Published : 04 Jun 2018 11:08 AM
Last Updated : 04 Jun 2018 11:08 AM

சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத விலை குறைந்த இண்ட் டீசல்

லைநகர் டெல்லியில் சுற்றுச் சூழல் மாசுபாடு காரணமாக 2,000 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட டீசல் வாகனங்கள் புதிதாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் காற்றின் மாசு அளவு அதிகரித்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. காற்று மாசுபாட்டுக்கான முக்கிய காரணங்களில் வாகன புகையும் பிரதானமாகும்.

டீசல் வாகனங்கள் அதிக அளவில் புகையை வெளியிடுகின்றன என்பது யதார்த்தம். சூழலை பாதிக்காத பயோ டீசலை புணேயைச் சேர்ந்த மை எகோ எனர்ஜி (எம்இஇ) எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

புணே - மும்பை நெடுஞ்சாலையில் இதற்கான விற்பனையகத்தையும் இது அமைத்துள்ளது. இந்நிறுவனம் பயோ டீசல் விற்பனைக்காக அமைக்கும் இரண்டாவது விற்பனையகம் இதுவாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 பயோ டீசல் விற்பனையகங்களை அமைக்கப் போவதாகவும் இதற்காக ரூ. 250 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

தாவர எண்ணெய், வேளாண் கழிவுகள், உணவில் பயன்படுத்த முடியாத எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை மூலம் இந்த பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. இது அனைத்து டீசல் என்ஜின் வாகனங்களுக்கும் ஏற்றது. இந்நிறுவன ஆலை நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பயோ டீசலை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது.

வழக்கமாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலுக்கான தர அளவீட்டின்படி இஎன் 590 தரத்தைக் கொண்டதாக பயோ டீசல் உள்ளது. இதனால் டீசல் என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யத் தேவையில்லை என்று எம்இஇ நிறுவனத்தின் இணை நிறுவனர் சந்தோஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

இண்ட் டீசல் விலை தற்போதைக்கு லிட்டர் ரூ.64க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவதால் ஜிஎஸ்டி-யில் பதிவுபெற்ற சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் இண்ட் டீசலை பயன்படுத்தினால் லிட்டருக்கு ரூ. 8 வரை சலுகை பெறலாம்.

இது தற்போதைக்கு அல்ட்ரா டீசல் விலைக்கு நிகராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஒரு விற்பனையகம் அமைக்க 18 மாதம் முதல் 24 மாதம் வரையாகிறது. இதனால் விற்பனையகங்களை பெருமளவில் அமைக்க முடியவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 80 லட்சம் வாடிக்கையாளர்களை எட்டிவிடுவோம் என இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

இண்ட் டீசலை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறையும். ஏனெனில் இதில் வழக்கமான டீசலில் உள்ளதைப் போன்ற கந்தக அளவு கிடையாது. இது அதிக அளவில் புழக்கத்துக்கு வரும்போது நாட்டின் இறக்குமதியும் கணிசமாகக் குறையும்.

இண்ட் டீசல் பெருமளவு விற்பனைக்கு வந்தால் சூழல் காப்பதோடு, டீசலுக்கான செலவும் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x