Published : 07 May 2018 11:33 AM
Last Updated : 07 May 2018 11:33 AM

விரைவில் வருகிறது 2-ம் தலைமுறை ஹோண்டா அமேஸ்

கா

ர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புகழ்பெற்ற ஹோண்டா அமேஸ் மாடல் காரின் இரண்டாம் தலைமுறை காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பல்வேறு புதிய மாற்றங்களுடன், சிறப்பம்சங்கள் பல சேர்க்கப்பட்ட இந்த மாடல் காரை தயாரிக்கும் பணிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுகரா ஆலையில் தொடங்கியுள்ளன.

இப்புதிய மேம்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸ் இரண்டாம் தலைமுறை காரை இம்மாதம் 16-ம் தேதி அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார். அறிமுக சலுகையாக முதலில் முன் பதிவு செய்பவர்களில் 20 ஆயிரம் பேருக்கு சிறப்பு விலை தள்ளுபடி அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா அமேஸின் முதல் தலைமுறை கார் 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆரம்ப நிலை செடான் கார் பிரிவில் இது பலரின் விருப்ப தேர்வாக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹோண்டா அமேஸ் இடம்பெற்றிருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மாடலின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலைக் காட்டிலும் வடிவமைப்பு, உள்புற அலங்கார அம்சங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா சிட்டி காரின் சிறிய வடிவமாக இது தோற்றமளிக்கும். உறுதியான தோற்றத்தை அளிக்கக்கூடிய முன்புற பானட், டியூயல் டோன் டாஷ்போர்டு உள்ளிட்டவை இதன் சிறம்பம்சமாகும். பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் என்ஜினும் டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் சிக்கனமானது. பெட்ரோல் மாடல் சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 19.5 கி.மீ. ஓடியது இதன் சிறப்பம்சமாகும். டீசல் மாடல் லிட்டருக்கு 27.4 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.

மாருதி சுஸுகி டிஸயர், ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா டிகோர், ஃபோக்ஸ்வேகன் ஆமியோ போன்ற கார்களுக்கு இது போட்டியாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரிவில் மாருதி சுஸுகி டிஸயர் 60 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. மற்ற பிராண்டுகள் எஞ்சியுள்ள 40 சதவீத சந்தையைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x