ந்த பல காரியங்களைச் செய்தவர் அவர். தனது நண்பர்களிடமும், தன்னிடம் வேலை பார்த்தவர்களிடமும் அவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அவரது மரணத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் எழுதப்பட்ட குறிப்புகள் காண்பிக்கின்றன.

எண்பதுகளில் பத்திரிகைத் துறை சார்ந்து பல மாற்றங்களை உருவாக்கக் கனவு கண்ட இளைஞர்கள் சிலர் தொடங்கிய பத்திரிகை ‘திசைகள்’. பின்னாளில் பிரபல எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் உருவான மாலன் இதற்கு ஆசிரியராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த பால கைலாசம், திசைகள் பத்திரிகையில் பகுதிநேர போட்டோ எடிட்டராகப் பணிபுரிந்தார். புகைப்படப் பணியின் மூலம்தான் தனது துறை காட்சி ஊடகம் என்பதைக் கண்டுகொண்டார்.

அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் ஒலிபரப்புப் பிரிவில் பயிற்சி பெற்ற கைலாசம் தனது ஆய்வுப் படமாக ‘தி ட்வைஸ் டிஸ்கிரிமினேடட்’ஐ எடுத்தார். தமிழகத்தில் சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள், கிறிஸ்தவத்திற்குச் சென்ற பின்னும் பாதிக்கப்படுவதைப் பற்றிய படம் இது.

1991-ல் அவர் எடுத்த ‘வாஸ்து மரபு’தான் அவருக்குச் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆவணப்படத் துறை இன்னும் உள்ளடக்கம் மற்றும் சந்தை சார்ந்து வளர்ச்சியடையாத நிலையில் ‘வாஸ்து மரபு’ என்ற இப்படைப்பு தொழில்நுட்பம், உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாடு சார்ந்து, சிறந்த படைப்பாக விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. “மறைந்த சிற்பி கணபதி ஸ்தபதியின் அபாரமான சிற்ப சாஸ்திரம் குறித்த பதிவு இது. கோவில்களையும், நாம் வணங்கும் கடவுள் சிற்பங்களையும் உருவாக்கும் ஒருவனின் மனம் சார்ந்த ரகசியங்களையும் இப்படம் திறக்கிறது. சிற்ப சாஸ்திரம் என்பது கணிதம், கலை, அறிவியல் அனைத்தும் கலக்கும் இடம். கல்லையும், உலோகத்தையும் செதுக்கும் சிற்பியின் மன ஆளுமை மீது கவனம் குவித்த அற்புதப் படைப்பு ‘வாஸ்து மரபு’ ஆவணப்படம்” என்கிறார் பால கைலாசத்தின் நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சொர்ணவேல்.

ஒலி வடிவமைப்புத் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் பால கைலாசம். காட்சியழகு, கதை சொல்லல் ஆகியவற்றோடு பின்னணியில் ஒலிக்கும் சத்தங்களின் யதார்த்தமும் ஒரு படத்துக்கு மிக அவசியம் என்று கருதினார். ஒலியமைப்பின் மீதான அவரது ஈடுபாட்டுக்கு அவரும், ஆவணப்பட இயக்குநர் சசி காந்தும் சேர்ந்து காவிரி நதியை எடுத்த ‘வெளி’ படம் உதாரணம்.

2009-ல் அவர் எடுத்த ‘நீருண்டு நிலமுண்டு’, நீருக்கும் சுற்றுச்சூழல் நலத்துக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் படம். அதிகாரத்துவமும், மக்களின் மீதான அலட்சியமும் கொண்ட அரசு அதிகாரத்துவ அமைப்பிலேயே சில நல்ல அதிகாரிகளின் தொடர்ந்த முயற்சிகளின் மீது கவனம் குவிக்கும் ஆவணப்படம் இது. தனிநபர்களின் மனதில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் அமைப்பில் சிற்சில மாற்றங்களையாவது ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் படைப்பு அது.

அமெரிக்காவில் திரைப்படக் கல்வியை முடித்துவிட்டு வந்தவுடன், சினிமாத் துறை சார்ந்த பெரும் கனவுகளுடன் இறங்கியவர் பால கைலாசம். கி.ராஜநாராயணனின் எழுத்துகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கி.ரா.வின் கதையை திரைப்படமாக இயக்க விரும்பினார். அவருக்காக உருவாக்கப்பட்ட கதைதான் கி.ராஜநாராயணனின் பிரபல நாவலான ‘அந்தமான் நாயக்கர்’.

தமிழ் சினிமாவில் அன்று பெரிய பின்னணி உள்ளவர்கள்கூடக் குறைந்தபட்ச சோதனைகளைச் செய்ய முடியாத காலகட்டத்தில் கைலாசத்தின் சினிமா ஆசை நிறைவேறவில்லை.

தொலைக்காட்சி ஊடகம் மீதான அரசின் பிடி விடுபட்ட நிலையில், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஊடக முயற்சிகள் மெதுவாக உருவாகத் தொடங்கிய காலம் அது. கே. பாலச்சந்தரின் பார்வையாளர்கள் தொலைக்காட்சியின் முன் வந்து அமர்ந்துவிட்ட நாள்கள் அவை.

90-களின் தொடக்கத்தில் உயர்ரக தொழில்நுட்பத்துடன் அவர் மின் பிம்பங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று மெகா சீரியல்கள் எனச் சொல்லப்படும் கதைத்தொடர்கள், நகைச்சுவைத் தொடர்கள், த்ரில்லர்கள், செய்தி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து வடிவங்களும் அவரது சமையலறையில்தான் முழுமை பெற்றன.

ரயில் சினேகம், கையளவு மனசு, மர்ம தேசம், கதையல்ல நிஜம், நையாண்டி தர்பார் என பல வகைகளில் அவர் தயாரித்த படைப்புகள் இன்றும் சிறந்த முன்மாதிரிகளாக உள்ளன.

கி. ராஜநாராயணன் தொடங்கி பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், ம.வே. சிவகுமார், பா. ராகவன் வரை பல எழுத்தாளர்களைத் தனது வேலைகளில் ஈடுபடுத்தியவர் அவர். விரிவான வாசிப்பும், பிறரின் கருத்துகளையும் விமர்சனங்களையும் கூர்ந்து கேட்கும் நிதானமும் உடையவர்.

தான் சம்பந்தப்படாத திரைப்பட முயற்சிகளிலும் தானே முன்வந்து தனது ஒலி வடிவமைப்புத் தொழில்நுட்பம் தொடர்பான அறிவையும், தன்னிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகளையும் பிறருக்கும் பகிர்ந்துகொள்பவராக இருந்துள்ளார்.

பரபரப்பு, வன்முறை சார்ந்த இன்றைய தொலைக்காட்சி ஊடகத் துறையில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமே கவனம் கொள்ளாத ஆரோக்கியமான செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அறிவுபூர்வமான, உண்மைக்கு நெருக்கமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை உருவாக்குவது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. அது பெரிதாக நிறைவேறவில்லை.

சிலருக்கு அவர்களின் பின்னணி அவர்கள் நினைத்ததை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றிக்கொள்ள உதவும். சிலருக்கு அந்தப் பின்னணியும் அந்தஸ்துமே அவர்களது கனவை அடையவிடாமல் தாமதப்படுத்திக்கொண்டிருக்கும். கைலாசத்தைப் பொருத்தவரை மரணம் முந்திவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x